கொழும்பில் நவீனமய நீர்விநியோகத் திட்டம் | தினகரன்

கொழும்பில் நவீனமய நீர்விநியோகத் திட்டம்

நாட்டின் நிர்வாக மற்றும் பொருளாதாரத் தலைநகராமாகத் திகழும் கொழும்பு நகரத்தை தெற்காசியாவின் பொருளாதார கேந்திர நிலையமாக மாற்றுவதற்கான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிணங்க தலைநகரிலும் அதனை அண்டிய பிதேசங்களிலும் தினமும் புதிது புதிதாக பல அடுக்குமாடிக் கட்டடங்கள் வர்த்தக நிறுவனங்களாகவும் பொது சேவை கட்டடங்களாகவும் குடியிருப்புத் தொகுதிகளாகவும் உருவெடுத்து வருவதைக் காண முடிகின்றது.

இத்தகையதொரு கால கட்டடத்தில் கொழும்புக்கான குடிநீர்த் தேவையை நிவர்த்தி செய்து 24 மணித்தியாலயமும் சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக நவீனமயமான நீர் வழங்கல் திட்டம் கொழும்பு நீர் விநியோகத்தை மேம்படுத்தும் திட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மனித தேவைகளில் மிக முக்கியமானதாக குடி நீர் காணப்படுகிறது. உலகின் பல நாடுகளில் அன்றாட உபயோகத்துக்குக் கூட நீரில்லாத நிலை காணப்படுகிறது. சில நாடுகள் வெளிநாடுகளிலிருந்து வரும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரையே எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரை எமக்குத் தேவையான குடிநீரை உள்ளூரிலேயே பெற்றுக் கொள்ளும் நிலை உள்ளது. இது எம் நாட்டிற்குக் கிடைத்துள்ள அரிய வரப்பிதசாதம். மாற்றமடையும் கால நிலையல் மழையும் வரட்சியும் மாறி மாறி வந்தாலும் குடிநீர்த் தட்டுப்பாடு மிகக் குறைவாகவே இலங்கையில் காணப்படுகிறது. நீரை சேமித்து அல்லது உள்ள நீரை முறையாக முகாமைத்துவம் செய்தால் மிகக் குறைவான நீர் தட்டுப்பாட்டையும் நிவர்த்திசெய்ய முடியும்.

கொழும்பைப் பொறுத்தவரை இந்த மாவட்டம் தினமும் சுமார் ஒரு மில்லியன் பேருக்குக் குடிநீரை வழங்குவதற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டிய நிலை உள்ளது.

கொழும்பில் சுமார் ஆறு இலட்சம் பேர் வசிப்பதுடன் தினமும் பல்வேறு தேவைகளுக்காக கொழும்புக்கு வந்து போவோர் நான்கு இலட்சம் பேராக உள்ளனர். இந்த வகையில் நாளொன்றுக்கு ஒரு மில்லியன் பேருக்குக் குடிநீர் வழங்க வேண்டிய தேவை இம்மாவட்டத்திற்கு உள்ளது.

இந்த வகையில் கொழும்பு மாவட்ட நீர் விநியோக முறைமையில் பாரிய மறுசீரமைப்பொன்றை மேற்கொள்வதற்கான ஐந்து வருட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தியடைந்து வரும் கொழும்பு மாவட்டத்திற்கு நிலையான முழுமையான நீர் வழங்கும் திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 40 பில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தை 2021 ஆம் ஆண்டில் நிறைவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 2040 ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு ஜப்பான் ஜய்க்கா உதவியுடன் மற்றுமொரு பாரிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கொழும்பைப் பொறுத்தவரை இங்குள்ள நீர் விநியோக குழாய்கள் 100 வருடங்களுக்கு மேற்பட்ட ப​ைழமையானவை. பெரும்பாலான பகுதிகளில் 1889 காலங்களில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட நீர் குழாய்களே இன்றும் உபயோகத்திலுள்ளன.

மாடி வீட்டுத் திட்டங்கள், அரசாங்க கட்டடங்களில் பெரும்பாலும் முறையான குழாய் இணைப்பு முறைகள் நடைமுறைப்படுத்தப்படாததால் பெருமளவு நீர் விரயமாகி வருவதையும் கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது. இவற்றை முழுமையாக மறுசீரமைக்கும் நடவடிக்கைகளை மேற்படி திட்டத்தின் மூலம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் பல இடங்களில் பணம் அறவிடப்படாமல் இலவசமாக நீர் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பொது இடங்களில் பொது நீர்க்குழாய்கள் மூலம் நீர் பெறப்படுவதுடன் அதனை எவரும் முறையாக பராமரிக்காமல் வெறுமனே நீர் விரயமாவதையும் காண முடிகிறது. இவற்றை பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேவேளை, மீற்றர்கள் பொருத்தப்பட்டு சிறு அளவில் கட்டணங்களை அறவிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பைப் பொறுத்தவரை வருடாந்தம் 1000 க்கும் மேற்பட்ட புதிய நீர் வழங்கல் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. சட்டவிரோதமான நீர் பெற்றுக் கொள்ளுதல், வீடுகளில் மேலதிகமாக வாடகைக்குக் குடியிருப்போருக்கு முறையற்ற விதத்தில் நீர் வழங்குதல் போன்ற செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

கொழும்பில் சில பகுதிகள் மேடாக இருப்பதால் 24 மணி நேரமும் குடிநீரைப் பெற்றுக் கொள்வது கடினமாகவுள்ளது. இத்தகைய சில பகுதிகளில் இரவில் மட்டுமே தண்ணீர் கிடைக்கின்றது. ஏனைய பகுதிகளில் நீர் பெறும் போது இங்கு நீர் வருவதில்லை. அப்பகுதிகளில் நீர் பெற்று முடிந்த பின்னரே இத்தகைய மேட்டுப் பகுதிகளுக்கு நீர் வரும் நிலை உள்ளது. இத்தகைய குறைபாடுகள், அவௌகரியங்களை நிவர்த்தி செய்வதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

ஒரு பிரதேசத்தில் எங்காவது நீர்க் குழாய்களில் கசிவு ஏற்படும் போது தற்போதைய நிலையில் அப்பகுதிக்கான அனைத்து நீர் விநியோகத்தையும் நிறுத்தி விட்டே அதன் திருத்த வேலைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

புதிய செயற்திட்டத்தின்படி இத்தகைய நீர் விநியோகக் குழாய்கள் தனித்தனி தொகுதிகளாக பிரிக்கப்படுகின்றன. திருத்தங்களை மேற்கொள்ள நேரும் போது குறிப்பிட்ட அந்த தொகுதி இணைப்பு மட்டுமே நீர் தடை செய்யப்பட்டு திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 10,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நீர் வழங்கல் சபையில் பணி புரிகின்றனர். அவர்களின் பங்கேற்புடன் சுத்தமான தடையில்லாத வகையில் தொடர்ச்சியாக குடிநீரை வழங்குவது இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும். இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் செயற்பாடுகள் எதிர்நோக்க நேரும் சவால்கள் தொடர்பில் திட்டப் பணிப்பாளரான பொறியியலாளர்கள் எஸ். ஏ. ரஸீட் விளக்குகையில்,

இந்தத் திட்டம் ரூபா 40 பில்லியன் செலவில் அமுலாகிறது. இதன் மூலம், 960 கிலோ மீற்றர் வரையிலான கொழும்பு குழாய் நீர் வலைப்பின்னலில் 60% வரையான பழைய குழாய்கள் அப்புறப்படுத்தப்பட்டு அவற்றிற்கு பதிலாக புதிய குழாய்கள் பொருத்தப்படும்.

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் மேற்பார்வையின் கீழ் திட்டம் அமுலாகிறது. இது கொழும்பு பெருநகர நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் முதலீட்டுத் திட்டம் சார்ந்ததாகும்.

திட்டத்தின் நோக்கங்கள்:

கொழும்பு நகருக்குள் நீரை விநியோகிக்கும் ஆற்றலையும், அதன் செயற்றிறனையும் மேம்படுத்துவதற்கு அப்பால், நீர் விநியோகக் குழாய் வலைப்பின்னலை விருத்தி செய்து, நீர் விரயமாவதால் விளையும் ஒட்டுமொத்த நஷ்டத்தை 2020 ஆம் ஆண்டளவில் குறைந்தபட்சம் 18% ஆல் குறைப்பது திட்டத்தின் நோக்கங்களாகும்.

கிடைக்கும் அனுகூலங்கள்:

குழாய்த் தொகுதி நவீனமயமாவதால், அதன் மூலம் சிறப்பான, செயற்றிறன் வாய்ந்த, தொடர்ச்சியான நீர் விநியோகம் கிடைத்தல்

கொழும்பு நகருக்குள் நீரைக் காவும் பிரதான குழாய்கள் உரிய கொள்ளளவைக் கொண்டிருப்பதால், அதன் மூலம் குழாய்த் தொகுதிக்கு விடுவிக்கப்படும் நீர் உரிய அழுத்தத்தைக் கொண்டிருத்தல்.

பயன்படுத்தப்படும் குழாய்கள் தரத்தில் சிறந்ததாக இருப்பதால் நீடித்து நிலைத்திருக்கும்.

புவியியல் தகவல் முறைமையை (GIS) அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்பத்தின் ஊடாக நீர்க்கசிவு மற்றும் தடங்கலை உடனடியாக அடையாளம் கண்டு அதற்கான தீர்வுகளை விரைவாக வழங்குதல்.

நீர்மானிகள் உரிய இடத்தில் பொருத்தப்படுவதால், மானிகளை இலகுவாக வாசிக்கலாம். மற்றும் வீடுகளில் வாசிப்பவர்களுக்கு இடையூறு ஏற்படாது.

தற்காலிக நீர் விநியோகத் தடை பற்றி பல்வேறு ஊடகங்கள் வாயிலாகவும் அறியத் தரப்படும்.

தற்போது செயற்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் காரணமாக கொழும்பு நகரிற்குள் அன்றாட வாழ்க்கையிலும், போக்குவரத்திலும் ஏற்படக்கூடிய குறுகிய கால சிரமங்கள் :

திட்ட வேலைத்தளங்களில் ஏற்படக்கூடிய வீதிப் போக்குவரத்து நெரிசல்.

மாற்று வீதிகளை பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம்.

வாகனத் தரிப்பிட வசதிகள் குறைதல்.

தோண்டப்படும் கால்வாய்களும், குழிகளும் வேலை முடியும் வரை மூடப்படாதிருத்தல்

இவற்றின் மூலம் தூசு மற்றும் இரைச்சல் ஏற்படுதல்

ஒரு சில வேலைத் தளங்களில் நிலத்தின் கீழ் பதிக்கப்பட்டுள்ள மின் கம்பிகள், தொலைத் தொடர்பாடல் வடங்கள், கழிவு நீர்த் தொகுதிகள் முதலான சேவை விநியோக முறைகளால் எழக்கூடிய சிக்கல்கள், அத்தகைய சந்தர்ப்பங்களில் இயந்திரங்களுக்கு பதிலாக மனித வலுவை பயன்படுத்த வேண்டியிருப்பதால் உரிய காலத்தில் திட்டத்தை பூர்த்திசெய்ய முடியாமல் போகலாம்.

சுத்தமான நீர் என்பது அடிப்படைத் தேவையாகும். அந்தத் தேவையை நிறைவேற்றும் நோக்கில் நிறைவேற்றப்படும் கொழும்பு நீர் வழங்கல் சேவை மேம்பாட்டுத் திட்டமானது, உங்களதும், நாட்டினதும் அபிவிருத்திக்கான தவிர்க்க முடியாத அம்சமாகும். எனவே, திட்டம் அமுலாகும் பிரதேசங்களில் ஏற்படக்கூடிய தற்காலிக கஷ்டங்களை சற்றுப் பொறுத்து, அதற்கு உதவி செய்வது உங்களுக்கும், நாட்டுக்கும், எதிர்கால சந்ததிக்கும் நீங்கள் வழங்கும் அளப்பரிய சேவையாகும். 

 


Add new comment

Or log in with...