அபுதாபிக்கான இலத்திரனியல் தடையை முற்றாக நீக்கியது அமெரிக்கா | தினகரன்

அபுதாபிக்கான இலத்திரனியல் தடையை முற்றாக நீக்கியது அமெரிக்கா

 

அபுதாபி விமான நிலையத்திலுள்ள, ஐக்கிய அமெரிக்காவின் முன்பரிசோதனை நிலையத்தின் சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் வெற்றிகரமான முறையில் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் உள்ளகப் பாதுகாப்பு திணைக்களம் அபுதாபியிலிருந்து அமெரிக்கா செல்லும் விமானங்களில் இலத்திரனியல் உபகரணங்களின் பயன்பாட்டுக்கு இருந்து வந்த தடைகளை நீக்கியுள்ளது.

இதுபற்றி எத்திஹாட் எயார்வேஸ் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர்  கருத்து வெளியிடுகையில், “உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், இந்தப் புதிய தடை நீக்கம் மூலம் அமெரிக்கா செல்லும் பயணிகள் லெப்டொப் கணனிகள், டெப்டல் மற்றும் ஏனைய இலத்திரனியல் உபகரணங்களை விமானத்தில் எடுத்துச் செல்ல முடியும். இது, அதியுயர் பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு விளைவாகும். இந்தத் தடை நிலவிய காலப்பகுதியில், தொடர்ச்சியாக எம்மோடு இணைந்திருந்த எமது வாடிக்கையாளர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்” என்று கூறினார்.

மத்திய கிழக்கின் வேறு எங்கும் கிடைக்காத வசதிகளை, அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் மூன்றாவது அரங்கில், அமெரிக்காவின் முன்பரிசோதனை நிலையம் கொண்டுள்ளது. அமெரிக்கா செல்லும் எத்திஹாட் எயார்வேஸ் பயணிகள் அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்கப் பரிசோதனைத் தேவைப்பாடுகளை இங்கு பூர்த்தி செய்துகொள்ள முடியும். பயணிகள் அமெரிக்காவில் தரையிறங்கும் போது உள்நாட்டுப் பயணிகள் போன்று தரையிறங்கி எந்தவித குடிவரவு அல்லது சுங்கப் பரிசோதனைகளையும் மேற்கொள்ளாது வரிசையில் நிற்க வேண்டிய அவசியமின்றி சுதந்திரமான முறையில் பிரவேசிக்க முடியும்.

போக்குவரத்துப் பாதுகாப்பு நிர்வாகத்தினால் ஏற்படுத்தப்பட்ட, உயர் தரம் வாய்ந்த பாதுகாப்புத் தேவைப்பாடுகள் காரணமாக, 280 விமான நிலையங்களில் 180 விமானப் பயண சேவை வழங்குனர்களை பாதித்த இந்த ஏற்பாட்டை முன்பரிசோதனை நிலையம் மூலம் முதன் முதலில் குறுகிய காலப்பகுதியில் பூர்த்தி செய்த விமான சேவை வழங்குநராக எத்திஹாட் எயார்வேஸ் நிறுவனத்தைக் குறிப்பிட முடியும்.

ஏதிஹாட் எயார்வேஸ் நிறுவனம், தற்போதைய நிலையில் அபுதாபியில் இருந்து 06 ஐக்கிய அமெரிக்க நகரங்களுக்கு வாரத்தில் 45 விமானப் பயணங்களை மேற்கொண்டு வருகிறது. அவையாவன - நியூயோக்கிற்கு தினமும் இருமுறை, வாஷிங்டன், சிக்காகோ, டலஸ் மற்றும் லொஸ்ஏஞ்ஜலிஸ் நாளாந்தம் ஒரு முறை, சென்பிரான்சிஸ்கோவுக்கு வாரத்தில் மூன்று முறையாகும்.

ஐக்கிய அமெரிக்கா எத்திஹாட் எயார்வேஸ் நிறுவனத்தின் முக்கிய சந்தைகளில் ஒன்றாகும். 2017 ஜனவரி 01 முதல் ஏப்ரல் 30 வரை அபுதாபியில் இருந்து அமெரிக்காவுக்கு 203,515 பயணிகள் பிரயாணம் செய்துள்ளனர். இதேகாலப்பகுதியை 2016 ஆம் ஆண்டுடடன் ஒப்பிடுகையில் 13,157 பயணிகளால் இது அதிகரித்துள்ளதாக எத்திஹாட் அறிவித்துள்ளது.

எதிஹாட் ஏவியேஷன் குரூப் (EAG) ஐந்து வர்த்தகப் பிரிவுகளைக் கொண்ட பல்தேசிய பல்நோக்கு வர்த்தகக் குழும நிறுவனமாகும். ஐக்கிய அரபு இராச்சியத்தின் தேசிய விமான சேவையான ஏதிஹாட் எயார்வேஸ், எதிஹாட் எயார்வேஸ் எஞ்ஜினியரிங்க், எதிஹாட் எயார்போட் சேர்விசஸ், ஹலாகுரூப் அன்ட் எயார்லைன் ஈக்குவிற்றி பாட்னர்ஸ் ஆகியன இதன் அங்கத்துவ நிறுவனங்களாகும். இது தவிர, மேலும் 07 விமான சேவை நிறுவனங்களில் குழுமத்திற்கு சிறிய அளவிலான முதலீடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை எயார்பேர்ளின், எயார் சேர்பியா, எயர் சீசல்ஸ், அலிடாலியா, ஜெட் எயார்வேஸ், வேர்ஜின் ஒஸ்ரேலியா மற்றும் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த டாவின் எயார்லைன் ஆகியன எதிஹாட்டின் வலையப் பங்காளிகளாக காணப்படுகின்றன.

அபுதாபி மத்திய நிலையத்திலிருந்து 110 பயணிகளுடன் பொருட்களைக் கொண்டு செல்லும் விமான நிலையங்களை மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, ஐரோப்பா, ஆசியா, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய பிராந்தியங்களில் காணப்படும் பயண முடிவுகளுக்கும் பயணங்களைத் தொடர்கிறது. இந்த விமான சேவை நிறுவனத்திடம் 120 க்கும் மேற்பட்ட எயார்பஸ்களும், போயிங் விமானங்களும் உள்ளன. 204 விமானங்கள் தயார் நிலையிலும் அவற்றில் 71 போயிங் 787, 25 போயிங் 777Xs, 62  எயார்பஸ் A350 மற்றும் 10 எயார்பஸ் A380 ஆகியனவும் அடங்கும். 

 


Add new comment

Or log in with...