சுவிஸ் மாபியா குழுவுடனான ஒப்பந்தத்தின் பிரகாரமே கூட்டு வன்புணர்வு | தினகரன்

சுவிஸ் மாபியா குழுவுடனான ஒப்பந்தத்தின் பிரகாரமே கூட்டு வன்புணர்வு

அரச தரப்பு சாட்சி இப்ரான் நீதிமன்றில் தெரிவிப்பு

சுவிஸிலுள்ள மாபியா குழுவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரமே வித்தியாவை இவ்வாறு கூட்டுவன்புணர்விற்குட்படுத்தி கொலை செய்ததாக அரச சாட்சியமாக மாறிய இப்ரான் என்ற சாட்சியாளர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தார். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு விசாரணை யாழ்.மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட்பார் முறையில் கடந்த 28ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நேற்று மூன்றாவது நாளாக நடைபெற்றது.

நிதி மோசடி விவகாரம் தொடர்பாக வித்தியாவின் கொலையாளிகளுடன் சிறையில் வைக்கப்பட்டிருந்த இப்ரான் என்ற கைதி அரச தரப்பு சாட்சியாக மாறி நேற்றைய தினம் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார். சிறையிலிருக்கும்போது சுவிஸ் குமார் தன்னிடம் கூறிய விடயங்களை நீதிமன்றத்தில் தெரிவித்தார். இவர் சாட்சியமளிக்கும்போது, பொலிஸ் அதிகாரி நிஷாந்த சில்வாவிற்கு 20 மில்லியன் ரூபாவை தருவதாகவும் அதனை வழங்குமாறு தன்னிடம் கேட்டதாகவும் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

20 வயதுக்குட்பட்ட யுவதி ஒருவரை இவ்வாறு கூட்டு வன்புணர்விற்குட்படுத்தி அதனை வீடியோ செய்து அந்த காணொளியை பதிவேற்றம் செய்ய வேண்டும் என சுவிஸில் மாபியா கும்பலுடன் ஒப்பந்தம் செய்ததாகவும் இதற்காகவே சுவிஸ் குமார் சுவிஸிலிருந்த வந்தாகவும் தன்னிடம் தெரிவித்ததாகவும் இப்ரான் சாட்சியமளித்துள்ளார்.

இதற்கென வித்தியாவின் புகைப்படம் காண்பிக்கப்பட்டு, அந்த மாபியா குழு ஒப்புதல் வழங்கியதன் பிரகாரம், வித்தியாவை இவ்வாறு செய்ததாகவும், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலிருந்து அரசியல்வாதி ஒருவரின் உதவியுடன் தப்பித்து சென்றதாகவும் நீதிமன்றத்தில் நேற்று சாட்சியமளித்துள்ளார். இவ் வழக்கு எதிர்வரும் 03 ஆம் திகதி திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர் 


Add new comment

Or log in with...