அரிசிப் பிரச்சினைக்கு தீர்வு காண தேசிய கொள்கையொன்று அவசியம் | தினகரன்

அரிசிப் பிரச்சினைக்கு தீர்வு காண தேசிய கொள்கையொன்று அவசியம்

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை கொட்டித் தீர்த்தாலும் உலர் வலயத்தில் வரண்ட காலநிலை மாற்றமின்றித் தொடர்கின்றது. தற்போது நீர்த் தேக்கங்களிலும் நீரின் அளவு குறைந்துள்ளது. கடந்த வரட்சியின் பின்னர் சரியான நேரத்தில் மழை பெய்யாததனால் இம்முறை பெரும் போகத்தில் ரஜரட பிரதேசத்தைச் சேர்ந்த அநேகமான வயல்களில் நெற் பயிர்ச் செய்கை கைவிடப்பட்டுள்ளது. குள த்து நீரின் உதவியுடன் பயிர் செய்யப்பட்ட பெரும்போக காணிகளில் நெல் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இம்முறை அறுவடை ஏனைய காலங்களைப் போல் செழிப்பாக இருக்காதென விவசாயிகள் கூறுகின்றார்கள். அதற்குக் காரணம் சரியான முறையில் நீர் கிடைக்காதது என விவசாயிகள் கூறுகின்றார்கள்.

அறுவடை செய்த நெல்லை விற்று கடனை அடைத்த பின் எதுவும் மிஞ்சாது எனக் கூறும் அவர்கள் மீண்டும் விவசாயம் செய்வதற்குத் தேவையானவற்றை வாங்கும் நிலைமையிலும் தாங்கள் இல்லையென கூறுகின்றார்கள். தற்போதுள்ள அரிசி தட்டுப்பாடு காரணமாக தனியார் வர்த்தகர்களும், நெல் ஆலை உரிமையாளர்களும் மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகளும் வயலுக்கே சென்று நெல்லை கொள்வனவு செய்கின்றார்கள்.

இதன் காரணமாக அரசியின் உத்தரவாத விலையை விட ஒரு ரூபாயோ இரண்டு ரூபாயோ தங்களுக்கு கிடைப்பதால் தனியாருக்கே விற்பனை செய்கின்றார்கள். இதன் காரணமாக இம்முறை பெரும் போகத்தில் விவசாயிகளின் நெல்லை கொள்வனவு செய்ய எதிர்பார்த்திருந்த நெல் சந்தைப்படுத்தல் சபையின் எண்ணத்தை நிறைவேற்ற முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உண்மையில் எமது நாடு நீர்ப்பாசனத் துறையில் உலகில் மிகவும் முன்னேற்றமடைந்த நாடாகும். எமது முன்னோர்கள் ரஜரட்டவில் ஆட்சி அமைத்த வேளையில் அவர்கள் அநுராதபுரத்தை இயற்கை அனர்த்தம் குறைந்த இடம் என்பதனாலேயே தெரிவு செய்தார்கள். அநுராதபுரத்தில் இருந்த ஒரேயொரு இயற்கைப் பாதிப்பு வரட்சியாகும். ஆனால் மழை நீரை தேக்கி குளங்களை நிரப்புவதும், நிலத்தடி நீரை பூமிக்கு மேலே கொண்டு வருவது எவ்வாறென்றும் எமது முதாதையர்கள் அறிந்திருந்தார்கள்.

ஆனால் எதிரிகளின் ஆக்கிரமிப்பால் அந்த அறிவு எமக்கு கிடைக்காமற் போனது எமது துரதிர்ஷ்டமேயாகும். அதனால் அவ்வறிவு தொடர்ந்து வளர்ச்சி பெறாமல் போனது. எமது பொறியியலாளர்கள் அது குறித்து ஆராய்ந்து வந்தாலும் இன்னும் வெற்றி பெறவில்லையென்றே கூறலாம். அன்று இந்த அறிவு சாதாரண மக்களிடையே காணப்பட்டது. அவர்களின் அந்த அறிவு தகப்பனிடமிருந்து பிள்ளைகளுக்கு என்று பரம்பரை பரம்பரையாக கொண்டு செல்லப்பட்டது.

ஆனால் இன்று அவ்வாறான அறிவுடையவர்கள் எம்மிடையே உயிரோடு இருக்கின்றார்களா என்பது சந்தேகமே. பாடசாலைக் கல்வி மூலமாவது அது தொடர்பாக ஏதேனும் ஆய்வுகளை மேற்கொண்டால் இயற்கைக் சூழலை அழிக்காத, நீர்மூலங்கள் தொடர்பாக புரிந்துணர்வோடு செயல்படும், நீர் தேக்கங்களை அழிவுக்கு உட்படுத்தாத எதிர்கால சமுதாயம் உருவாகும் அதன் மூலம் விவசாய கிராமங்களை மென்மேலும் முன்னேற்றம் அடையச் செய்யும் மன மற்றும் உடல் பலத்தை அதிகரிக்கச் செய்ய முடியும்.. இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டாலும் அதனைக் குறைத்து மீண்டும் அரிசியில் தன்னிறைவு பெற்ற நாடாக நிர்மாணிக்க முடியும். இம்முறை பெரும்பொக நெல் அறுவடை மிகவும் குறைந்து காணப்படுகின்றது. இந்நிலைமையில் எமக்கு தேவையான நெல்லை உற்பத்தி செய்ய ஈரவலயத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

ஆனாலும் எதிர்பாராத வகையில் பெய்த பெரும் மழையால் அந்த எதிர்பார்ப்பு வீணாணது. கடந்த டிசம்பர் மாத ஆரம்பத்தில் நாடு பெரும் வரட்சிக்கு முகங்கொடுத்தது. நெல் உற்பத்தி செய்யக் கூடிய 730000 ஏக்கர் வயல் காணியில் 30 வீதம் மாத்திரமே செய்கை பண்ணப்பட்டது. அதனால் எதிர்காலத்தில் நாடு அரிசித் தட்டுப்பாட்டை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். அது அரசுக்கு ஏற்ற நிலைமையல்ல. ஆகவே அனர்த்தங்களுக்கு முகங் கொடுப்பதோடு இதற்கும் தீர்வு காண வேண்டும்.

குறுகிய கால நிவாரணமாக அரிசியை இறக்குமதி செய்து இதற்குத் தீர்வு காணலாம். நீண்ட கால தீர்வு குறித்து ஆராயுமிடத்து இலங்கைக்குக் கிடைக்கும் மழையை எமது முன்னோர் போன்று நாட்டின் தேசிய கொள்கையில் செயல்படுத்த வேண்டிய காலம் உருவாகியுள்ளது. அங்கு நீர் முகாமைத்துவத்துக்கு முதலிடம் வழங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் எதிர்காலத்தில் மசகு எண்ணெய்யை விட குடிநீருக்கு பெறுமதி அதிகரித்துக் காணப்படும்.

அதனால் குறுகிய அரசியல் நோக்கங்களை கைவிட்டு தேசிய கொள்கையொன்றை தயாரித்து அதன்படி நாட்டை வழிநடத்துவது அனைவரினதும் முக்கிய பணியாக மாறியுள்ளது. அரசர்களுடைய காலத்தில் பாரிய நீர்பாசனத் திட்டங்களுக்கு உரிமை கூறிய நாடு எமது நாடாகும். ஆகவே அது தொடர்பாக ஆராய்ந்து, நாட்டை மீண்டும் இவ்வாறான பாதிப்புக்கு உட்படாத வகையில் அபிவிருத்தி செய்ய வேண்டும். அப்போது புத்தகத்தில் உள்ள பொருளாதாரத்தை விட செயன்முறை ரீதியான பொருளாதார முறைகள் குறித்து கவனம் செலுத்தினால் மிகவும் வெற்றிகரமானதாக அமையும்.

தற்போதுள்ள நிலைமையில் நெல்லுக்கு உயர்ந்த கேள்வியுள்ளது. அதிக விலைக்கு நெல்லை விலைகொடுத்து வாங்க தனியார் வியாபாரிகள் முன் வந்துள்ளதால் சில விவசாயிகள் உணவுக்கு மாத்திரம் நெல்லை வைத்துக் கொண்டு விதை நெல்லைக் கூட விற்று வருகின்றார்கள்.

அதனால் எதிர்காலத்தில் விதை நெல்லுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை தோன்றும். சில பிரதேசங்களில் விவசாயிகள் தங்கள் உணவுக்கான நெல்லைக் கூட விற்று வருவதால் அவர்களின் பாவனைக்கான அரிசியையும் சந்தையில் வாங்க வேண்டிய நிலைமை ஏற்படும். எவ்வாறாயினும் கடந்த காலங்களில் சுமாராக 76 ஆயிரம் மெற்ரிக் தொன் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தாலும் அது தற்போது கிரமமாக குறைந்து வருகின்றது என நெல் விற்பனை சபை கூறுகின்றது.

களஞ்சியத்தில் உள்ள நெல்லை கூ.மொ.விற்பனை நிலையங்களுக்கு தினமும் வழங்குவதாக நெல் விற்பனை சபை கூறுகின்றது. பெரும் மழை பெய்த்தால் அமைச்சு மேற்கெள்ள எதிர்பார்த்த அனைத்து திட்டங்களும் வெற்றியளிக்காது போயுள்ளன. ஆனாலும் தட்டுப்பாடின்றி மக்களுக்கு அரிசியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் கூறினார்.

ரசிக கொடுதுரகே
தமிழில்: வீ. ஆர். வயலட்


Add new comment

Or log in with...