திண்மக் கழிவுகளை அகற்றுவதில் உருவாகியிருக்கும் நெருக்கடி! | தினகரன்

திண்மக் கழிவுகளை அகற்றுவதில் உருவாகியிருக்கும் நெருக்கடி!

சிங்கள_ தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று மீத்தொட்டமுல்ல குப்பைமேடு சரிவினால் ஏற்பட்ட அனர்த்தம் திண்மக் கழிவகற்றல் தொடர்பான விடயத்தை பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக மாற்றியுள்ளது. சிறிது சிறிதாக உருவெடுத்த திண்மக் கழிவுப் பொருட்கள் பிரச்சினை இப்போது தீவிர நிலையை அடைந்திருக்கின்றது. மீத்தொட்டமுல்ல குப்பைமேடு சரிவினால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக குப்பையில் புதையுண்டு பலர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்ததோடு பலர் இருப்பிடங்களையும் இழந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் மீத்தொட்டமுல்லையில் குப்பை கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொழும்பில் சேரும் திண்மக் கழிவுப் பொருட்களை பிலியந்தலைக்கு எடுத்துச் சென்று கொட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. இருப்பினும் பிரதேச மக்களின் எதிர்ப்புக் காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இக்குப்பைகளைக் கொட்டுவதற்கு வேறு பிரதேசங்களும் முன்மொழியப்பட்டன. அப்பிரதேசங்களைச் சேர்ந்த பிரதேச மக்களும் ஆட்சேபனைகளைத் தெரிவித்ததால் அத்திட்டங்களும் கைவிடப்பட்டன.

கொழும்பில் சேர்கின்ற கழிவுப் பொருட்களை முறையாக அப்புறப்படுத்துவதில் எழுந்துள்ள இந்நெருக்கடியால் ஒவ்வொரு இடங்களிலும் குப்பைகள் நிரம்பிக் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. அத்தோடு பல நாட்களாக இக்குப்பைகளை அப்புறப்படுத்தாத காரணத்தினால் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. பல பிரதேசங்களில் வீட்டு இலையான்களின் பெருக்கமும் அவதானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் சேருகின்ற திண்மக் கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்துவதில்' எழுந்துள்ள இந்நெருக்கடியானது பெரும் ஆரோக்கியப் பிரச்சினையாக மாறும் கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கின்றது.

இவ்வாறான சூழலில் கொழும்பில் சேருகின்ற திணமக் கழிவுப் பொருட்களை புத்தளம் அறுவைக்காட்டுக்கு எடுத்துச் சென்று அங்குள்ள குழிகளை நிரப்பும் திட்டம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. புத்தளம் சிமெந்துத் தொழிற்சாலையின் சிமெந்து உற்பத்திக்கு தேவையான சுண்ணாம்புக்கல் அறுவைக்காட்டில் அகழப்படுகின்றது. இதன் விளைவாக அங்கு குழிகள் ஏற்பட்டுள்ளன. அக்குழிகளையே கொழும்பு குப்பைகளைக் கொண்டு- நிரப்புவதற்கு திட்டமிடப்படுகின்றது. இத்திட்டத்தை 2007 ஆம் ஆண்டில் முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டது. என்றாலும் நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலையினால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

கொழும்பு குப்பை தொடர்பில் தற்போது எழுந்துள்ள நெருக்கடிக்குத் தீர்வாக அவற்றை அறுவைக்காட்டுக்கு எடுத்து செல்லுவது குறித்து மீண்டும் கவனம் செலுத்தப்படுகின்றது.

இவ்வாறான பின்புலத்தில் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொழும்பில் சேரும் திண்மக் கழிவுப் பொருட்களை புத்தளம் அறுவைக்காட்டுக்கு எடுத்துச் சென்று அங்குள்ள குழிகளை நிரப்பும் திட்டத்தை பெருநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்வைத்தார். இச்சமயம் திட்டத்திற்கு வர்த்தக வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் கடும் ஆட்சேபம் வெளிப்படுத்தினார்.

'ஏற்கனவே சிமெந்துத் தொழிற்சாலை, அனல் மின் நிலையம். இறால் பண்ணைகள் உள்ளிட்ட பலவற்றினால் புத்தளம் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டால் புத்தளம் மேலும் பாதிக்கப்படும். அதற்கு இடமளிக்க முடியாது. கொழும்பில் சேருகின்ற திண்மக் கழிவுப் பொருட்களை 125 கிலோ மீற்றர்களுக்கு அப்பாலுள்ள அறுவைக்காட்டுக்குத்தானா எடுத்துச் செல்ல வேண்டும்? அதனை விடவும் கிட்டிய இடங்களை அடையாளம் காண முடியாதா? எனவும் கேள்வி எழுப்பி அமைச்சர் பதியுதீன் இத்திட்டத்திற்கு ஆட்சேபனை தெரிவித்திருந்ார்.

இவ்வாறான நிலையில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையில் அவரது அமைச்சில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் ஒருவர், 'கட்டட நிர்மாணங்களுக்காக பாறாங்கற்கள் உடைத்து- அகழப்பட்ட பல குழிகள் அறுவைக்காட்டை விடவும் கொழும்புக்கு கிட்டிய தூரத்தில் உள்ளனவே. இக்குப்பைகளைக் கொண்டு அக்குழிகளை நிரப்ப முடியுமே? என கேள்வி எழுப்பிய போது, அமைசசர் "அவ்வாறான இடங்களை இக்குப்பைகளைக் கொண்டு நிரப்பும் நடவடிக்கையை முன்னெடுக்க முன்னரே அவற்றுக்கு எதிர்ப்புகள் வந்தன. அதன் காரணத்தினால்தான் அறுவைக்காட்டிலுள்ள குழிகளை இக்குப்பைகளைக் கொண்டு நிரப்ப எதிர்பார்க்கப்படுகிறது" எனக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் சுற்றாடல் அதிகார சபையினதும் சூழலியலாளர்களதும் அறிக்கை கிடைக்கப் பெற்றதும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் இத்திட்டத்தை முன்னெக்க எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க, 'இத்திட்டத்திற்கு எவராவது எதிர்ப்புத் தெரிவித்தால் கொழும்பு குப்பையால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அவர்களே பொறுப்புக் கூற வேண்டி ஏற்படும்' என்றும் குறிப்பிட்டுயுள்ளார்.

இவ்வாறு கொழும்பு திண்மக் கழிவுப் பொருட்களை அகற்றுவதில் பெரும் இழுபறி நிலை ஏற்பட்டிருக்கின்றது. என்றாலும் இவ்விவகாரம் நியாயபூர்வமாக அணுகப்பட்டு எவரும், எந்தப் பிரதேசமும் பாதிக்கப்படாத வகையில் தீரத்து வைக்கப்பட வேண்டும். அதுவே சகலரதும் எதிர்பார்ப்பாகும். ஏனெனில் ஏற்கனவே கொழும்பு குப்பைகள் மாதம்பிட்டியவில் கொட்டப்பட்டன.

அதற்கு பிரதேசவாசிகள் தொடராக எதிர்ப்பு தெரிவித்து வரவே அது மீதொட்டமுல்ல பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அனர்த்தம் ஏற்பட்டதால் இக்குப்பைகளை பிலியந்தலவுக்கும் வேறு பிரதேசங்களுக்கும் எடுத்து செல்ல உத்தேசிக்கப்பட்டது. அவ்வப் பிரதேசங்களிலும் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டதால் அறுவைக்காடு குறித்து- கவனம் செலுத்தப்படுகின்றது.

இத்திண்மக் கழிவுப் பொருட்களை அகற்றுவதில் பிர்சசினை ஏற்படும் போது அவற்றை இடத்திற்கு இடத்திற்கு இடம் மாற்றிக் கொட்டுவதால் பிரச்சினைக்கு உறுதியான தீர்வைக் காண முடியாது.ஆகவே சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இத்திண்மக் கழிவகற்றல் தொடர்பாக எழுந்துள்ள நெருக்கடிக்கு நிலையான தீர்வு காணப்பட வேண்டும். 


Add new comment

Or log in with...