42 தமிழகப் படகுகள் நிபந்தனைகளுடன் விடுவிப்பு; இந்திய அரசுக்கு இலங்கை அறிவிப்பு | தினகரன்

42 தமிழகப் படகுகள் நிபந்தனைகளுடன் விடுவிப்பு; இந்திய அரசுக்கு இலங்கை அறிவிப்பு

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீன்பிடி படகுகளில் 42 படகுகளை முதற்கட்டமாக கடும் நிபந்தனைகளுடன் விடுவிக்க தயாரெனவும் அவற்றை பொறுப்பேற்குமாறும் , இந்திய மத்திய அரசுக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்பட்டாலும் அத்துமீறும் தமிழக மீனவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையும், மீன்பிடிப் படகுகளை கைப்பற்றுவதும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் இலங்கை அரசு திட்டவட்டமாக இந்திய அரசுக்கு அறிவித்துள்ளது. விடுவிக்கப்படும் படகுகள் மீண்டும் இலங்கை கடல் எல்லைக்குள் வரக்கூடாது என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு முன்வைத்துள்ளது. கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின்பேரில் இலங்கை கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மீன்பிடிப்படகுகளை அவை கைப்பற்றப்பட்ட ஒழுங்கில் கட்டம் கட்டமாக விடுவிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி 2015 ஆம் ஆண்டு கைப்பற்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 42 தமிழக மீன்பிடி படகுகளை விடுவிக்க இறுதியாக இருநாட்டு அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில்இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட காரணத்திற்காக இதுவரை தடுத்து வைக்கப்பட்டுள்ள 140 மீன்பிடி படகுகளும் நிபந்தனைகளுடன் படிப்படியாக விடுவிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

சுமார் 35 வருடங்களுக்கு மேல் நீடித்து வரும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கமும் முயற்சித்தபோதும் அது பயனளித்திருக்கவில்லை.

எனினும் இந்த அரசு இந்திய மீன்பிடிப்படகுகளை தடுத்து வைப்பதற்கு 2015 ஆம் ஆண்டு முதல் எடுத்த தீர்மானமானத்துக்கு இந்திய அரசாங்கம் சாதகமான சமிக்ஞையை வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் அமரவீர தெரிவித்தார்.

லக்ஷ்மி பரசுராமன்


Add new comment

Or log in with...