இந்தியாவின் முதல் குடிமகன் தெரிவு செய்யப்படும் முறை | தினகரன்

இந்தியாவின் முதல் குடிமகன் தெரிவு செய்யப்படும் முறை

இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவர் யார்?' என்பது ஜூலை மாதம் 20 ஆம் திகதி தெரிந்துவிடும். ' நாட்டின் முதல் குடிமகன்' என்றழைக்கப்படும் இந்தியக் குடியரசுத் தலைவர், எவ்வாறு தேர்வுசெய்யப்படுகிறார்?

இந்தியக் குடியரசுத் தலைவர், சில விதிமுறைகளின் அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகளால் தேர்வுசெய்யப்படுகிறார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர், ' இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்; 35 வயதை அடைந்திருக்க வேண்டும்' மக்களவைத் தேர்தலில் போட்டியிடத் தகுதிபெற்றவராக இருக்க வேண்டும்' என இந்திய அரசியலமைப்புச் சட்டம் வரையறைசெய்துள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம், அரசாணை விதி 54, 'ஜனாதிபதி எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?' என்பதை விளக்குகிறது. நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளின் உறுப்பினர்களும் மாநில சட்டசபை உறுப்பினர்களும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி படைத்தவர்கள். தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளரின் வேட்புமனுவை குறைந்தபட்சம் 50 எம்பி., எம்எல்ஏ-க்கள் முன்மொழிந்து கையெழுத்திட்டிருக்க வேண்டும். 'ஒவ்வொரு எம்பி., எம்எல்ஏ-வும் ஏதாவது ஒரு வேட்பாளரின் வேட்புமனுவில்தான் கையெழுத்திட முடியும்' என்பது விதி.

இதன்படி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இருக்கும் 776 எம்பி-க்களும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள 4,120 எம்எல்ஏ-க்கள் என 4,896 பேர் வாக்களிக்க இருக்கிறார்கள். இந்தத் தேர்தலில், நியமன உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது.

ஜனாதிபதி தேர்தல் முறை:

நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளில் இருக்கும் உறுப்பினர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் வாக்களிப்பார்கள். எம்எல்ஏ-க்கள் அனைவரும் மாநில சட்டசபைகளிலும் வாக்களிப்பார்கள். சிறையில் இருக்கும் எம்பி., எம்எல்ஏ-க்கள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதியளிக்கப்படும். வாக்குச்சீட்டு மூலம் இரகசிய வாக்குப்பதிவு அடிப்படையில் குடியரசுத் தலைவர் தேர்வுசெய்யப்படுவார். இந்தமுறை, தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பின் அடிப்படையில், ' வாக்குச் சீட்டில் தேர்தல் ஆணையம் வழங்கும் சிறப்பு பேனாவின் மூலமே வாக்களிக்க வேண்டும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குகளின் மதிப்பு:

நாடாளுமன்ற எம்பி., எம்எல்ஏ-க்களின் வாக்குகளின் மதிப்பைக் கணக்கிட்டு, 'யார் புதிய குடியரசுத் தலைவர்?' என அறிவிக்கப்படுவார். ஒரு எம்எல்ஏ அளிக்கும் வாக்கின் மதிப்பு, அவர் சார்ந்த மாநிலத்தின் மக்கள்தொகையை, அதன் சட்டசபைத் தொகுதிகளின் எண்ணிக்கையால் வகுத்து, அதில் கிடைக்கும் மதிப்பை, அந்த எம்எல்ஏ-வின் வாக்கு மதிப்பாக எடுத்துக்கொள்கின்றனர். உதாரணமாக, ஒரு மாநிலத்தின் மக்கள் தொகை 30 இலட்சத்து 17 ஆயிரத்து 180 என வைத்துக்கொள்வோம்.

அங்குள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 230 ஆக உள்ளது. இதனை 30,17,180/230 * 1000 எனக் கணக்கிடுகின்றனர். இந்த அடிப்படையில், எம்எல்ஏ ஒருவரின் வாக்கு மதிப்பிடப்படுகிறது. அதேபோல மக்களைவையில் உள்ள 543 உறுப்பினர்களையும் மாநிலங்களவையில் உள்ள 233 உறுப்பினர்களையும் சேர்த்தால், மொத்தம் 776 வாக்குகள் வருகின்றன.

இதை, அனைத்து மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களும் பேரவைத் தேர்தலில் பெற்ற மொத்த வாக்குகளின் மதிப்பை எம்பி-க்களின் எண்ணிக்கையால் வகுத்தால் கிடைக்கும் மதிப்பெண்ணே, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பாகும்.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் நஸீம் ஜைதி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஜூலை 17 ஆம் திகதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான வேட்புமனு தாக்கல், நாளை (ஜூன் 14) தொடங்குகிறது. இந்த மாதம் 28 ஆம் திகதி வரை வேட்புமனு தாக்கல்செய்வதற்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

29 ஆம் திகதி முதல் வேட்புமனு பரிசீலனைசெய்யப்பட இருக்கிறது. மனுக்களை வாபஸ் பெற விரும்பினால், ஜூலை 1ஆம் திகதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும். ஜூலை 20 ஆம் திகதி, இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவர் அறிவிக்கப்பட இருக்கிறார். 


Add new comment

Or log in with...