பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் BBS உறுப்பினர் இருவர் கைது | தினகரன்

பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் BBS உறுப்பினர் இருவர் கைது

 

- இரு மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளது

- மேலும் நால்வரை தேடி வலை வீச்சு

 

குருணாகல், மல்லவபிட்டிய பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கடந்த மே 21 ஆம் திகதி அதிகாலை மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில், மேற்கொள்ளப்பட்ட மிக நீண்ட விசாரணைகளின் பின்னர், குருணாகல் பொலிஸ் நிலையத்தின் விசாரணை குழுவினால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பான CCTV காட்சிகள் பொலிஸ் விசாரணை பிரிவினரால் பரீட்சிக்கப்பட்டதன் மூலம், குறித்த இரு சந்தேகநபர்களையும் கைது செய்ய முடிந்துள்ளதாகவும், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
கைது செய்யப்பட்ட குறித்த இரு சந்தேகநபர்களும் குருணாகல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை எதிர்வரும் ஜூன் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
குறித்த இருவரும் பொது பல சேனா அமைப்பின் செயற்பாட்டாளர்கள் என, விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் 4 பேரை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், அவர்கள் குறித்த பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
 
கடந்த மே மாதம் 21 ஆம் திகதி, குருணாகல், கொஸ்கெலே பிரதேசத்தில் வைத்து, ஞானசார தேரரை கைது செய்ய, கொழும்பு திட்டமிட்ட குற்றப் பிரிவு அதிகாரிகள் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியை அடுத்து, குருணாகல், மல்லவபிட்டிய முஸ்லிம் பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 

Add new comment

Or log in with...