Thursday, March 28, 2024
Home » மலையக தமிழர் கல்வி மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் நடேசன் சுந்தரேசன்

மலையக தமிழர் கல்வி மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் நடேசன் சுந்தரேசன்

by gayan
October 11, 2023 8:52 pm 0 comment

“சமூகப் பணிகளுக்காக இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் பல்வேறு விருதுகளையும் சமூக சேவைச் செம்மல் போன்ற பல பட்டங்களையும் பெற்றவர்”

அவுஸ்திரேலியாவிலுள்ள மலையக தமிழர் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் ஸ்தாபகத் தலைவர் நடேசன் சுந்தரேசன் மலையக கல்வி மேம்பாட்டுக்காக அரும்பணியாற்றி வரும் ஒருவர். அவரது சமூகப்பணிகளுக்காக கண்டி குண்டசாலை விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தினால் ஞானதீப விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர். இவருடைய சமூகப் பணிகளுக்காக இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் பல்வேறு விருதுகளையும் சமூக சேவைச் செம்மல் போன்ற பல பட்டங்களையும் பெற்றவர்.

இந்திய அரசாங்கம், இந்திய பாண்டிச்சேரி சமூக அமைப்பு டெல்லி தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புகளினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டவர். விக்டோரியா பன்முக கலாசாரம் (வி. எம். சி) என்ற அமைப்பின் ஆலோசனை சபையில் பதவி வகிக்கிறார். அவுஸ்திரேலியாவில் தமிழர் கூட்டமைப்பு என்ற அமைப்பினை ஸ்தாபித்து செயற்பட்டு இதன் உப தலைவராகவும் தலைவராகவும் இருந்து தமிழ் சமூகத்தின் மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்போடு சேவையாற்றி வருபவர். திறந்த ஆளுமை மிக்க சமூப் பணியாளர். மலையக தமிழர் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் ஸ்தாபகர் தலைவர் நடேசன் சுந்தரேசன் தினகரன் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி.

கேள்வி; உங்களது குடும்பப் பின்னணி பற்றி வாசகர்களுக்கு கூறுவீர்களா?

பதில்; எனது பெயர் சுந்தரேசன். ஹப்புத்தளை நகரில் 1954 இல் பிறந்தேன். தந்தை பெயர் நடேசப் பிள்ளை. தாயார் பெயர் சாந்திமதி அம்மா. என்னுடைய உடன் பிறப்புக்கள் ஐந்து பேர். இதில் மூத்தவர் அண்ணன் விஜயசேகரன்

மருத்துவர். அவர் தெற்கு ஆபிரிக்காவில் பல ஆண்டுகள் வேலை செய்தவர். தம்பி ஸ்ரீதரன். அவர் பொறியியல் துறையில் கலாநிதி பட்டம் பெற்றவர். அவர் அமெரிக்காவில் வசிக்கிறார். தங்கைமார்கள் இருவர். அவர்கள் இருவரும் இந்தியாவில் வசிக்கிறார்கள்.

எனது தந்தை . இந்தியா வம்சாவழியைச் சேர்ந்த இரண்டாவது தலைமுறை. நான் மூன்றாவது இந்தியா வம்சாவழி. தமிழ் நாட்டில் நாங்கள் தின்னன் ஊர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். தின்னன் ஊர் நடேசப் பிள்ளை என்றுதான் தமிழ் நாட்டில் அப்பாவை அழைப்பார்கள். அவர் இலங்கையில் உழைப்பதற்காக வந்தவர். அவர் தாய் மாமா இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்து வந்து மஸ்கெலியாவில் குடியேறி ஐந்து பிள்ளைகளையும் பட்டதாரிகளாக ஆக்கியுள்ளார். இது அக்காலத்தில் பெரிய விடயம். அவர் வியாபாரத்திலும் மிகவும் புகழ்பெற்று வாழ்ந்த ஒருவர். தின்னன் ஊர் சேகர் நடேசப் பிள்ளை என்றால் யாருக்கும் நன்கு தெரியும். அவருடைய இரண்டாவது மகன்தான் நான்.

கேள்வி; உங்களுடைய கல்வித் தகைமை பற்றி கூறுவீர்களா?

பதில்; கொழும்பில் புனித பெனடிக் கல்லூரியில் ஆரம்ப முதல் 13 ஆம் ஆண்டு வரை கல்வி கற்றேன். அப்பொழுது அங்கு ஆறாம், ஏழாம் ஆண்டு படிக்கின்ற கால கட்டத்தில் கற்பித்த ஆசிரியர்கள் எனக்கு முதல் அடித்தளத்தை இட்டார்கள். எனது அக்கா தமிழ் நூல்களை வாசிப்பதில் அதிகம் ஆர்வத்தை ஏற்படுத்தினார். பொன்னியின் செல்வன், கரித்துண்டு போன்ற நாவல்களை எல்லாம் நான் சிறிய வயதில் எட்டாம் ஆண்டு கல்வி கற்கும் போதே வாசித்து முடித்து விட்டேன்.

பாடசாலை காலங்களில் பாடசாலைகளுக்கிடையே நடைபெறும் விவாதப் போட்டிகளில் பங்கு பற்றுதல், நாடகங்களில் நடித்தல் போன்ற பல கலை கலாசார நிகழ்வுகளில் பங்குபற்றுவேன். பாடசாலையின் கலை இலக்கிய மன்றத்தின் செயலாளராகவும் தலைவராகவும் கடமையாற்றியுள்ளேன். எமது பாடசாலையின் வெள்ளி விழா சிறப்பு மலருக்கு இதழ் ஆசிரியராகவும் இருந்துள்ளேன். தமிழுக்கு தொண்டாற்றக் கூடிய ஆர்வம் எனக்கு சிறு வயதிலேயே வந்து விட்டது.

பாடசாலைகளில் கல்வி பயிலும் போதும் சமூகப் பணிகளில் ஈடுபடத் தொடங்கி விட்டேன். பாடசாலையின் மாணவத் தலைவராகவும் மாணவர்களுடைய ஒழுக்காற்று விடயங்களில் கவனம் செலுத்தி மாணவத் தலைமைத்துவ பண்புகளை பேணி ஒரு முன்மாதிரி மாணவனாக இருந்து கல்வி கற்றேன்.

1971 இல் கூட்டுக் கல்வி மன்றம் என்ற அமைப்பை உருவாக்கி அந்த அமைப்புக்கு முதல் செயலாளராகவும் பிறகு தலைவராகவும் இருந்தேன். அருட்தந்தை தனிநாயகம் அடிகளார் அவர்கள் எங்கள் மன்றத்திற்கு போசகராக இருந்தார். அவரை நாங்கள் கண்டியில் சந்தித்தோம். 1972 இல் அப்பொழுது க. பொ. த உயர் தரம் கல்வி கற்று விட்டு பட்டப் படிப்புக்காக இந்தியாவுக்குச் செல்லும் போது ஒரு பாராட்டுச் சான்றிதழ் தந்தார்.

கேள்வி; உங்கள் திருமண வாழ்க்கை பற்றி?

பதில் ; 1978 இல் பொறியியல் துறையில் படிப்பை முடித்துக் கொண்டு நாட்டுக்கு வந்திருந்தேன். 1983இல் திருமணம் பந்தத்தில் இணைந்து கொண்டேன். மனைவி பெயர் வாசுகி பிரவியாப்பிள்ளை. அவர் தியத்தலாவையைச் சேர்ந்தவர். அவர்களுக்கு நிறைய தோட்டம் இருந்தது. அவர் வீட்டில் இருந்து பார்த்தால் தியத்தலாவை இராணுவப் பயிற்சி முகாம் நன்கு தெரியும். அது 400 ஏக்கர் தேயிலைத் தொழிற்சாலையுடன் அமைந்திருந்தது. எனக்கு இரு பிள்ளைகள். மகள் லண்டனில் இருக்கிறார். பெயர் நிரோசினி. அவர் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவர். இரு பட்டங்கள் உடையவர். மருமகன் முரளி சோம சுந்தரம். அவர் சத்திர சிகிச்சை மருத்துவர். மகன் ஹரிகரன் சுந்தரேசன். கென்பராவில் அரச நிறுவனத்தில் உயர் பதவி வகித்து வருகிறார். அவர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

கேள்வி; இந்தியா சென்று என்ன தொழில்களில் ஈடுபட்டீர்கள்?

பதில்; இந்தியா சென்று பெங்களூரில் ஜேர்மன் நாட்டுக் கம்பனியில் 10 ஆண்டுகளாக ஒரு பொறியியலாளராகக் கடமையாற்றினேன். மீண்டும் எனது தந்தையார் தன்னுடைய வியாபாரத்தை கவனத்திற் கொள்ள யாருமில்லை என்று என்னை இலங்கை வரும்படி அழைப்பு விடுத்தார். தந்தையின் இலங்கை வியாபாரத்துறையில் கவனம் செலுத்தியதோடு சமூகத் தொண்டுப் பணிகளிலும் ஈடுபட்டேன்.

கேள்வி; மலையக மக்களுக்கு சமூகப் பணியாற்றும் ஆசை எவ்வாறு ஏற்பட்டது?

பதில்; அக்காலத்தில் ஆறு நாட்டு வேளாளர்களுடைய சபை இருந்தது. இந்தச் சபை 1980 களில் ஆரம்பிக்கப்பட்டது. அது சிறியதொரு அமைப்பாக இயங்கியது. எங்களுடைய சமூகத் தலைவர்கள் பங்காற்றினார்கள். அது மீளவும் புதுப்பொலிவுடன் முன்னெடுப்பதற்கு பங்களிப்புக்கள் செய்தேன். நானும் இன்று நீதியரசராக இருக்கின்ற துரைராசாவும் சேர்ந்து இயங்கினோம். துரைராசா அவர்கள் அப்பொழுது சாதாரண சட்டத்தரணி. மலையக மக்களின் கல்வி அபிவிருத்திற்காக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அப்பொழுதே தோன்றியது. நான் பெங்களூரில் இருக்கும் போது ரொட்டரிக் கழகம், யேசுஸ் கழகம் ஆகிய சங்கங்களுடன் எனக்கு தொடர்பு இருந்தது. அகில இலங்கை இளம் வாலிபர் யேசுஸ் கழகத்தில் திறன்படச் செயலாற்றி செயலாளராகவும் அங்கு பதவி வகித்துள்ளேன்.

கேள்வி; உங்களுடைய சமூகப்பணிகள் தொடர்பில்…?

பதில் ; சென்னைப் பொறியியல் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப் படிப்பினை மேற்கொள்ளளும் போது பீடாதிபதியாக பேராசிரியர் தாமோதரம் பிள்ளை இருந்தார். அவருடன் சேர்ந்து கண் சத்திர சிகிச்சை முகாமொன்றை அங்கு நடத்தினோம். அவருக்கு இலவசக் கண்ணாடி வழங்குதல், வெண் படலம் உள்ளவர்களுக்கு சத்திர சிகிச்சைக்கான வழிகாட்டுதல் வழங்குதல் போன்ற சமூகப் பணிகளிலும் ஈடுபட்டேன். இவை பற்றிய செய்திகள் மாலை முரசு பத்திரிகையில் வெளிவந்தன.

இப்படியான வெளிநாட்டு அனுபவங்கள் இலங்கையிலுள்ள இந்த அமைப்பை இயக்கப் போதுமானதாக இருந்தது. இந்த அமைப்பின் மூலம் இலங்கை மலையக தமிழ் மக்களின் உயர் கல்வி வழிகாட்டல்கள் திட்டங்கள் மேற்கொண்டோம். ரொட்டரிக் கழகத்தில் சேர்ந்து பங்காற்றினேன். யேசுஸ் இளைஞர் அமைப்பின் ஊடாக யப்பான் நாட்டுக்குச் சென்றேன். நிறைய சமூகப் பங்களிப்புக்களில் ஈடுபட்ட அனுபவங்கள் உள்ளன.

கேள்வி; அவுஸ்திரேலியாவில் மேற்கொள்ளும் சமூகப் பணிகள் குறித்து ?

பதில்; அரசியல் சூழல், மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சினை போன்ற பிரச்சினைகள் நாட்டில் நிலவின. இத்தகைய சூழல் காரணமாக 1990 களில் அவுஸ்திரேலியா சென்றேன். ஆறு வருடங்கள் சிட்னியில் இருந்தேன். பிறகு மெல்போர்ன் சென்று அங்கு தமிழ் சங்கத்தை உருவாக்கி அதன் தலைவராக இருந்தேன்.

23 வருடத்தில் நான் 15 வருடங்கள் தலைவராக இருந்தேன். இப்பொழுது வெள்ளி விழாவை நோக்கிப் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம். தற்போதைய புதிய தலைவர் பாடுமீன் ஸ்ரீஸ்கந்தராஜா ஆவர். இந்து சமய சேவைகளையும் அங்கு தொடர்ந்து செய்து வருகின்றேன். கோயில்களுக்கு அரசாங்கத்திடமிருந்து நிதி உதவி பெற்றுக் கொடுப்பதே என்னுடைய முக்கியமான பணியாகும். இந்து சமய அமைப்பு ஒன்றை ஸ்தாபித்து அதன் மூலம் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதி இந்துக் கோயில்களுக்கு நிதி உதவிகளைப் பெற்றுக் கொடுத்து வருகின்றேன்.

2009 உலக சமய கலாசார மாநாடு நடத்தப்பட்டது. இப்படி இந்து சமயத்தைப் பாதுகாப்பதற்காக பல்வேறுபட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளேன். ஐயமீட்டுண் நிறுவனத்தின் தலைவர் முரளியும் நானும் நண்பர்கள். இந்த சமூகப் பணிகளுக்கு உணர்வைத் தூண்டியவராக நான் அவரை மதிக்கின்றேன். அவருடைய சங்கத்திலும் நான் ஓர் அங்கத்தவர். வடக்கிலும் கிழக்கிலும் வெளிநாட்டில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் நிறைய உதவி செய்கிறார்கள். ஏன் நான் பிறந்த மலையக மக்களுக்கான மனிதாபிமான தொண்டு பணிகளை ஆற்றக் கூடாதா ? என்ற கேள்வி எனது மனதில் ஆரம்பத்தில் இருந்தது. இதை எப்படி செய்வது என்பதை எனக்கு முதலில் வழி காட்டியவர் முரளிதான்.

கேள்வி; எத்தகைய திட்டங்களை மலையக மண்ணில் மேற்கொள்ளப்போகிறீர்கள்?

பதில்; எங்களுடைய முதல் நோக்கம் கல்வியினை மேம்படுத்துவதாகும். அவற்றை மூன்றாகப் பிரித்து செயற்படவுள்ளோம். முதலாம் ஆண்டு முதல் 10ஆம் ஆண்டு வரையிலான மாணவர்களுக்கும், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் மற்றும் வயது வந்தவர்கள் என மூன்றாகப் பிரித்து வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றோம். தகுதி வாய்ந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள், கல்வியியலாளர்களைக் கொண்டு மேற்கொண்டு வருகின்றோம். இதில் பேராசிரியர் மூக்கையா, பேராசிரியர் சந்திரபோஸ் ஆகிய இருவருடைய பங்களிப்பும் அளப்பரியது.

குறிப்பாக மலையக மாணவர்களுடைய கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு நாங்கள் முயற்சிகள் செய்து வருகின்றோம். பல்துறை சார்ந்த தொழில் நிலைக் கல்வியினைக் கற்று இருத்தல் வேண்டும். துறையை மாற்றிப் படிப்பதற்கு அவுஸ்திரேலியா அனுமதி கொடுத்துள்ளது. தையல் தொழிற் செய்பவர்கள் தொடர்ந்து ஒருவர் அதே நிலையில் இருக்கக் கூடாது. அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக மென்மேலும் படிக்க வேண்டும். அங்குள்ளதைப்போன்று மலையக மாணவர் மாணவிகளையும் பரந்து பட்ட அடிப்படையில் நவீன டிஜிட்டல் கல்வி முறைக்கேற்ப அவர்களை வளப்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருகின்றேன்.

முதல் நிலைக் கல்வி இடை நிலைக் கல்வி பயிலும் மலையக மாணவர் மாணவிகளின் கல்வியை மேம்படுத்தும் வேலைத் திட்டங்களை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். முதல் நிலைக் கல்வியினையும் இரண்டாம் நிலைக் கல்வியினையும் மூன்றாம் நிலைக் கல்வியினையும் மலையகத்தில் மேம்படுத்த நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றோம். அதே போன்று கல்வி மட்டும் போதாது மென்திறமைகளும் இருக்க வேண்டும். எதிர்கால தலைமுறையினர்களுக்கான திட்டத்தை இலக்கு வைத்து மலையகத்திலுள்ள தமிழ் பாடசாலைகளை செயற்கை நுண்ணறிவுப் பொறியியல் கற்கை வகுப்புக்களை வழங்கி வருகின்றோம்.

கேள்வி; இறுதியாக நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில் ; என்னைப் பொறுத்தவரையிலும் நாம் கல்வி கற்று பெரியவர்களான பின் அம்மா, அப்பா ஆதரிக்காத கல்வியில் அர்த்தமில்லை. சமூகப் பற்று குடும்பப் பற்று ஒவ்வொரு படித்தவர்களுக்கும் இருத்தல் வேண்டும். துன்பப்படும் மக்களுக்கு மனமுவந்து உதவி செய்ய வேண்டும். ஒழுக்கக்கல்வி மிக அவசியம்.ஒழுக்கமில்லாத கல்வியில் எந்தவொரு பிரயோசனமுமில்லை. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற அடிப்படையில் கல்வி அமைதல் வேண்டும். இன்று ஆத்திச்சூடி தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அறத்தால் வருவது இன்பம். அது நாங்கள் ஆரம்பித்துள்ள மலையக மக்கள் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் சின்னம் தெளிவாக எடுத்து இயம்பிக் கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் பல்வேறுபட்ட சமூகப் பணிகளை ஆற்றி வந்தேன். இனி எதிர்வரும் காலங்களில் இறுதி மூச்சு உள்ள வரையிலும் நான் பிறந்த மலையக மக்களுக்கு என்னுடைய சேவையை வழங்கவுள்ளேன் என்றும் தெரிவித்தார்.

இக்பால் அலி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT