எதிர்ப்புகள் எவ்வழியில் வந்தாலும் புதிய அரசியலமைப்பு உருவாகும் | தினகரன்

எதிர்ப்புகள் எவ்வழியில் வந்தாலும் புதிய அரசியலமைப்பு உருவாகும்

* மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க முறையாக நடவடிக்கை
* சர்வஜன வாக்ெகடுப்பின் மூலமே நிறைவேற்றப்படும்

இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படாத நிலையில் புதிய அரசியலமைப்பை விமர்சிப்பதும் அதன் மீது குற்றம் சாட்டுவதும் எவ்விதத்திலும் நியாயமானதல்ல என அமைச்சரவை இணைப் பேச்சாளர்களான அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் தெரிவித்தனர்.

சகலரும் ஏற்றுக் கொள்ளும் வகையிலேயே அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்றும் எத்தகைய எதிர்ப்புகள், விமர்சனங்கள் வந்தாலும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க முறையான விதத்தில் புதிய அரசியலமைப்பு அமையும் என்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போது புதிய அரசியலமைப்பு தொடர்பிலும் மகாநாயக்க தேரர்கள் உட்பட அதன் மீதான எதிர்ப்புகள் தொடர்பாகவும் ஊடகவியலாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

இக் கேள்விகளுக்கு அமைச்சரவை இணைப்பேச்சாளர்களான அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் பதிலளித்தனர். அவர்கள் தொடர்ந்து விளக்கமளிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கத்திற்கு 62 இலட்சம் மக்கள் ஆணை வழங்கியுள்ளனர்.

அரசாங்கம் அதற்கு ஏற்பவே செயற்படும். இலங்கை மட்டுமன்றி உலக நாடுகளில் அரசியலமைப்புகள் காலத்திற்குக் காலம் மாற்றப்பட்டே வந்துள்ளன.

இலங்கையில் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் அவரது அதிகாரங்களை அதிகரித்துக் கொள்வதற்காகவே புதிய அரசியலமைப்பைக் கொண்டு வந்தார். அதே போன்றே ஜே.ஆர். ஜெயவர்தனவும், மஹிந்த ராஜபக்ஷவும் அவர்களது காலத்தில் அவர்களது அதிகாரத்தை அதிகரித்துக் கொள்வதற்காகவே புதிய அரசியலமைப்பு கொண்டு வந்தனர்.

எனினும் தற்போதைய அரசாங்கத்திற்கு அவ்வாறான தேவை கிடையாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மிடமுள்ள அதிகாரங்களையும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கின்றார். இதற்கிணங்க இம்முறை புதிய அரசியலமைப்பு மக்களுக்காகவே கொண்டுவரப்படுகிறது.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்புகின்ற போதும் அது தொடர்பான இறுதித் தீர்மானம் எதுவும் எட்டப்படவுமில்லை அது பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவும் இல்லை. 6 குழுக்கள் நியமிக்கப்பட்டு அது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. கூட்டு எதிரணியினர் இந்தக் குழுக்கள் சிலவற்றின் செயலாளர்களாகவும் தலைவர்களாகவும் இருந்து கொண்டு வெளியில் மக்கள் மத்தியிலும் ஊடகங்களிலும் அங்கு கலந்துரையாடியவற்றை திரிபுபடுத்தி அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர். இது எவ்வகையிலும் தார்மீகமான செயற்பாடும் அல்ல.

புதிய அரசியலமைப்பின் தேவை ஒன்று இப்போது நாட்டிற்கு உள்ளது. நாம் இன்னுமொரு 2500 வருடங்களுக்கு பின்னோக்கிச் செல்ல முடியாது. எவரும் விமர்சிப்பது போல் புதிய அரசியலமைப்பு சடுதியாக கொண்டுவரப்பட மாட்டாது. அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையிலேயே இது அமையும். இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தனே தெரிவித்துள்ளார். சிங்கள மக்களின் ஆதரவுடனேயே தமிழ் மக்களுக்கான பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்ற தனது நிலைப்பாட்டை அவர் பகிரங்கமாக வெளிப்படுத்தினார். இது வரவேற்கத்தக்க விடயம் என்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

லோரன்ஸ் செல்வநாயகம் 


Add new comment

Or log in with...