Thursday, April 25, 2024
Home » பாலினம் சார்ந்த வன்முறைகளை தடுக்க 3 மிக முக்கிய சட்டங்களை கொண்டுவர நடவடிக்கை

பாலினம் சார்ந்த வன்முறைகளை தடுக்க 3 மிக முக்கிய சட்டங்களை கொண்டுவர நடவடிக்கை

- சமூக நலனை மேம்படுத்தவும் அரசினால் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள்

by Rizwan Segu Mohideen
October 11, 2023 6:18 am 0 comment

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய நாட்டில் ஆண், பெண் பாலினம் சார்ந்த வன்முறைகளை தடுப்பதற்கான மிக முக்கியமான 03 சட்டங்களை கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகாரம், சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியிருக்கும் அதேநேரம், 10 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் பெண்கள் பாதுகாப்புக்கான மத்தியஸ்தானங்களை நிர்மாணிப்பதற்கும் திட்டமிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விசேட பணிப்புரைகளுக்கமைய அரசாங்கம், சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் விசேட கவனத்துடன் செயற்படுகின்றது.

அதற்கமைய பெண்களின் பிரச்சினைகளை அறிவிப்பதற்காக தற்போதும் 24 மணித்தியாலங்கள் இயங்கும் 1938 என்ற தொடர்பு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் விட்டுச் செல்லப்படும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக “கவுலுவ” என்ற வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பெண்களின் சுகாதார பாதுகாப்பு மிக முக்கியமானது என்ற வகையில், அதற்காக பயன்படுத்தப்படும் பெண்களுக்கான செனிட்டரி துவாய்களின் வரியை குறைக்கும் முயற்சிகளில் அமைச்சு தலையீடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேபோல் ஆண்,பெண் பாலினம் சார்ந்த வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும், ஆண்,பெண் பாலின சமத்துவச் சட்டம், பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுச் சட்டம், பெண்கள் வலுவூட்டலுக்கான சட்டம் ஆகிய முக்கியமான மூன்று சட்டங்களை கொண்டுவருவதற்கான முன்னெடுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் ஒதுக்கீடுகள் ஊடாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதோடு, அடுத்த ஐந்து வருடங்களில் (2024 – 2028) மேற்படி திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்கீழ் இளம் பெண்கள், விதவைகள், சிறைச்சாலையிலிருக்கும் பெண்கள், தோட்ட தொழில் செய்யும் பெண்கள், குறைந்த வருமானம் பெரும் நகர பிரதேசங்களை சேர்ந்த பெண் தொழில் முயற்சியாளர்கள் ஆகியேரை வலுவூட்டும் வகையில் சுய தொழில் முறைகள் செயற்படுத்தப்படவுள்ளன.

அதேபோல் 10 மாவட்டங்களை உள்ளடக்கி பெண்களுக்கான பாதுகாப்பு மத்தியஸ்தானங்கள் உருவாக்கப்படவுள்ளதோடு, பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு, சமூக வலுவூட்டல் அமைச்சினால் பல்வேறு விசேட வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கர்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான 45,000 போஷாக்கு கொடுப்பனவு வழங்கபட்டு வரும் நிலையில், 6 மாதங்கள் வரையான கர்ப காலத்திலும் பாலூட்டும் 4 மாதங்களிலுமாக 10 மாதங்களுக்கு அந்தச் சலுகையை பெற்றுக்கொள்ள முடியும்.

மறுமுனையில் 2023 ஆம் ஆண்டின் 155,000 பாலர் பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதேபோல் “குரு அபிமானி” வேலைத்திட்டத்தின் கீழ் பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு 2500/- கொடுப்பனவினை வழங்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், சிறுவர் மற்றும் மகளிர் பிரச்சினைகள் தொடர்பில் மாவட்ட மட்டத்தில் மாதந்த கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

போஷாக்கு குறைப்பாடு இருப்பதாக அறியப்பட்டுள்ள மொனராகலை, காலி, முல்லைத்தீவு, அனுராதபுரம், நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களின் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு போஷாக்கு மிகுந்த பிஸ்கட்டுக்களை வழங்க எதிர்பார்த்திருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT