குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு முதல்வர் முயற்சி | தினகரன்

குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு முதல்வர் முயற்சி

ஊழலை மறைத்து குற்றவாளிகளைக் காப்பாற்றும் வடமாகாண முதலமைச்சரின் தொடர்ச்சியான செயற்பாட்டின் நிமித்தமாகவே இலங்கை தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் முதலமைச்சரில் நம்பிக்கை இழந்திருக்கின்றனர். இதுவே எமது உண்மையான நிலைப்பாடாகுமென இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளர் எம் ஏ.சுமந்திரன் எம் பி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்

தமிழரசுக் கட்சியின் தற்போதைய நடவடிக்கை ஊழலுக்கு எதிரான செயற்பாடேயாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ் அரசு கட்சியின் பேச்சாளர் எம் ஏ.சுமந்திரன் எம்பி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வட மாகாணசபை உறுப்பினர்கள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பித்தமை ஊழல், பணமோசடி, மற்றும் இலஞ்சத்திற்கு எதிரான எமது தீவிரமான செயற்பாடே ஆகும். ஊழலுக்கு எதிராக முதலமைச்சர் எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் தடுக்க முயல்கிறோம் என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றதும், உண்மைக்கு எதிரானதுமாகும்.

ஆரம்பத்திலிருந்தே அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் வெளிவந்தபோது, அதற்கு எதிராக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எமது உறுப்பினர்கள் குரல் கொடுத்து வந்தனர். தனக்கு மிகவும் நெருக்கமானவரான ஐங்கரநேசனுக்கு எதிராக முதலமைச்சர் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டபோது முதலமைச்சரை வற்புறுத்தி மாகாணசபையிலே ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றுவதற்கும் எமது உறுப்பினர்களே காரணமாக இருந்தார்கள். அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அடுத்தநாளே ஐங்கரநேசன் குற்றமற்றவர் என்றும் "அவர் பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டார்" என்று முதலமைச்சர் சொன்னதை எவரும் மறந்திருக்க முடியாது. எமது வற்புறுத்தலின் காரணமாகத்தான் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது.

அந்தவேளையிலும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஐங்கரநேசனுக்கு எதிராகமட்டுமே இருந்தன. அப்படியிருந்தும் அவரை பாதுகாக்கும் முகமாகவே எல்லா அமைச்சர்களுக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக் குழுவினரை முதலமைச்சரே தனியாக தேர்ந்தெடுத்து நியமித்தார். இறுதியில் ஐங்கரநேசன் மட்டுமே குற்றவாளியாக காணப்பட்டார். அமைச்சர் குருகுலராஜா அதிகார வரம்பை மீறினார் என்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்தார் என்றும் குற்றவாளியாக காணப்பட்டார். மற்றைய இரண்டு அமைச்சர்களும் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டனர்.

இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்களின் ஆரம்ப நிலைப்பாடு முதலமைச்சர் நியமித்தகுழு அறிக்கை மூலமாகவும் ஊர்ஜிதமானது. மேமாதம் (19) முதலமைச்சரிடம் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டிருந்தபோதும் குற்றவாளிகளாக காணப்பட்ட 2 அமைச்சர்களையும் பாதுகாக்கும் முகமாக முதலமைச்சர் அவ்வறிக்கையை மறைத்து வைத்திருந்தார். 2 பத்திரிகைகள் அதை வெளிப்படுத்திய பின்தான் மாகாண சபையில் இவ்வறிக்கையை சமர்ப்பித்தார்.

இதன்போதெல்லாம் ஊழலையும் குற்றவாளிகளையும் காப்பாற்ற முதலமைச்சர் எடுத்த இம் முயற்சிகளுக்கெதிராக எமது உறுப்பினர்கள் குரல் கொடுத்துவந்தனர். குற்றவாளிகளாகக் காணப்பட்ட அமைச்சர்களுக்கெதிரான நடவடிக்கையை முதலமைச்சர் எடுக்க வேண்டும் என்றும் அதில் நாம் தலையிடமாட்டோம் என்றும் பகிரங்கமாகவே அறிவித்திருந்தோம்.

முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் குற்றவாளிகளை காப்பாற்றும் தனது முயற்சியை இவ்வேளையில் வேறு விதமாக முன்னெடுத்தார். குற்றவாளிகளாக்கப்பட்ட அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்காமல் அமைச்சர்கள் நால்வரையும் பதவி நீக்கம் செய்யும் தனது யோசனையை முன்வைத்தார்.

குற்றவாளிகளையும் குற்றமிழைக்காதோரையும் ஒன்றாக பதவிநீக்கம் செய்வதென்பது குற்றவாளிகளை காப்பாற்றும் ஒரு நடவடிக்கையே ஆகும். தனது இந்தயோசனையை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரைத் தவிர்த்து மற்றைய கட்சித்தலைத் தலைவர்களுக்கு மட்டும் முதலமைச்சர் வெளிப்படுத்தியிருந்தார். இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் வினவிய பின்னர் தான் காலம் தாழ்த்தி சேனாதிராஜாவுடனும் பேசினார்.

ஊழலுக்கு எதிராக அவர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சித் தலைவர் முதலமைச்சருக்கு கூறியிருந்தார். நால்வரையும் ஒன்றாக நீக்குவதென்பது நிரூபிக்கப்பட்ட குற்றங்களை மழுங்கடிக்கும் செயல் என்றும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் முதலமைச்சருக்கு கூறப்பட்டது. இதே நிலைப்பாட்டையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனும் அவருக்கு கூறியிருந்தார்.

குற்றவாளிகளான அமைச்சர்களுக்கு எதிராக மட்டும் செயற்பட வேண்டும் என்று சம்பந்தனும் சேனாதிராஜாவும் கூறிய கருத்துக்கு மறுநாள் மாகாணசபை உறுப்பினர்களுடைய கருத்துக்களையும் அறிந்த பின் பதிலளிப்பேன் என்று கூறிய முதலமைச்சர் அவ்வாறு செய்யாமல் அடுத்தநாள் மாகாணசபையிலே தன்னுடைய தீர்ப்பை வழங்கினார். நால்வரும் குற்றவாளிகள் என்ற பொய்யான பிம்பத்தை தோற்றுவித்து உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியே இது.

அதனால்தான் அனைத்து குற்றங்களிலிருந்தும் விடுக்கப்பட்ட 2 அமைச்சர்களையும் கட்டாய விடுமுறையில் செல்லுமாறு பணித்தமைக்கு எமது எதிர்ப்பைத் தெரிவித்து வெளிநடப்புச் செய்தோம். ஊழலை மறைத்து குற்றவாளிகளைக் காப்பாற்றும் முதலமைச்சரின் இந்தத் தொடர்ச்சியான செயற்பாட்டின் நிமித்தமாகவே இலங்கை தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் முதலமைச்சரில் நம்பிக்கை இழந்திருக்கின்றனர். இதுவே எமது உண்மையான நிலைப்பாடாகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...