வாசுதேவவின் மனு உச்ச மன்றால் நிராகரிப்பு | தினகரன்

வாசுதேவவின் மனு உச்ச மன்றால் நிராகரிப்பு

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அதனை சூழவுள்ள 15,000 ஏக்கர் காணியை இரண்டு சீன நிறுவனங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு அமைச்சரவை எடுத்த முடிவை ரத்துச் செய்யுமாறு கோரி வாசுதேவ நாணயக்கார எம்.பி. தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு விசாரணைக்கு எடுக்கப்படாமலேயே உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இத்திட்டம் கடந்த அரச காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன் அந்த அரசில் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த மனுதாரர் இது தொடர்பாக நன்கு அறிந்திருந்தும் அதனை நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தாமல் மறைத்துள்ளார் என சட்டமா அதிபர் உட்பட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகள் முன்வைத்த விடயங்களை ஏற்று உச்ச நீதிமன்றம் வாசுதேவ நாணயக்காரவின் மனுவை நிராகரித்தது.

வாசுதேவ நாணயக்கார எம்.பி. தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு நீதவான் குழாமின் பெரும்பான்மை தீர்ப்புக்கமைய நிராகரிக்கப்பட்டது. புதிய இடதுசாரி முன்னணியின் தலைவரும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார இம்மனுவை தாக்கல் செய்திருந்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சரவை அங்கத்தவர்கள், சைனீஸ் மெர்ச்சென்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம், சைனா கொமியூனிகேஷன் நிறுவனம் அரசியலமைப்பு சபை மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர். உச்ச நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, சிசிர த ஆப்ரூ, அனில் குணரட்ன ஆகிய நீதியரசர் குழாம் முன்னிலையில் மனு ஆராயப்பட்டது. மனுதாரரான வாசுதேவ நாணயக்கார எம்.பி. சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹார த சில்வா ஆஜராகியிருந்தார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் செய்து கொள்வது அரசியலமைப்பின்படி அரசியலமைப்பிற்கு முரணானது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இங்கு அவ்வாறு பாராளுமன்ற அனுமதி பெறப்படவில்லை என்றும் மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுட்டிக்காட்டினார். அத்துடன் அரசியலமைப்பின் 157 வது பந்தியை மீறும் செயல் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

அதேபோன்று இதற்கான முழு அதிகாரமும் துறைமுக அதிகார சபைக்குள்ளது என்பதுடன் துறைமுக அதிகார சபையின் அனுமதி பெறப்படாமலே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது துறைமுக அதிகார சபை சட்டத்தையும் மீறும் செயல் என்றும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இங்கு சட்டமா அதிபர் சார்பாக ஆஜராகியிருந்த மேலதிக சொலிஸிட ஜெனரல் எஸ். ராஜரட்ணம் தெரிவிக்கையில், மனுதாரரான வாசுதேவ நாணயக்கார உண்மையை மறைத்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மேற்படி துறைமுக அபிவிருத்தி திட்டம் 2016ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் உண்மையில் இந்த ஒப்பந்தம் 2007ம் ஆண்டே செய்துகொள்ளப்பட்டிருந்தது.

அன்றைய காலகட்டத்தில் அமைச்சரவையில் அமைச்சராகவிருந்த மனுதாரரான வாசுதேவ நாணயக்கார இந்த விடயம் பற்றி ஒரு வசனமேனும் மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்றும் தெரிவித்தார். இவ்வகையான மனுதாரரின் மனுவுக்கு அனுமதியளிக்கத் தேவையில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மேற்படி விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் மனுவை விசாரணைக்கு உட்படுத்த அனுமதி வழங்காமலிருப்பதற்கு அனுமதி அளித்தது.

இரண்டு சீன நிறுவனங்கள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் த சில்வா ஆஜராகியிருந்தார்.


Add new comment

Or log in with...