ஊடகவியலாளர் மெல் குணசேகரவின் கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை | தினகரன்

ஊடகவியலாளர் மெல் குணசேகரவின் கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை

சிரேஷ்ட ஊடகவியலாளரான மெல் குணசேகரவின் கொலைக்குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க, தீர்ப்பளிக்கும்போது, சந்தேகநபர் குற்றம் இழைத்திருப்பதை எவ்வித மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமின்றி வழக்கறிஞர்கள் உறுதி செய்துள்ளதாக தெரிவித்தார்.

ஊடகவியலாளரை கொலை செய்தமை மற்றும் அத்துமீறி அனுமதியுமின்றி வீட்டுக்குள் சென்று ஊடகவியலாளரை கொலை செய்த பின்னர் அவரது வீட்டில் திருடியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் சந்தேக நபரான அந்தனி ருசேன் ஜோர்ஜ் என்பவருக்கெதிராக மேல் நீதிமன்ற நீதிபதி மரண தண்டணை விதித்து தீர்ப்பளித்துள்ளார். 2014ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்

மெல் குணசேகர தனது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டிருந்தார். சந்தேக நபர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சட்ட மா அதிபர் திணைக்களம் இக்கொலை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. தீர்ப்பு வழங்கப்பட்ட இறுதியில் மேல் நிதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க, குற்றவாளிக்கெதிராக முன்வைக்கப்பட்ட தண்டனை உத்தரவை வாசித்தார்.

அதில், தொம்பே பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட அந்தனி ருசேன் ஜோர்ஜ் எனும் குற்றவாளி வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நாளில் மற்றும் நேரத்தில் தூக்கிலிடப்பட்டு உயிரிழக்கும் வரை, நான்கு சுவர்களுக்கு மத்தியில் வைக்கப்படுவார் எனக்கூறப்பட்டிருந்தது.

மரண தண்டனைக்குப் புறம்பாக கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றவாளிக்கெதிராக 30 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதித்து தீர்ப்பளித்தது.

குற்றவியல் சட்டத்தின் 296, 383 மற்றும் 436 ஆகிய பிரிவுகளுக்கமையவே குற்றவாளி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன் மரண தண்டனை தீர்ப்பு உச்சரிக்கப்படுவதற்கு முன்னர் குற்றவாளி தனக்கு மரண தண்டனை விதிக்கப்படக்கூடாது என்பது தொடர்பில் தனது அபிப்பிராயத்தை முன்வைக்க விரும்புகிறாரா? என மேல் நீதிமன்றம் குற்றவாளியைக் கோரியது.

அதற்கு பதிலளிக்கும் வகையில் குற்றவாளி தனக்கு நான்கு பிள்ளைகள் இருப்பதனால் கருணை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கு விசாரணையில் சட்டமா அதிபர் தலைமையில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஷனில் குலரட்ண, குற்றவாளிக்கெதிராக ஆகக்கூடிய தண்டனை வழங்கப்பட்டிருப்பதாகவும் இத்தீர்ப்பு சமூகத்துக்கு மிகச்சிறந்த பாடமாக அமையுமென்றும் தெரிவித்தார்.

சிரேக்ஷ்ட வணிக ஊடகவியலாளரான மெல் குணசேகர 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 02 ஆம் திகதியன்று கூரிய ஆயுதத்தின் வெட்டுக் காயங்களுடன் பத்தரமுல்லையில் அமைந்துள்ள அவரது வீட்டுக்குள்ளிருந்து சடலமாக மீட்க்கப்பட்டார்.


Add new comment

Or log in with...