இந்தியப் பிரதமரின் வருகைக்காக 70 வருடங்கள் காத்திருந்த இஸ்ரேல் | தினகரன்

இந்தியப் பிரதமரின் வருகைக்காக 70 வருடங்கள் காத்திருந்த இஸ்ரேல்

அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி ரியுவென் ரிவ்லின் கட்டித்தழுவி வரவேற்ற சம்பவம் அங்குள்ள மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்றுநாள் அரசுமுறை பயணமாக நேற்றுமுன்தினம் மாலை இஸ்ரேல் நாட்டின் தலைநகரான ஜெருசலேம் சென்றடைந்தார்.

வழக்கமான மரபுகளை மீறிய வகையில் ஜெருசலேம் நகரில் உள்ள பென் குரியான் விமான நிலையத்துக்கு நேரில் சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இரு கரங்களை கூப்பியவாறு ‘தங்களது வரவு நல்வரவாகுக...’ என்று இந்தி மொழியில் கூறி மோடியை அன்புடன் வரவேற்றார்.

"இந்தியா_-இஸ்ரேல் இடையிலான நட்புறவுக்கு வானத்தைக் கூட எல்லையாக வைத்து அளவீடு செய்ய முடியாது" என குறிப்பிட்ட பெஞ்சமின் நேதன்யாகு, உலகின் மிகப் பெரிய தலைவராக விளங்கும் மோடியுடன் இணைந்து நாம் இன்னும் அதிகம் சாதிக்கலாம் என்றும் மகிழ்ச்சியுடன் கூறினார்.

அவரது வரவேற்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, ‘இந்த பயணம் வரலாற்று சிறப்பு மிக்கதாக அமையும். இஸ்ரேலுடன் வலிமையான அசைக்க முடியாத நட்புறவை ஏற்படுத்துவதே எனது வருகையின் முக்கிய நோக்கம்’ என்று தெரிவித்தார்.

தீவிரவாதம் உள்ளிட்ட உலகின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக நேதன்யாகுவுடன் விரிவான ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், "எனது நண்பர் நேதன்யாகுவுடன் இணைந்து இஸ்ரேல்_ - இந்தியா இடையிலான நட்புறவுகளை எந்தெந்த துறைகளில் பலப்படுத்துவது என்பது தொடர்பாக விவாதிப்போம்" என்றும் மோடி குறிப்பிட்டார்.

நேதன்யாகுவுடன் சிவப்பு கம்பள விரிப்பின் மீது நடந்து சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் முப்படைத் தளபதிகள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்டார். இந்த பயணத்தின் போது, மும்பை குண்டு வெடிப்புத் தாக்குதலில் இருந்து தப்பி உயிர் பிழைத்த சிறுவன் மோஷேவையும் அவனது உயிரைக் காப்பாற்றிய இந்தியப் பெண் சான்ட்ராவையும் சந்திக்க ேமாடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

டெல் அவிவ் நகரில் வாழும் சுமார் 4 ஆயிரம் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.

இந்நிலையில், இஸ்ரேல் ஜனாதிபதியின் மாளிகைக்கு நேற்றுச் சென்ற பிரதமர் மோடியை வழக்கமான மரபுகளை மீறிய வகையில் ஜனாதிபதி ரியுவென் ரிவ்லின், அவரது கார் நின்ற இடத்தின் அருகே சென்று கட்டித் தழுவி வரவேற்றார். முன்னர் இந்தியாவுக்கு சென்றிருந்ததை நினைவு கூர்ந்த ரிவ்லின், அங்கு பல சிறப்புக்குரிய இடங்களை கண்டுகளித்த நினைவலைகளை மோடியுடன் பகிர்ந்து கொண்டார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, இஸ்ரேல் நாட்டின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் வகையில் தனக்கு அழைப்பு விடுத்தமைக்காக நன்றி தெரிவித்தார். இஸ்ரேலுடன் அனைத்துத் துறைகளிலும் இந்தியா தொடர்ந்து இணைந்து செயலாற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு - மோடி இடையில் நடைபெறும் சந்திப்பின் போது இருநாடுகளுக்கு இடையில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.

இந்நிலையில், தங்கள் நாட்டு ஜனாதிபதி மரபுகளை எல்லாம் புறம்தள்ளி இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கட்டித்தழுவி வரவேற்ற காட்சி தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிகழ்வு அங்குள்ள மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். 3 நாட்களும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இஸ்ரேலில் உள்ள கிங் டேவிட் ஹோட்டலில் மோடி தங்கியுள்ளார். இந்த ஹோட்டலில் 100 அறைகள் உள்ளன. இங்கு தான் மோடியும் அவரது குழுவினரும் தங்கியுள்ளனர். மோடி தங்கியுள்ள அறை அதிநவீன வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது.

வெடிகுண்டு வைத்து இந்த ஹோட்டல் தகர்க்கப்பட்டாலும் கூட, மோடி தங்கியுள்ள அறையை தகர்க்க முடியாது. அந்த அளவுக்கு மோடி தங்கியுள்ள அறை பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது. இதற்கு முன்பு இஸ்ரேலில் சுற்றுப் பயணம் செய்த அனைத்து அமெரிக்க ஜனாதிபதிகளும் இந்த ஹோட்டலில்ேதான் தங்கியுள்ளனர்.

மோடி தங்கியுள்ள அறையில் தனியாக சமையல் அறையும் உள்ளது. இங்கு சமையல் கலைநிபுணர் ரினா புஷ்கர்னா தலைமையிலான சமையல் கலைஞர்கள் மோடிக்கு பிடித்தமான உணவு வகைகளை சமைத்து பரிமாறுகிறார்கள்.

இந்தப் பயணத்தின் மூலம் இஸ்ரேல் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற சாதனையை மோடி படைத்துள்ளார். அவருடன் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவும் சென்று சிறப்பித்துள்ளார்.

இரு தலைவர்களும் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மறைந்த கணிதமேதை ராமானுஜத்தை வெகுவாக புகழ்ந்து பேசினார். ”இந்திய மக்களுக்காக நாங்கள் சிறப்பான நிர்வாகத்தை கொண்டுள்ளோம். மறைந்த எனது மாமா கல்லூரியில் கணித ஆசிரியராக பணியாற்றினார். அவர் என்னிடம் கணிதமேதை ராமானுஜத்தின் அறிவு குறித்து பெருமையாக பேசுவார்” எனத் தெரிவித்தார்.

மேலும், “இந்தியர்கள் எவ்வளவு திறமை மிக்கவர்கள் என்பதற்கு ராமானுஜம் ஒரு எடுத்துக்காட்டு” என பெருமிதமாக கூறினார். இந்தியாவைச் சேர்ந்த கணிதமேதை ராமானுஜம், உடல்நலக் குறைவால் 32 வயதிலேயே அகால மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-_ இஸ்ரேல் இடை யே தூதரக உறவு தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டியே மோடி இஸ்ரேல் நாட்டுக்கு 3 நாள், அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து இஸ்ரேல் சென்ற அவர் தலைநகர் டெல்அவிவ்ல் நகரில் உள்ள பென்குரியன் விமான நிலையத்தில் தரை இறங்கினார். அமைச்சர்களும் வந்து வரவேற்பு அளித்தனர்.

அங்கு பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. விமானத்தை விட்டு இறங்கிய மோடியை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கட்டித்தழுவி வரவேற்றார்.

பின்னர் அவர் பேசுகையில், "இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள், இந்திய பிரதமருக்காக 70 ஆண்டுகள் காத்திருந்தோம். எனது நண்பரை இங்கு சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.

அவரது வரவேற்புக்கு பிரதமர் மோடியும் நன்றி தெரித்தார்.

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் ஜெருசலேமில் உள்ள தனது வீட்டில் நேற்று விருந்து அளித்தார். அப்போது இரு நாடுகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் சந்திப்பு நடந்தது. அதன் பின்னர் அங்கு வாழும் இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அதன் பின்னர் இஸ்ரேல் தொழில் அதிபர்களை மோடி சந்தித்தார். ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் தொழில் தொடங்க அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

நேற்றுமுன்தினம் நடந்த சந்திப்பின் போது தொழில்நுட்பத்தில் புதுமைகளை புகுத்தும் திட்டத்துக்காக ரூ. 260 கோடி வழங்கப்படுவதாக இஸ்ரேல் பிரதமர் நேதன் யாகு அறிவித்தார்.


Add new comment

Or log in with...