நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா பயணம் | தினகரன்

நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா பயணம்

நடிகர் ரஜினிகாந்த் மும்பையில் ‘காலா’ படப்பிடிப்பை முடித்து விட்டு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னையில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வந்த ரஜினிகாந்த் பாதியில் அதை முடித்து விட்டு மும்பை சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்தார். தாராவி பகுதியில் முஸ்லிம் குல்லா, கருப்பு வேட்டி, சட்டை அணிந்து தாதாவாக நகரை வலம்வருவது, குடிசை மக்களிடம் குறைகளை கேட்பது, வில்லன்களை முறைத்துக்கொண்டு திரிவது, மோட்டார் சைக்கிள் பின்னால் உட்கார்ந்து பயணிப்பது போன்ற காட்சிகளை இயக்குனர் பா.ரஞ்சித் படமாக்கினார்.

ரஜினிகாந்தை காண ஏராளமான ரசிகர்கள் கூடியதால் படப்பிடிப்புக்கு இடையூறுகள் ஏற்பட்டபோதும் பாதுகாவலர்களை நிறுத்தி முதல்கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்தனர். பின்னர் ரஜினிகாந்த் சென்னை திரும்பி சில நாட்கள் ஓய்வு எடுத்து விட்டு கடந்த வாரம் மீண்டும் மும்பை சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

கதாநாயகி ஹூமா குரேஷியுடன் அவர் நடித்த காட்சிகளும் வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சிகளும் படமாக்கப்பட்டன. 15 மாவட்ட ரசிகர்களுடன் சந்திப்பு, அவர்களுடன் புகைப்படம் எடுத்தல், ஒரு மாதம் காலா படப்பிடிப்பில் பங்கேற்றது என்று ஓய்வின்றி பணிகளில் இருந்ததால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் காலா படப்பிடிப்பை முடித்து விட்டு நேற்று முன்தினம் இரவு திடீரென்று மும்பையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டுச்சென்றார். அங்கு 2 வாரங்கள் தங்கி ஓய்வு எடுக்கவுள்ளாார். அப்போது மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வார். மருத்துவர்கள் அறிவுரைப்படி சிகிச்சையும் எடுத்துக்கொள்வார்.

பரிசோதனையை முடித்து விட்டு அடுத்த மாதம் சென்னை திரும்பி பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் நடக்கும் காலா படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்வார். ஏற்கனவே கடந்த வருடம் கபாலி படத்தை முடித்து விட்டு அமெரிக்கா சென்று ஒரு மாதத்துக்கும் மேலாக அங்கு தங்கி இருந்து ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...