எட்டு கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது | தினகரன்

எட்டு கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

 
வடமேல் கடற்படை பிரிவின் கடற்படை அதிகாரிகள் மற்றும் புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது எட்டு கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். நேற்றுமுன்தினம் (30) புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலாவி பிரதேசத்திலேயே இவ்வாறு இச்சந்தேகநபர் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
 
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கேரள கஞ்சாவை விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்று கொண்டிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா இரண்டு கிலோக்களைக் கொண்டதாக நான்கு பொதிகளாகப் பொதி செய்யப்பப்ட்டிருந்ததாக நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் தெரிவித்தனர். 
 
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவுடன் மேலதிக சட்ட நடவடிக்களுக்காக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பட்டுள்ளதோடு புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
 
(புத்தளம் விஷேட  நிருபர் - எம்.எஸ். முஸப்பிர்)
 

Add new comment

Or log in with...