பெங்களூர் சிறையில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் தீவிர ஆலோசனை | தினகரன்

பெங்களூர் சிறையில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் தீவிர ஆலோசனை

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வரும் வேளையில் பெங்களூர் சிறையில் உள்ள அதிமுக அம்மா கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவை, டிடிவி தினகரன் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். இருவரும் 2 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினர்.

தற்போதைய அரசியல் சூழல் குறித்து பெங்களூர் சிறையில் உள்ள பொதுச்செயலாளர் சசிகலாவிடம் ஆலோசிப்பதற்காக டி.டி.வி. தினகரன் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து பெங்களூர் வந்தார். சிறை அதிகாரிகளின் அனுமதி பெற்று, பிற்பகல் 3:50 மணிக்கு சசிகலாவின் உறவினர் டொக்டர் வெங்கடேஷுஉடன் பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் நுழைந் தார். அங்கு பார்வையாளர் அறையில் காத்திருந்த சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை தின‌கரனும் டொக்டர் வெங்கடேஷும் சந்தித்தனர்.

அப்போது சசிகலாவுடன் 2 மணி நேரத்துக்கும் மேலாக தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து தினகரனும் வெங்கடேஷும் தீவிர ஆலோசனை நடத்தினர். குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினரின் போக்கு, தங்களது (சசிகலா) குடும்பத்துக்கு எதிராக அமைச்சர்களின் போர்க்கொடி, எம்எல்ஏக்களின் நிலைப்பாடு ஆகியவை தொடர்பாக சசிகலாவுக்கு விளக்கினர்.

எம்எல்ஏக்களிடம் பேரம் பேசப் பட்டதாக வெளியான வீடியோ, தங்களது (சசிகலா) ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை, போயஸ் கார்டன் வீட்டில் தீபா நுழைந்த விவகாரம், குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினர்.

தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்ன விவகாரம், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கின் மறு ஆய்வு மனு, சென்னை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அந்நியச் செலாவணி வழக்கு தொடர்பாக தினகரனிடம் சசிகலா கேட்டறிந்தார். ஆட்சியை தக்க வைப்பது உள்ளிட்ட விவகாரங்களில் எடுக்க வேண்டிய முடிவுகள் தொடர்பாக தினகரனுக்கு சசிகலா ஆலோசனை வழங்கியதாக தெரிகிறது. 


Add new comment

Or log in with...