பலஸ்தீன தியாகிகள் நிதியை தடுக்க இஸ்ரேலில் சட்டமூலம் | தினகரன்

பலஸ்தீன தியாகிகள் நிதியை தடுக்க இஸ்ரேலில் சட்டமூலம்

இஸ்ரேல் சிறையில் இருக்கும் பலஸ்தீனர்களுக்கு இழப்பீடு வழங்கும் பலஸ்தீன அதிகார சபையின் ‘தியாகிகள்’ கொடுப்பனவை தடுக்கும் வகையில் பலஸ்தீனத்திற்கான 280 மில்லியன் டொலர் நிதி பரிமாற்றத்தை நிறுத்துவதற்கான சட்டமூலம் ஒன்று இஸ்ரேல் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ஆரம்ப வாசிப்பில் இந்த சட்டமூலத்திற்கு 48 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்ததாகவும் 13 வாக்குகள் எதிராக பதிவானதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தியாகிகள் கொடுப்பனவு குறித்து இஸ்ரேல், பலஸ்தீன் மற்றும் அமெரிக்க தரப்புகளில் முரணான செய்திகள் வெளியாகும் நிலையிலேயே இந்த வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது.

பலஸ்தீன அதிகார சபையின் ஒரு சமூகத் திட்டமாக முன்னெடுக்கப்படும் தியாகிகள் கொடுப்பனவின் கீழ், இஸ்ரேல் சிறையில் இருப்போர், இஸ்ரேல் படையால் தாக்கப்பட்டோர் மற்றும் கொல்லப்பட்டோரின் குடும்பங்களுக்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதனை நிறுத்துவதற்கு ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஒப்புக் கொண்டதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்மையில் குறிப்பிட்டபோது பலஸ்தீன அதிகார சபை அதனை நிராகரித்துள்ளது. 


Add new comment

Or log in with...