சந்தேகங்களைக் கிளப்பியுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள்! | தினகரன்

சந்தேகங்களைக் கிளப்பியுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள்!

நாட்டில் அண்மைக் காலமாகத் தொழிற்சங்க நடவடிக்கைக​ள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இத்தொழிற்சங்க நடவடிக்கைகள் சட்டப்படி வேலை இயக்கம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம், அடையாள வேலைநிறுத்தம், தொடர் வேலைநிறுத்தம் என்றபடி இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் தற்போது சைற்றம் தனியார் மருத்துவக் கல்லூரி விவகாரம் பிரதான இடத்தைப் பிடித்துள்ளதோடு அரசாங்க சுகாதார சேவை, தபால் துறை உள்ளிட்ட பல துறைகளிலும் தொழிற்சங்க நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன.

இத்தொழிற்சங்க நடவடிக்கைகளால் பொதுமக்கள் பலவித அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக, தற்போது தபால் துறை ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தத் தொழிற்சங்க நடவடிக்கையினால் பாடசாலைகளில் அடுத்தாண்டுக்கு முதலாம் தரத்தில் பிள்ளைகளை சேர்ப்பதற்கான விண்ணப்பப் படிவங்களை உரிய நேர காலத்திற்குள் அனுப்பி வைக்க முடியாத நிலைக்கு பெற்றோர் உள்ளாகியுள்ளனர். அத்தோடு வீதிச் சட்ட திட்டங்களை மீறிய குற்றங்களுக்கான தண்டப் பணங்களைச் செலுத்த முடியாத அசொளகரியங்களுக்கு வாகன உரிமையாளர்களும், சாரதிகளும் முகம் கொடுத்துள்ளனர்.

இவ்வாறு பொதுமக்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளினால் ஒருபுறம் பாதிக்கப்பட, மறுபுறம் பல வடிவங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகள் அடிக்கடி இடம்பெற்று வருவதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்நாட்டில் முதலிடவும் பின்நிற்கின்றனர். அத்தோடு பல முதலீட்டாளர்கள் பங்களாதேசம், வியட்நாம் போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளதாக இந்நாட்டைச் சேர்ந்த இராஜ தந்திரியொருவர் அண்மையில் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு பல முதலீட்டாளர்கள் இங்கு முதலிடவும் தயக்கம் காட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

இவை இவ்வாறிருக்க, இத்தொழிற்சங்க நடவடிக்கைகளால் அரசாங்கமும் மக்கள் மத்தியில் அபகீர்த்திக்கும், அசௌகரியகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றது. அண்மைக் காலமாக இந்நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற தொழிற்சங்க நடவடிக்கைகளை நோக்கும் போது அவை பெரும்பாலும் அற்ப அரசியல் நோக்கங்களைக் கொண்டிருப்பதையும், அரசாங்கத்தை மக்கள் மத்தியில் அபகீர்த்திக்கு உள்ளாக்குவதையும் நோக்கமாகக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக இந்நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற பல தொழிற்சங்க நடவடிக்கைகள் தவிர்த்துக் கொள்ளக் கூடியவை. பிரச்சினைக்குரிய விவகாரங்களை உரிய ஒழுங்கில் அணுகினால் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டிய தேவையே ஏற்படாது.

ஆனால் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் இந்த நியாயத்தை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை என்பதாகவே அவற்றின் செயற்பாடுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. இதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன.

குறிப்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள ஆயத்தமான போது அவர் புறப்பட இரண்டொரு தினங்களுக்கு முன்னர் பெற்றோலிய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்தன. ஏனெனில் இந்திய விஜயத்தின் போது பிரதமர் திருகோணமலை எண்ணெய்க் குதங்க​ைள இந்தியாவுக்கு வழங்கும் உடன்படிக்கையில் கைசாத்திடவுள்ளார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான் இந்நடவடிககையில் ஈடுபடுவதாக அவர்கள் குறிப்பிட்டனர். ஆனால் அதே தினம் மாலையில் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடாத்திய தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் பிரதமர் அவ்வாறு கையெழுத்திடும் எந்த திட்டமும் கிடையாது எனக் குறிப்பிட்டார். அத்தோடு வேலைநிறுத்தம் இடைநடுவில் கைவிடப்பட்டது.

இத்தொழிற்சங்க நடவடிக்கையால் பொதுமக்கள் பெரும் அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்தனர். ஆனால் தொழிங்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க முன்னர் இவ்விடயத்தை உரிய ஒழுங்கில் அணுகி இருந்தால் இந்த அசௌரியங்களுக்கு மக்கள் உள்ளாவதைத் தவிர்த்திருக்கலாம்.

இதே போன்று தபால் துறை ஊழியர்கள் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட நுவரெலியா, கண்டி மற்றும் காலி தபாலகங்களை அரசாங்கம் உல்லாசப் பயணத் துறையின் கீழ் உள்வாங்குவதற்கு ஆட்சேபனை தெரிவித்து அண்மையில் வேலைநிறுத்தம் செய்தனர்.

ஆனால் அக்கட்டடங்களை வருமானம் ஈட்டுவதற்காக உல்லாசப் பயணத்துறையின் கீழ் உள்வாங்க யோசனையே முன்வைக்கப்பட்டுள்ளதை. அது முடிவு அல்ல என்றதும் வேலைநிறுத்தத்தைக் கைவிட்டனர். இருப்பினும் மீண்டும் வேலைநிறுத்தம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அரசாங்க மருத்துவர்களும் சைற்றம் விவகாரம் தொடர்பில் மீண்டும் வேலைநிறுத்தத்தில் குதிப்பதற்கு முயற்சிக்கின்றனர்.

இவை இவ்வாறிருக்க, தலைநகரிலுள்ள சந்திகளிலும், வீதிகளிலும் நடாத்தப்படுகின்ற ஊர்வலங்களால் பொதுமக்கள் பலத்த அசெளகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.

இதன்படி இந்நாட்டில் மாறி மாறி முன்னெடுக்கப்படுகின்ற தொழிற்சங்க நடவடிக்கைகளால் பொதுமக்கள்தான் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதனூடாக அரசாங்கத்தை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் எதிர்பார்ப்புக்களே பின்னால் இருப்பதாகப் பரவலாக நம்பப்படுகின்றது. தம் அற்ப நலன்களை அடைந்து கொள்வதற்காக பொதுமக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கவோ நாட்டிக்கு களங்கம் ஏற்படுத்தவோ கூடாது. அதனால் இந்நாட்டு மக்களும் தான் பாதிக்கப்படுவர்.

ஆகவே என்ன வடிவிலான தொழிற்சங்க நடவடிக்கை என்றாலும் அவை பொதுமக்களையும். நாட்டையும் பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் உச்ச எதிர்பார்ப்பாக உள்ளது. அதுவே நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மை பயக்கும். இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டியது தொழிற்சங்கங்களின் பொறுப்பும் கடமையும் ஆகும்.


Add new comment

Or log in with...