Friday, March 29, 2024
Home » இந்திய இழுவைப் படகுகளுக்கு இலங்கையில் ஒரு செக்கன் கூட இடமில்லை

இந்திய இழுவைப் படகுகளுக்கு இலங்கையில் ஒரு செக்கன் கூட இடமில்லை

- இதுவே அரசாங்கத்தின் முடிவு என்கிறார் அமைச்சர் டக்ளஸ்

by Prashahini
October 11, 2023 12:43 pm 0 comment

இந்திய இழுவைப் படகுகளுக்கு இலங்கையில் ஒரு செக்கன் கூட இடமில்லை, இதுவே அரசாங்கத்தின் முடிவு என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரியில் நேற்று (10) பிற்பகல் கடற்தொழிலாளர்களுக்கு நன்கொடையாக எரிபொருள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்படி தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

இலங்கையில் சிறிது காலமாக இந்திய இழுவைப் படகுகளின் வரவு குறைவாகக் காணப்படுகிறது. எமது கடற்தொழிலாளர்கள் இந்தியாவிற்கு படகில் சென்று தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பாண்டிச்சேரி முதலமைச்சர் ஆகியோரை சந்தித்து தமது நிலைமையை விளங்கப்படுத்தியதன் விளைவால் தான் இந்தியப் படகுகளின் வருகை குறைவடைந்துள்ளது.

இது இலங்கை கடற்படை சார்ந்த பிரச்சனை அல்ல. வடக்கில் வாழும் தமிழ் கடற்தொழிலாளர்களுடைய பிரச்சனை. எமது கடற்படை அத்துமீறும் இந்திய மீன்பிடிப் படகுகளை பிடிக்கும் போது அங்கே கடற்படை சார்ந்து ஓர் பிரச்சாரம் முன்வைக்கப்படுகிறது. உண்மையில் அவர்கள் சட்டவிரோதமாக ,எமது வளங்களை, வாழ்வாதாரங்களை அழிக்கும் போதுதான் கடற்படை அவர்களை கைது செய்கின்றது.

வடக்கில் உள்ள 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்தியா சென்று இது கடற்படையின் பிரச்சனை அல்ல இது எமது தமிழ் மீனவர்களுடைய பிரச்சனை என்ற உண்மையை அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

வடமராட்சி உள்ளிட்ட இடங்களில் குழுக்கல் முறை மூலம் தெரிவு செய்யப்பட்ட மீனவப் பிரதிநிதிகளை இந்தியாவுக்கு அனுப்பி எமது மீனவர்களின் பிரச்சனையை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்திய இழுவைப் படகு விடயத்தில் கடற்தொழில் அமைச்சராக எனது முடிவே இறுதி முடிவு.ஒரு செக்கன் கூட இந்திய இழுவைப் படகுகளுக்கு இங்கு இடமில்லை.இதுவே அரசாங்கத்தின் முடிவு. என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

சாவகச்சேரி விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT