குழந்தை போன்று எளிமையாக வாழ்ந்த இசைமேதை பாலமுரளி | தினகரன்

குழந்தை போன்று எளிமையாக வாழ்ந்த இசைமேதை பாலமுரளி

பாலமுரளி கிருஷ்ணா!

இந்தப் பெயரை உச்சரிக்கும் போதே நமக்குள் ஓர் இசைக் கடலின் அலைகளை உணர முடியும். புதுப்புது ராகங்களால் இசை மகளை அலங்கரித்தவர். தான் வாழ்ந்த காலம் வரை இசை உலகத்துக்கு இனிமையை அள்ளிக் கொடுத்தவர்.

அவரது ஆன்மா காற்றில் கலந்து சில மாதங்களே கடந்த நிலையில்,இன்று 6ம் திகதி அவரது பிறந்தநாள் ஆகும். அவரது சிஷ்யையான எஸ்.ஜே.ஜனனி இசையில்தான், தனது கடைசிப் பாடலைப் பாடினார் பாலமுரளி கிருஷ்ணா. குருவுடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார் எஸ்.ஜே.ஜனனி....

‘‘பாலமுரளி கிருஷ்ணா சார் ஒரு லெஜண்ட். அவர் பேரைச் சொல்லும் போதே மனசுக்குள்ளே மரியாதையும் பயமும் படரும். ஒரே பிறவியில் இந்தளவுக்கு ஒரு விஷயத்தைக் கொடுத்திருக்கிறது பிரமிப்பானது. பல ஜென்மங்கள் எடுத்தாலும் நம்மால் முடியுமான்னு தெரியலை. அந்தளவுக்கு இசையில் புதுப்புது விஷயங்கள் பண்ணிட்டார்.

தன் பதினாறாவது வயதிலேயே இதையெல்லாம் சாத்தியப்படுத்தியவரை கடவுளின் சொரூபமாகப் பார்க்கிறேன். அவர் குருவாக அமைந்ததை இப்பவுமே கனவு மாதிரி நினைக்கிறேன். 'நான் உனக்குக் கத்துக்கொடுக்கறேன்'னு சொன்ன வார்த்தைகள் இன்னும் என் மனசுக்குள்ளே ஒலிச்சுட்டே இருக்கு.

பத்து வருஷத்துக்கு முன்னாடி ஒரு குட்டிப் பொண்ணா அவர்கிட்டே சேர்ந்தேன். அதை கடவுளோட ஆசீர்வாதமா உணர்றேன். அவர் கிளாஸ் எடுக்கும் போது ஒரு லைன் அவர் பாடிக்காட்டினா அதே மாதிரியே நான் பாடிடுவேன். கேட்டுட்டு ரொம்ப சந்தோஷப்படுவார். 'நீ பெரிய ஆளா வருவம்மா'னு சொல்லிட்டே இருப்பார். அவர் கொடுத்த ஊக்கம்தான் புதுப்புது முயற்சிகளில் இறங்கும் தன்னம்பிக்கையை எனக்குக் கொடுத்திட்டிருக்கு'' என்கிறவரின் சிலிர்ப்பு தொடர்கிறது.

''ஆன் தி ஸ்பாட்ல அவர் பண்ணின கம்போசிசன் பற்றி சொல்வார். வழக்கமான விஷயத்தை அவர் செய்யவே மாட்டார். இசையைக் கத்துக் கொடுக்கிறதுலேயும் சரி, இசைக்குப் புதுசா ஒண்ணை படைக்கிறதுலேயும் சரி... சார் ரொம்ப ஆர்வமா இருப்பார். அவர் சொல்ற விஷயங்கள் எல்லாம் ரொம்ப ஆச்சர்யமா இருக்கும். நாம இன்னும் எவ்வளவோ கத்துக்க வேண்டியிருக்கு என்கிற நிலையை உணர வைக்கும். புதுப்புது ராகங்களை எப்படி உருவாக்கினார் என்பதைப் பகிர்ந்து கொண்டார். 72 மேள கர்த்தா ராகங்களைத் தன்னுடைய பதினாறு வயதில் உருவாக்கினதா சொல்வார். தாளத்திலும் பல புது விஷயங்களைக் கொண்டு வந்தவர். அவர் இசையின் இமயம். அண்ணாந்துப் பார்த்து ஆச்சர்யப்படத்தான் முடியும்.

'பிரபா' என்கிற தமிழ்ப் படத்துக்கு நான் இசையமைப்பாளரானதும் ரொம்ப சந்தோஷப்பட்டார். அதில் அவரைப் பாட வைக்க ஆசைப்பட்டு கேட்டதும், ஒரு குழந்தை மாதிரி ஆர்வமாகிட்டார். டிராக் கேட்டு மனப்பாடம் பண்ணிட்டார். அப்போ அவருக்கு வயசு 85. இசையைக் கத்துக்கிறதில் குறையாத ஆர்வம் கொண்டவர். அந்த நேரம் என்னை சிஷ்யைனு பார்க்காமல், ஓர் இசையமைப்பாளரா மரியாதையோடு அங்கீகரிச்சார். அந்தப் படத்துக்காக அவர் பாடின ‘பூவே பேசும் பூவே’ பாடல், எனக்குக் கடவுள் கொடுத்த ஆசீர்வாதமா நினைக்கிறேன். அதுதான் அவரோட கடைசித் திரைப்பாடல்.

இசையில் மேதையாக இருந்தாலும், எந்தக் காலத்திலும் அதை வார்த்தையாலோ, நடத்தையாலோ, செய்கையாலோ காட்டிக்கவே மாட்டார். ஒரு குழந்தை மாதிரி எல்லோரிடமும் பழகுவார். இன்னும் கத்துக்கணும்னு சொல்லிட்டே இருப்பார். இசை ஆர்வலர்களுக்குப் பெரிய நம்பிக்கையா இருப்பார்.

கடற்கரையில் நடைபயில ரொம்ப ஆசைப்படுவார். அவரை அடிக்கடி கடற்கரைக்குக் கூட்டிட்டுப் போயிருக்கோம். அதுக்காக, காரில் போகும்போதெல்லாம், 'பூவே பேசும் பூவே’ பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்பார். தான் பாடினது சரிதானான்னு செக் பண்ணிப்பார்.

சின்னச் சின்ன ஆசைகளுக்குச் சொந்தக்காரர். அவரது பிறந்தநாளில் அவருக்காக ஒரு 'ஜிங்கிள்ஸ்' பண்ணும் முயற்சியில் இருக்கேன். அதுக்கான வேலைகள் நடந்துட்டிருக்கு. நான் படிச்ச ​ேசர்ச் பார்க் ஸ்கூலுக்காக தமிழ், ஆங்கிலம்னு ரெண்டு மொழியிலும் ரெண்டு பாடல்கள் பண்ணிக் கொடுத்திருக்கேன். உலக அமைதிக்காக ஒரு புராஜெக்ட். நிறைய பக்தி ஆல்பம் பண்ணியிருக்கேன்.

இன்னிக்கு இருக்கிற டிரெண்ட், சோஷியல் மீடியா வாய்ப்புகளைப் பயன்படுத்தி, புதுப்புது விஷயங்களை செஞ்சிட்டிருக்கேன். எல்லாமே என் குரு கொடுத்த அருள். அவரோட சிஷ்யையா இருந்தது என் வாழ்நாள் வரம். இதுக்கு மேலே சொல்லத் தெரியலை'' என வார்த்தைகளின்றி நெகிழ்கிறார் எஸ்.ஜே. ஜனனி.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...