பிணையில் சென்ற ஞானசாரர் கைதாகி மீண்டும் பிணையில் (UPDATE) | தினகரன்


பிணையில் சென்ற ஞானசாரர் கைதாகி மீண்டும் பிணையில் (UPDATE)

 
பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், பொலிஸ் திட்டமிட்ட குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
 
வெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், அவர் கைது செய்யப்பட்டு, கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 
பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
 
நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காத நிலையில் பிடியாணை பிறக்கப்பட்டிருந்த அவர், இன்று (21) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜரானதை அடுத்து, ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்டிருந்த பிணையின் கீழ் விடுவிக்கப்பட்டார்.
 
ஜாதிக பல சேனா அமைப்பின் செயலாளர் வட்டரெக்க விஜித தேரரினால், கொழும்பு நிப்போன் ஹோட்டலில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த (2014.04.19) ஊடகவியலாளர் மாநாட்டிற்குள் பலாத்காரமாக புகுந்து, அந்நிகழ்விற்கு குழப்பம் விளைவித்தமை, மிரட்டல் விடுத்தமை உள்ளிட்ட 8 குற்றச்சாட்டுகள் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு (758/14), கொம்பனித் தெரு பொலிசிற்கு முன்னால் குர்ஆனையும் இஸ்லாத்தையும் அவமதிக்கும் வகையில் கருத்துகள் வெளியிட்டமை தொடர்பான வழக்கு, ஆகிய இரு வழக்குகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக விதிக்கப்பட்ட தினத்தில் சமூகமளிக்காமை தொடர்பில் அவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 
இதேவேளை, குறித்த வழக்குகள் தொடர்பில் இன்றைய தினம் (21) விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் நீதிமன்றிற்கு ஆஜரானதை அடுத்து, அவர் மீது விதிக்கப்பட்ட பிடியாணைகளை நீதிமன்றம் மீளப் பெறுவதாக நீதிபதி லங்கா ஜயரத்ன தெரிவித்தார்.
 
குறித்த இரு வழக்குகள் தொடர்பில், ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த அவரை, அதே பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
குறித்த வழக்குகள் தொடர்பிலான விசாரணைக்காக உரிய முறையில் ஒத்துழைப்பு வழங்கி நீதிமன்றில் சமூகளித்திருப்பதை வழக்கு அறிக்கையிலிருந்து பரீட்சித்த நீதவான், கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரே ஒரு முறை, நீதிமன்றிற்கு ஆஜராகாத போதிலும் அதற்கடுத்த தினத்தில் முன்னிலையானமை காரணமாக, அவரை முந்தைய பிணையில் விடுவிப்பதற்கு உத்தரவிட்டார்.
 
இதனையடுத்து, குறித்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்பில், எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி அவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
 
ஞானசார தேரர் சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி டிரந்த வலலியத்த, ஜயந்த டயஸ் நாணயக்கார, சுதர்சனி குணரத்ன ஆகிய வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்ததோடு, ஞானசார தேரருக்கு உயிராபத்து காணப்படுவதால், நீதிமன்றிற்கு ஆஜராகும்போது உரிய பாதுகாப்பு வழங்குமாறு, அவர் சார்பில் ஆஜரான, ஜனாதிபதி சட்டத்தரணி டிரந்த வலலியத்த நீதிமன்றிற்கு சுட்டிக்காட்டினார்.
 

Add new comment

Or log in with...