மயிலிட்டி துறைமுகம் இருக்கத்தக்கதாக பருத்தித்துறை துறைமுகத்தில் கவனம் செலுத்துவது எதற்காக? | தினகரன்

மயிலிட்டி துறைமுகம் இருக்கத்தக்கதாக பருத்தித்துறை துறைமுகத்தில் கவனம் செலுத்துவது எதற்காக?

மயிலிட்டி துறைமுகம் இலங்கையிலுள்ள மீன்பிடி துறைமுகங்களில் முதன்மையானதாக திகழ்ந்தது என்று சொல்வதை தவறு என்று சொல்ல முடியாது. காலி துறைமுகம் இலங்கை அரசாங்கத்தால் அபிவிருத்தி செய்யப்படுவதற்கு முன்னர் மயிலிட்டி துறைமுகம் தான் இலங்கை யிலுள்ள மீன்பிடி துறைமுகங்களில் முதன்மையானதாக திகழ்ந்தது.

1983க்கு முன்னர் இலங் கையின் மொத்த மீன் உற்பத்தியில் நாற்பது வீதம் வடபகுதியிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டதாக மீன்பிடி அமைச்சர் மகிந்த அமரவீர நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். இது பின்னர் நான்கு வீதமாக வீழ்ச்சியடை ந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

1983க்கு முன்னர் மயிலிட்டிகிராமத்தில் வாழ்ந்த மீனவக்குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் 1100. மயிலிட்டி துறைமுகத்தில் 1983க்கு முன்னர் ஆயிரத்திற்கு மேற்பட்ட கண்ணாடி இழைப் படகுகளும் டீசல் இயந்திரம் பொருத்தப்பட்ட பாரிய படகுகளும் நங்கூரமிட்டிருக்கும். இலங்கை அரசாங்கம் காலி துறைமுகத்தை அபிவிருத்தி செய்த பின்னரும் மயிலிட்டி துறைமுகம் இலங்கையில் இரண்டாவது பெரிய மீன்பிடி துறைமுகமாகவும் வடபகுதியில் முதன்மையான மீன்பிடி துறைமுகமாகவும் விளங்கியது.

1990ம் ஆண்டு இடம்பெற்ற வலிகாமம் இடப்பெய ர்வுக்கு முன் மயிலிட்டியிலிருந்து தினமும் சராசரியாக பதினாறு லொறிகளில் ஐஸ் மீன் தென்னி லங்கைக்கு அனுப்பப்பட்டது. க.வி.துரைசாமி என்பவரிடம் பத்துக்கு மேற்பட்ட லொறிகள் இருந்தன. இவரது லொறிகள் KVT என்ற பெயரில் காணப்பட்டன.இதை விட NSR என்ற பெயரில் சிவஞானம் என்பவரிடமும் ஐந்து ஆறு லொறிகள் இருந்தன.பிள்ளையார்குட்டி என்பவரும் இராமசாமி என்பவரும் லொறி வைத்திருந்தனர் . இவர்கள் அனைவரும் மயிலிட்டியைச்சேர்ந்த மீன் தொழிலதிபர்கள், சில சமயங்களில் மீன் கூடுதலாக பிடிபட்டால் இவர்கள் லொறிகளை வாடகைக்கு அமர்த்தியும் மீன் அனுப்புவதுண்டு. இவ்வாறு அனுப்பப்படும் மீன்கள் யாவும் சென்.

ஜோன்ஸ் மீன் சந்தை என தற்போது அழைக்கப்படும் கொழும்பு புறக்கோட்டை மீன் சந்தைக்கு எடுத்துச்செல்லப்படும். இவ்வாறு லொறிகளில் அனுப்பப்படும் மீன்கள் பழுதடை யாமலிருப்பதற்காக ஐஸ் கட்டிகளில் பாதுகாக்கப்பட்டே எடுத்துச்செல்லப்படும். கொழும்புக்கு அனுப்பப்படும் மீன் லொறிகளுக்கு ஐஸ் வழங்கும் நோக்குடன் மயிலிட்டியில் மூன்று ஐஸ் மில்கள் இயங்கி வந்தன. இந்த ஐஸ் மில்களில் உற்பத்தி செய்யப்படும் ஐஸ் போதாத சந்தர்ப்பங்களில் கொழும்பில் எலிபன்ட் ஹவுஸ் நிறுவனத்திலிருந்து ஐஸ் எடுத்து வரப்படும்.

1990ம் ஆண்டு இடம்பெற்ற வலிகாமம் இடப்பெயர்வுடன் மயிலிட்டி மக்கள் முற்று முழுதாக இடம் பெயர்ந்து அகதி முகாம்களிலும் உறவினர் நண்பர்களின் வீடுகளிலும் பல்வேறு இன்னல்கள் மத்தியில் கடந்த இருபத்தேழு வருடங்களாக வாழ்க்கையை ஒட்டி வருகின்றனர்.

இப்போது மீன்பிடி அமைச்சர் மகிந்த அமரவீர 700 கோடி ரூபா செலவில் பருத்தித்துறை துறை முகத் தை வடபகுதியிலேயே பெரிய மீன்பிடி துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்போவதாக நாடா ளுமன்றத்தில் அறிவித்துள்ளார். பருத்தித்துறை துறைமுகம் எந்த சந்தர்ப்பத்திலும் மீன்பிடி துறை முகமாக இருக்கவில்லை.

பருத்தித்துறை துறைமுகம் ஒரு வாணிபத்துறைமுகம். பருத்தித்துறை துறை முகத்திற்கு வரும் கப்பல்களுக்கு சமிஞ்ஞை காட்டும் நோக்குடனேயே பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் பருத்தித்துறையில் வெளிச்ச வீடு அமைக்கப்பட்டது. இந்த வெளிச்ச வீடு தற்போது சுற்றுலா மையமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது தினமும் நூற்று க்கண க்கான உள்ளூர் வெளியூர் சுற்றுலாப்பயணிகள் இந்த வெளிச்ச வீட்டை பார்வையிட்டு வருகின்றனர்.

பருத்தித் துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக பருத்தித்துறை நான்காம் குறுக்குத்தெரு வரை உள்ள காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக தெரிய வருகிறது. இதற்கு அப்பகுதியில் வசிக்கும் 315 குடும்பங்கள் எதிர்ப்புத்தெரிவித்துள்ளன. இப்பிரதேசத்தில் வாழும் மீனவர்களின் 275 படகுகள் இப்பகுதியில் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. துறைமுகம் விஸ்தரிக்கப்படும் பட்சத்தில் வெளிச்ச வீட்டின் கதி என்னவாகும் என்பது தெரியவில்லை.

இருப த்திரண்டு கிலோமீற்றர் தூரத்தில் மயிலிட்டி துறைமுகம் இருக்கும் போது அருகில் எதற்காக இன்னொரு புதிய மீன்பிடி துறைமுகம்? அத்துடன் மயிலிட்டியுடன் ஒப்பிடும் போது பருத்தித்துறையில் மீன்பிடியை தொழிலாகக்கொண்ட குடும்பங்கள் குறைவு என்றும் சொல்லலாம்.

பருத்தித்துறையில் வாழும் மீனவ சமுதாயத்தைச்சேர்ந்த பலர் அரச துறையிலும் எனைய துறைகளிலும் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். எனவே பிரதேச மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் கோடிக்கணக்கான ரூபா செலவில் .

பருத்தித்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதை விட அகதி முகாம்களிலும் உறவினர் நண்பர்களின் வீடுகளிலும் பல்வேறு இன்னல்கள் மத்தியில் கடந்த இருபத்தேழு வருடங்களாக வாழ்க்கையை ஒட்டி வரும் மயிலிட்டி மக்களை அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்றம் செய்து மயிலிட்டி துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதே அனைவருக்கும் நன்மை பயக்கும்.

ந. பரமேஸ்வரன்


Add new comment

Or log in with...