அரசின் ஒத்துழைப்புடன் எனக்கெதிராக கூட்டுச் சதி | தினகரன்

அரசின் ஒத்துழைப்புடன் எனக்கெதிராக கூட்டுச் சதி

தெற்கு அரசின் சதித்திட்டமொன்றுக்கு அமைவாகவே வடக்கு மாகாண சபையில் குழப்பங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இதன் ஓர் அங்கமாகவே எனக்கு எதிராகக் கூட்டுச் சதியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்தும், முதலமைச்சர் தொடர்பான தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டைக் கண்டித்தும் நேற்று வெள்ளிக்கிழமை(16) யாழ். நல்லூரில் மாபெரும் கண்டனப் பேரணியொன்று இடம்பெற்றது. நல்லூர்க் கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமான குறித்த பேரணி நல்லூர் கோவில் வீதியிலுள்ள வடமாகாண முதலமைச்சர் வாசஸ்தலத்தை சென்றடைந்ததைத் தொடர்ந்து பேரணியில் கலந்து கொண்ட நூற்றுக் கணக்கானோர் முன்னிலையில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றியதாவது: எமது அமைச்சர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும், அது சம்பந்தமான அறிக்கைகள் வெளிவரவிருப்பதாகவும் தெரிவித்தே எனக்கெதிரான திட்டமிட்ட சதியொன்று நடாத்தி முடிக்கப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய அமைச்சர்களை நான் ஒருவேளை காப்பாற்றியிருந்தால் ஊழல் புரிந்தவர்களை நான் காப்பாற்றி விட்டேன் என்பதை ஒரு காரணமாக முன்வைத்து எனக்கெதிராக நடவடிக்கை எடுத்திருப்பார்கள். நான் நேர்மையான வகையில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களைத் தண்டித்த காரணத்தால் எனக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். ஆகவே, என் மீது நடவடிக்கை எடுத்துள்ளவர்களின் கபட நோக்கத்தை நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

எங்கள் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாத சூழலில் வடமாகாண சபையில் தேவையில்லாத விடயங்களைப் பேசிப் பேசிக் காலத்தை வீணடிக்கின்றனர்.

இவ்வாறான சூழலிலே எனக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் எனக்கு கவலையில்லை. ஆனால், எத்தகைய எதிர்ப்புக்கள் வந்தாலும் நாங்கள் எங்கள் கடமைகளைத் தொடர்ந்தும் சரிவர நிறைவேற்றுவோம். கடமையைச் செய்யும் ஒருவனுக்குத் தோல்வியுமில்லை, வெற்றியுமில்லை.

வடமாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை விடுத்ததும் எங்களுடைய உறுப்பினர்களே. ஏதோ தவறுகள் நடந்திருக்கிறது என்பதை எனக்கு நேரடியாக, பிரத்தியேகமாகக் கூறியிருந்தால் உரிய நடவடிக்கையை நான் முன்னெடுத்திருப்பேன். ஆனால், தங்களுடைய பத்திரிகையில் பெயர் வரவேண்டுமென்பதற்காக இயங்கியமையால் தான் நாங்கள் விசாரணைக் குழுவை அமைத்தோம்.

நாங்கள் அமைத்த விசாரணைக்குழு இரண்டு அமைச்சர்களைக் குற்றவாளிகளாக இனங்கண்டது. குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஏனைய இரு அமைச்சர்களுக்கெதிராகவும் முறைப்பாட்டாளர்கள் வருகை தராமையால் விசாரணையைத் தொடர்ந்தும் மேற்கொள்ள முடியாமல் போய்விட்டது.முறைப்பாட்டாளர்கள் வருகை தராததையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டதால் தாங்கள் குற்றவாளிகள் இல்லை என அவர்கள் மார் தட்டுகின்றனர்.சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தொடர்பாக வேறு பல குற்றச்சாட்டுக்களும் எங்களுக்குத் கிடைத்துள்ளன. இது சம்பந்தமாக மேலுமொரு விசாரணை இடம்பெறவுள்ளது

வடமாகாணத்தின் முதலாவது மாகாண சபையாக எமது வடமாகாண சபை அமைந்துள்ளது. ஆகவே, இந்த சபையிலே ஊழல் சம்பந்தமாக நாங்கள் உரிய நடவடிக்கை எடுக்காவிடில் தொடர்ந்தும் நாங்களே பாதிப்படைய வேண்டிய நிலைமை உருவாகும்.

இவ்வாறான பெருமளவான சனக் கூட்டம் எங்களுக்குச் சார்பாகத் திரண்டிருக்கும் நிலையில் என்னுடைய பாதை சரியானது என்றே எண்ணத் தோன்றுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

செல்வநாயகம் ரவிசாந், சுமித்தி தங்கராசா, 


Add new comment

Or log in with...