வடக்கு முதல்வரை ஆதரித்து ஹர்த்தால், ஆர்ப்பாட்ட பேரணி | தினகரன்

வடக்கு முதல்வரை ஆதரித்து ஹர்த்தால், ஆர்ப்பாட்ட பேரணி

வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்தும், முதலமைச்சர் தொடர்பான தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டைக் கண்டித்தும் நேற்று யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா பிரதேசங்களில் ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடத்தப்பட்டன.

அதேநேரம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி பகுதிகளில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இதனால் யாழ்ப்பாண மாநகரம் உட்பட யாழ். குடாநாடெங்கும் இயல்பு நிலை முற்றாகப் பாதிப்படைந்திருந்தது.

வெளிமாவட்டங்களிலிருந்து வந்த  பயணிகள் பஸ் போக்குவரத்தைத்தவிர வாகனப் போக்குவரத்துக்களும் ஸ்தம்பிதமடைந்திருந்தன.

இதேநேரம் கிளிநொச்சியில் நேற்றுக் காலை கடைகள் அடைக்கப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்ட போதும் நண்பகலுக்குப் பின்னர் நிலைமை வழமைக்குத் திரும்பியது.

வவுனியாவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட போதும் கடையடைப்பு இடம்பெறவில்லை. தமக்கு உரிய நேரத்தில் தகவல் கிடைக்காததால் கடையடைப்பு செய்யவில்லை என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். மன்னாரில் நிலைமை வழமைபோன்றே காணப்பட்டது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி பகுதிகளில் சில இடங்களில் கடையடைப்பு செய்யவேண்டாம் என சிலர் அச்சுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமாகாண அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன் மற்றும் த.குருகுலராஜா ஆகிய அமைச்சர்களுக்கெதிராகச் சுமத்தப்பட்டிருந்த ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக வடமாகாண முதலமைச்சர் விசாரணைக் குழுவொன்றை அமைத்துச் சம்பந்தப்பட்ட இரு அமைச்சர்களுக்கும் எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபித்திருந்தார்.

இந்நிலையில் வடமாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் பற்றிய விசாரணை அறிக்கை தொடர்பில் விவாதிப்பதற்காக வடமாகாண சபை கடந்த புதன்கிழமை(14) கூடிய போது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட இரு அமைச்சர்களும் வியாழக்கிழமை மதியத்திற்குள் பதவி விலக வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் கோரியிருந்தார். அத்துடன் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஏனைய இரு அமைச்சர்கள் மீதான விசாரணை தொடருமெனவும், அதுவரை அவர்கள் கட்டாய விடுமுறையிலிருக்க வேண்டுமெனவும் கோரியிருந்தார்.

இதனையடுத்து வடமாகாண சபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் வடமாகாண முதலமைச்சருக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்குத் தீர்மானித்ததுடன் அது தொடர்பான கடிதத்தையும் வடமாகாண ஆளுநரை நேரடியாகச் சந்தித்துக் கையளித்திருந்தனர். இதனையடுத்து அடுத்த முதல்வராகத் தற்போதைய வடமாகாண அவைத் தலைவர் சீ .வீ.கே. சிவஞானம் தெரிவு செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவாகவும், ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ள வடமாகாண அமைச்சர்களைக் காப்பாற்றும் வகையில் செயற்படும் தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான செயற்பாட்டைக் கண்டித்தும் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் உள்ளிட்டோர் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருவதுடன் பல்வேறு எதிர்ப்புக்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந் நிலையில் நேற்று நல்லூரில் வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக நேற்றைய தினம் மாபெரும் எழுச்சியொன்று உருவாகியுள்ளது.

ஆர்ப்பாட்டப் பேரணி

நேற்று முற்பகல்-10 மணியளவில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலய முன்றலில் ஒன்று கூடிய பல நூற்றுக் கணக்கான இளைஞர்கள், மதத்தலைவர்கள், பல்வேறு பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் உள்ளிட்டோர் வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவாகப் பல்வேறு சுலோகங்களைத் தாங்கியிருந்ததுடன் பல்வேறு கோஷங்களையும் எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் "தமிழரின் அரசியலைத் தலைமையேற்க முதல்வரே வருக!, தமிழ்மக்களின் மூச்சு, விக்கி ஐயாவின் பேச்சு!', 'துரோகி சுமந்திரன் ஒழிக!', 'தமிழ்மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பு விக்கி ஐயா!', 'சுமந்திரன் சம்பந்தரின் கூட்டுச் சதியை முறியடிப்போம்!',கூட்டமைப்பே கூத்தாடாதே! போன்ற பல்வேறு சுலோகங்களையும் ஏந்தியிருந்தனர். இந்தப் பேரணியில் கலந்து கொண்ட இளைஞர்கள் தமிழரசுக் கட்சிக்கு எதிராக ஆவேச முழக்கங்கள் எழுப்பியிருந்தனர்.

முற்பகல்- 11.15 மணியளவில் நல்லூர் கோவில் வீதியிலுள்ள வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தை ஆர்ப்பாட்டப் பேரணி சென்றடைந்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்ட நூற்றுக் கணக்கான பொதுமக்கள் மத்தியில் வடமாகாண முதலமைச்சர் தோன்றி விசேட உரையாற்றினார்.

சுமித்தி தங்கராசா, செல்வநாயகம் ரவிசாந், பாறூக் சிஹான்


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...