Friday, April 19, 2024
Home » முதியோர் அனுபவிக்கும் வேதனைகளை இளையோர் புரிந்து கொள்வது அவசியம்!

முதியோர் அனுபவிக்கும் வேதனைகளை இளையோர் புரிந்து கொள்வது அவசியம்!

by gayan
October 12, 2023 6:54 am 0 comment

இவ்வுலகில் பிறந்த மனிதர்கள் மட்டுமல்ல செடி, கொடி, மிருகங்கள் மற்றும் பறவைகளும் கூட என்றோ ஒருநாள் முதுமை அடைந்தே தீர வேண்டும். இதனை யாராலும் தடுத்து விடவோ மாற்றி விடவோ முடியாது.

அன்று கட்டான உடல் அமைப்பு, கம்பீரத் தோற்றம், துடிதுடிப்பான செயற்பாடுகளோடும் வீரியத்துடன் திகழ்ந்த இளவயதினர் காலப்போக்கில் உடல் தளர்ந்து, கண்பார்வை குறைந்து, மெலிந்து, நோய்வாய்ப்பட்டு முதியோர் ஆகிவிடுவதுடன் பெரும்பாலானோர் வறுமையிலும் துன்பத்திலும் வாடுவதையும் காண்கின்றோம்.

மூத்த பிரஜைகள் என்று அழைக்கப்படுகின்ற இந்தப் பருவத்தினர் கௌரவமாகவும் கண்ணியமாகவும் மதிக்கப்பட வேண்டும்.

இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்டோரை முதியோர் என்கின்றனர். ஆனால் சர்வதேச மட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களே முதியோர் என வரையறை செய்யப்பட்டுள்ளனர்.

இன்று நவீன மருத்துவம், பொதுச்சுகாதார வசதிகள், நோய் வருமுன் காத்தல் நடவடிக்கை மற்றும் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வு காரணமாக மக்களின் ஆயுட்காலம் நீடித்து வருகின்றது.

முதியோர்களின் முக்கியத்துவம் இன்றைய இளம் சமுதாயத்தினருக்கு தெரிவதில்லை. முதியோர் பற்றி நாம் நன்கு சிந்தித்துப் பார்ப்போமேயானால் அவர்கள் நாட்டின் முதல் பிரஜைகள்,- வாழ்வில் சாதனை படைத்தவர்கள், – செல்வாக்கு உள்ளவர்கள், – முயற்சியில் உயர்வு கண்டவர்கள், – அனுபவசாலிகள், -வீட்டுக்கும் நாட்டுக்கும் ஓயாது உழைத்தவர்கள்,- எதிர்கால சந்ததியினரின் வழிகாட்டிகள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இன்று முதியோர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், குடும்பத்தாலும் சமூகத்தாலும் அவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் பரவலாக பேசப்படுவதை நாம் அறிவோம். அரசாங்கம் முதியோர்களுக்கான பல செயற்திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது. முதியோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தேசிய பாதுகாப்புச்சபை உருவாக்கப்பட்டு அதனூடாக முதியோர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டும் வருகின்றது.

இன்றைய நவீன உலகில் இன்பங்களை அனுபவித்து வருவோர் பலர் முதுமையை வெறுப்புடனே நோக்குகின்றனர். இந்த வெறுப்பின் வெளிப்படையாக இன்று தமது பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர் பலர் வீதியோரங்களிலும் அநாதை இல்லங்களிலும் வேதனையோடு வாழ்ந்து வருவதையும் காண்கின்றோம்.

முதியோர் தாங்கள் செய்த தொழிலில் இருந்து ஓய்வு பெற்றதும் அவர்களில் பலருக்கு வீட்டில் இருந்து மதிப்பும் மரியாதையும் நாளடைவில் குறைந்து கொண்டே போகின்றது. சிலவேளைகளில் மனைவி, மக்களின் கடின வார்த்தைகளையும் தாங்கிக் கொண்டு வேதனையோடு வாழ்ந்து வருகின்றனர். முதியோர்களை அன்பாக, பாசத்தோடு பாதுகாக்க வேண்டியது பிள்ளைகளின் தலையாய கடமையாகும். அது மறுக்கப்படுமாயின் மனிதத்தன்மை மரணித்து விடும்.

முதுமைக் காலத்தில் பலவிதமான நோய்கள் ஏற்படலாம். முதியோர் சில நடைமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் அவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். உடற்பயிற்சி, சரியான உணவுப் பழக்கம், சத்துணவு உட்கொள்ளல், போதியளவு உறக்கம், தேவையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளல், ஓய்வு எடுத்தல், போதுமான நீர் அருந்துதல், வைத்தியரின் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகளை உட்கொள்ளல் என்பவற்றில் கவனம் செலுத்துதல் வேண்டும்.

மேலும் இனிப்பு,கொழுப்பு மற்றும் மாமிச உணவுகளை குறைத்துக் கொள்வதோடு மது அருந்துதல், புகைபிடித்தல், வெற்றிலை போடுதல் என்பவற்றை முற்றாகத் தவிர்த்தால் பல நோய்களிலிருந்தும் உடல்நலத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இன்று பெரும்பாலான முதியோர் எதுவித பொழுதுபோக்குகளும் இன்றி தினமும் வீட்டிலே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டு அவஸ்தைப்படுகின்றனர்.

கிராமங்கள் தோறும் சிறுவர் பூங்காக்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவது போல் முதியோர்களுக்கும் பொருத்தமான பூங்காக்கள் அமைக்கப்பட்டால் அவர்கள் பெரிதும் பயனடைவார்கள்.

முதியோர் தங்களுக்கான விஷேட அடையாள அட்டையை வைத்திருப்பதன் மூலம் காரியாலயங்கள், தபாலகங்கள், பொலிஸ் நிலையம், பஸ்வண்டி, வைத்தியசாலையில் விசேட சலுகைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

முதுமைக் காலத்தில் ஏக்கம், தனிமை, நிம்மதியற்ற நிலை என்பன இருக்கும். இவற்றைப் போக்கி சந்தோசமாக இருக்க வேண்டுமேயானால் மக்களுடன் தொடர்புடைய கிராம அபிவிருத்திச் சங்கம், ஓய்வூதியம் பெறுவோர் சங்கம், மத்தியஸ்த சபை, முதியோர் சங்கம் மற்றும் சிரமதான நடவடிக்கைகள் போன்ற சமூகநல செயற்பாடுகளில் இணைந்து செயல்படலாம்.

கலாபூசணம் எம்.ரி.ஏ.கபூர்…?

நிந்தவூர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT