நீதிமன்ற கூரை பிரித்து கஞ்சா திருடியோர் சிக்கினர் | தினகரன்

நீதிமன்ற கூரை பிரித்து கஞ்சா திருடியோர் சிக்கினர்

 
புத்தளம் மாவட்ட நீதிமன்றத்திலிருந்த கஞ்சாவைத் திருடிய இரு சந்தேகநபர்கள் கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். 
 
கடந்த மே மாதம் 05 ஈம் திகதி புத்தளம் மாவட்ட நீதிமன்ற வழக்குடன் தொடர்புடைய பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கூரை கழற்றப்பட்டு கயிற்றின் உதவியுடன் அறையினுள் இறங்கி அங்கிருந்த சுமார் 20 கிலோவுக்கு அண்ணளவான கேரள கஞ்சா திருடப்பட்டிருந்தது. 
 
இந்தச் சம்பவம் தொடர்பில் எந்த தகவலும் இல்லாதிருந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (20) இரவு புத்தளம் பாலாலி சந்திக்கு சற்று தொலைவில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்ததோடு அவர்களால் மறைத்து வைத்து கொண்டு செல்ப்பட்ட சுமார் ஆறு கிலோ எடையுள்ள கேரள கஞ்சா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 
 
 
பின்னர் சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட நேர விசாரணைகளிலிருந்து, குறித்த திருட்டுடன் மூவர் சம்பந்தப்பட்டிருந்த விடயம் தெரிய வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 
 
இவர்கள், தாம் திருடிய கஞ்சாவை, பகுதி பகுதியாக அவ்வப்போது விற்பனை செய்து வந்துள்ளதோடு, மிகுதியை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்ற போதே கைது செய்யப்பட்டதாக சந்தேகநபர்களிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. 
 
அத்துடன் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா சிறுவர்களுக்கு கடைகளில் விற்கப்படும் இனிப்புப் பண்ட பைக்கற்றுகளில் சந்தேகம் ஏற்படாத வகையில் பொதி செய்யப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர் திருடப்பட்ட நீதிமன்றத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பொதியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு மோட்டார் சைக்கிள் ஒன்றும், முச்சக்கர வண்டியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. 
 
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த புத்தளம் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.  புத்தளம் பொலிஸ் நிலைய தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் அநுர குணவர்தன தலைமையிலான குழுவினரே இந்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
 
(புத்தளம் விஷேட நிருபர் - எம்.எஸ். முஸப்பிர்)
 
 

Add new comment

Or log in with...