இலங்கைக்கு தென்னாபிரிக்கா சிறந்ததொரு முன்னுதாரணம் | தினகரன்

இலங்கைக்கு தென்னாபிரிக்கா சிறந்ததொரு முன்னுதாரணம்

அரசியலமைப்பு மாற்றம் உச்ச அளவில் அதிகாரங்களைப் பகிர்வதற்கு வழிசமைக்கக் கூடியதாக அமைய வேண்டியதன் அவசியம் உணரப்பட்டிருக்கும் நிலையில் நேற்றுமுன்தினம் அரசியலமைப்பு மறுசீரமைப்புகள் குறித்த மாநாடொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்த மாநாட்டில், தென்னாபிரிக்காவின் முன்னாள் பிரதிப் பிரதம நீதியரசர் டிகாங் மொசனகே முக்கிய உரையொன்றை ஆற்றியிருக்கிறார்.

நீண்ட காலமாக தொடர்ந்து வரும் முரண்பாடுகளால் வெந்து போயுள்ள மக்களது காயங்களை ஆற்றுவதற்குரிய வகையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் அதனூடாக இணக்கப்பாட்டின் மூலம் வேறுபாடுகளற்ற அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தீர்வுக்கான நகர்வுகளில் முரண்பாடுகள் எழுந்த போதிலும் இந்த மனக் காயங்களுக்கான தீர்வு குறித்து ஆழமாக கவனத்தில் கொள்ளப்பட்டு உத்தேச அரசியலமைப்பில் முரண்படக் கூடிய விடயதானங்களை விடுத்து முதற் கட்டமாக இணக்கப்பாடு ஏற்படக் கூடியவற்றில் முன்னுரிமை கொடுத்துச் செயற்படுவதன் முக்கியத்துவத்தை அவர் சற்று அழுத்தமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

நல்லிணக்க நகர்வில் தென்னாபிரிக்காவின் அனுபவங்களைக் கொண்டு தம்மால் இலங்கைக்கு உதவ முடியும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். உண்மையிலேயே இந்த விடயத்தில் தென்னாபிரிக்கா எதிர்கொண்ட சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சுமார் 360 வருடங்கள் கொடூரமான மோதல்களுக்கு அந்த நாட்டு மக்கள் முகம் கொடுத்துள்ளனர். நிறவெறி அடக்குமுறைகளின் விளைவாக அரசியல், சமூக ரீதியிலான பிரச்சினைகளும் தலைவிரித்தாடிய காலம் அது. அதிலிருந்து தென்னாபிரிக்க தேசத்தை மீட்டெடுக்க கொடுக்கப்பட்ட விலை பெருந்தொகையான உயிரிழப்புகளாகும்.

மிக நீண்டதொரு இருண்ட யுகத்திலிருந்து அந்த நாட்டை மீட்டெடுப்பதற்காக செய்யப்பட்ட தியாகங்களின் காரணமாக நெல்சன் மண்டேலா என்ற மாமனிதன் அகிம்சை வழிப் போராட்டத்தின் மூலம் அந்த நாட்டில் ஒளிச்சுடரை ஏற்றி வைத்தார். இன்று உலகின் மிகச் சிறந்த அரசியல் தலைவனாக, மக்கள் தலைவனாக நெல்சன் மண்டேலாவை முழு உலகும் ஏற்றுக் கொண்டிருக்கின்றது. மண்டேலாவின் தலைமைத்துவத்தின் கீழ் உருவாக்கப்பட்ட முதலாவது ஆவணமே புதிய அரசியலமைப்புதான். அதுவொரு மிகத் தெளிவான ஆவணமாகவே அந்த நாட்டு மக்களால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

உண்மையிலேயே ஒரு நாட்டின் அரசியலமைப்பு என்பது அந்த நாட்டில் வாழுகின்ற சகல மக்களுக்கும் தங்களை உத்தரவாதப்படுத்திக் கொள்வதற்கான ஆவணமாகவே காணப்படுகின்றது. அத்தகையதொரு வரலாற்றுப் பதிவான ஆவணத்தை உள்வாங்கியதாக இலங்கைக்கான அரசியலமைப்பை உருவாக்கிக் கொள்ள முடியும். ஏனெனில் இலங்கையும் தென்னாபிரிக்காவைப் போன்றே இன, மத, மொழி வெறியால் செயலிழந்து போனதொரு மண்ணாகவே நோக்க முடிகிறது. ஆனால் நெல்சன் மண்டேலா அந்த தேசத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக முன்னெடுத்த புரட்சியை அமைதிப் புரட்சியாகவே நோக்க முடிகிறது.

இத்தகைய வரலாற்றுப் பின்னணியில் நோக்கும் போது இலங்கையும் சுமார் அரை நூற்றாண்டு காலமாக இன, மத, மொழி ரீதியில் காயங்களை ஏற்படுத்திக் கொண்ட நாடாகும்.

இன்றளவும் கூட அந்தக் காயங்களுக்கு சரியான மருந்து போடப்படவில்லை. அந்தப் புண்களை புரையோடிப் போனதொன்றாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது. 2009 இல் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டாலும் அதனால் ஏற்பட்ட வடுக்கள் மாற்றப்பட முடியாத நிலையிலேயே காணப்படுகின்றன. இனங்களுக்கிடையேயான நல்லிணக்கம் உருவாக்கப்படவில்லை. அவை பேச்சிலும் எழுத்திலும் மட்டுமே வடிவம் பெற்றுள்ளன. மனதளவில் உறுதிப்படுத்தப்படவே இல்லை. ஒவ்வொரு சமூகமும் மற்றைய சமூகத்தின் மீதான சந்தேகப் பார்வையைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

இவ்வாறானதொரு நிலையில் நல்லாட்சி அரசின் பிரதான நோக்கமான அரசியலமைப்பு மாற்றத்துக்கான பணியில் மற்றொரு அடி முன்வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் அரசியலமைப்பு வழி நடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கிறார். இந்த இடைக்கால அறிக்கையோடு புதிய அரசியலமைப்புக்கான பணியின் வேகம் அதிகரிக்கக் கூடியதாக அமையும். இந்த அரசியலமைப்பின் மூலம் உச்ச அதிகாரங்களை பகிர்வதற்கு அனைத்துக் கட்சிகளும் இணக்கம் தெரிவித்திருக்கின்றன. சில விடயங்களில் சிறிய முரண்பாடுகள் காணப்படுகின்ற போதிலும், அவற்றைப் பேச்சு மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் காணப்படவே செய்கின்றது.

தென்னாபிரிக்கா என்ற ஜனநாயக நாட்டின் அரசியலமைப்பு, பன்முகத்தன்மை, ஐக்கியத்தின் பொதுவான நிலைப்பாடு என்பவற்றின் அடிப்படையில் இந்த ஆவணம் தயாரித்து மக்களின் ஆதரவினையும், இணக்கத்தையும் பெற்றுக் கொண்டுள்ளது. அந்த ஆவணத்தின் வழிநின்று எமக்கென்று புதிய அரசியலமைப்பைப் பெற்று நிரந்தரமான ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் பிரவேசிப்பதற்கான வேலைத் திட்டம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் தாமதங்கள் சில சமயங்களில் தடைகளுக்கும், தடங்களுக்கும் காரணமாக அமைந்து விடலாம். அவ்வாறான நெருக்கடி நிலைமை உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் வெல்லப்பட வேண்டியது மக்கள் மனங்களாகும். மனங்கள் வெல்லப்பட்டால் அதுதான் எமது நாட்டின் மகத்தான வெற்றியாகும்.


Add new comment

Or log in with...