உமா ஓயா: ஓர் அவலக் குரல் | தினகரன்

உமா ஓயா: ஓர் அவலக் குரல்

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த நாள் முதல் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட பாவச் சுமைகளை சுமக்க வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது என எவராவது சொன்னால் அதனை யாராலும் மறுத்துரைக்க முடியாது ஏனெனில் அதில் நூறு வீதம் உண்மையே காணப்படுகிறது. இங்கு மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற சில விடயங்களை உற்று நோக்குவோம்.

சைற்றம் யாரால் முன்வைக்கப்பட்டது முழுமையான ஆதரவு மஹிந்த ஆட்சிதான் வழங்கியது. இன்று அது தேசியப் பிரச்சினையாக மாற்றம் பெற்றுள்ளது. எயார் லங்கா நிறுவனம் எமது நாட்டில் நல்ல இலாபமீட்டும் நிறுவனமாக இருந்தது. அதன் நிருவாகத்தை தான்தோன்றித்தனமாக மாற்றியமைத்து நஷ்டத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. இது இரண்டாவது கைங்கரியம்.

அடுத்தது நாட்டுக்கு பொருத்தமற்ற விதத்தில் வெளிநாட்டுக் கடன்களை அள்ளிக் கொட்டிக் கொண்டதும் மஹிந்த ஆட்சிதான். இன்று அந்தக் கடனை வட்டியும் சேர்த்து திருப்பி செலுத்த வேண்டியுள்ளது. இதன் காரணமாக நாடு பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இப்படி மஹிந்த ஆட்சியின் ஊழல் நாடகங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

புதிய நெருக்கடியாக உருவெடுத்திருப்பது உமா ஓயா திட்டமாகும். இதனை ஆரம்பித்ததும் மஹிந்த ராஜபக்ஷ அரசுதான். இந்தத் திட்டம் காரணமாக ஊவா மாகாணம் முழுமையாக சூடாக மாற்றம் கண்டுள்ளது. போதிய மழை பெய்யாத காரணத்தால் பிரதேசத்தில் வறட்சி வேறு தாண்டவமாடுகின்றது. அனைத்து நீர் நிலைகளும் வற்றிப் போயுள்ளது. விவசாயத்துக்கோ அத்தியாவசிய தேவைகளுக்கோ பாரிய தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாகாணம் முழுவதும் கிணறுகள் வற்றிப் போயுள்ளன. நிலம் கூட வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

பிரதேச மெங்கு முள்ள வீடுகள் உடைந்து விழவும், பூமிக்குள் அமிழ்வதற்குமான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதேச மக்கள் பெரும் அச்சத்துடன் காணப்படுகின்றனர். மக்கள் என்னதான் செய்வது என்று அங்கலாய்த்த வண்ணம் அடுத்த கனத்தில் எதுவும் நடக்கலாம் என்ற பீதியுடன் காணப்படுகின்றனர்.

இது ஒரு புறமிருக்க உமா ஓயாவின் சுரங்கப் பாதை வழியாக நீர் கசிய ஆரம்பித்துள்ளது. நாளாந்தம் 8 இலட்சத்துக்கும் கூடுதலான கலன் தண்ணீர் வெளியேறிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தண்ணீர் கசிவு காரணமாக இப்பகுதியில் பாரிய மண் சரிவுகள் ஏற்படக் கூடிய அபாயம் கூட உருவாகியுள்ளது. அப்படியில்லா விட்டால் பாரிய விபத்தொன்றுக்கு பிரதேச மக்கள் முகம் கொடுக்க நேரிடலாம் என அச்சுறுத்தப்பட்டுள்ளது.

இப்போது இந்த உமா ஓயா பிரச்சினைக்கும் தீர்வு தேட வேண்டிய கட்டாயம் நல்லாட்சி அரசு மீதே சுமத்தப்பட்டுள்ளது. அவசரமாக தீர்வு காணுமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் அணிதிரண்டு எதிர்ப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர். புதன்கிழமை பண்டாரவளையில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக பண்டாரவளை நகரமே மனிதத் தலைகளால் நிரம்பி வழிந்தது. இனமத மொழி பேதம் பாராது அனைத்து வர்த்தக நிலையங்களும் கடையடைப்புச் செய்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கறுப்புக் கொடி ஏற்றி கண்டனத்தைக் காட்டினர். பாடசாலைகள் கூட இயங்கவில்லை. போக்குவரத்துச் சேவை முற்றாக ஸ்தம்பிதமடைந்து போனது.

ஊவா மாகாண மக்களின் குடியிருப்புகள், வீடுகள், சொத்துக்களை பாதுகாத்துக் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்குள் அரசு தள்ளப்பட்டுள்ளது. விவசாய நிலங்களையும் பாதுகாத்துக் கொடுக்க வேண்டும். அத்துடன் இந்த உமா ஓயா திட்டம் காரணமாக காணிகளை, வீடுகளை இழந்தவர்களுக்கு உரிய இழப்பீட்டைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமன்றி திட்டத்தின் சுரங்கப் பாதை மீதமுள்ள பணிகள் நிறைவடைவதற்குள் பிரதேச சூழல் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் சான்றிதழ் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டியது அவசியமானதாகும்.

இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை திட்டத்தின் அடுத்த செயற்பாடுகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட வேண்டுமென மக்கள் வலியுறுத்தியிருக்கின்றனர். இது நியாயமானதொன்றாகும். அவ்வாறு எதுவும் இனிமேல் நடக்காது என்ற மனப் போக்கில் செயற்பட்டு ஏதாவது விபரீதம் நடந்தால் அதன் பொறுப்பு அரசு மீதே சுமத்தப்படலாம்.

இந்த உமா ஓயா திட்டத்துக்கு ஈரான் இஸ்லாமிய குடியரசு கடனுதவி வழங்கியுள்ளது. அந்தக் கடனிலிருந்தே கோடிக் கணக்கில் அரசியல் வாதிகள் தமது பொக்கற்றுகளை நிரம்பிக் கொண்டிருக்கின்றனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிதி திருப்பிச் செலுத்தப்பட வேண்டியதாகும். இதுவொரு மிகப் பெரிய துரோகச் செயலாகவே நோக்க வேண்டியுள்ளது. இந்தப் பாவத்தை எங்கு போய் நிவர்த்தி செய்து கொள்ளப் போகிறார்கள்.

உமா ஓயா திட்டத்தை வைத்து கடந்த ஆட்சியில் கோடிக் கணக்கான ரூபா கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்து இது குறித்து உடனடிய விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கின்றார். வரவேற்கத்தக்கதுதான். ஆனால் விசாரணை முழுமையாக நடக்குமா? தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்களா? என்பது கேள்விக் குறியாகும். நல்லாட்சி வந்த நாள் முதல் இப்படி எத்தனையோ விசாரணை தீர்வு காணப்பட்டதாகவே தெரியவில்லை. அடுத்து என்ன நடக்கப் போகிறது? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது.


Add new comment

Or log in with...