பெரும்பான்மையை நிரூபிக்குமாறு CV இற்கு அழைப்பு (UPDATE) | தினகரன்

பெரும்பான்மையை நிரூபிக்குமாறு CV இற்கு அழைப்பு (UPDATE)

 
வடமாகாண சபையில் தமது பெரும்பான்மையை நிரூபிக்குமாறு, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேவிடம்  கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இதனையடுத்தே, ஆளுனரால் குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
நேற்று (14) இரவு, கையளிக்கப்பட்ட குறித்த பிரேரணையில் வட மாகாண சபை உறுப்பினர்கள் 21 பேர் கையொப்பமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
முதலமைச்சர் தனது பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறும் பட்சத்தில், அவர் பதவி விலக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

சி.விக்கு எதிரான பிரேரணை; ரெஜினோல்டிடம் கையளிப்பு

 
வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 
 
வட மாகாண அமைச்சர்கள் இருவரை பதவி நீக்கி, மேலும் இரு அமைச்சர்களை கட்டாய விடுமுறையில் இருக்குமாறு முதலமைச்சர் கேட்டதன் எதிரொலியாகவே இந்தப் பிரேரணை வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. 
 
முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் 21 உறுப்பினர்கள் ஒப்பமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இதன்படி, ஆளுந்தரப்பில் 15 உறுப்பினர்களும், எதிர்க்கட்சி தரப்பில் ஆறுபேரும் ஒப்பமிட்டுள்ளனர். 
 
இதேவேளை, முதல்வரினால் குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர் ஐங்கரநேசன், இன்று (15) முதல்வருக்கு எதிரான தனது தீர்மானக் கடிதத்தை ஆளுநரிடம் கையளிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இதற்கிடையில், தற்போது இலண்டனில் தங்கியிருக்கின்ற வட மாகாண சபை உறுப்பினரான தர்மலிங்கம், அங்கிருந்து ஒப்புதல் கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளாரென கட்சி வட்டாரங்கள் கூறின.
 
இதற்கமைய, முதல்வருக்கு எதிரான தீர்மானத்திற்கு 22 உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கியிருக்கிறார்கள். 
 
வட மாகாண சபையின் 16 உறுப்பினர்கள் நேற்று 
இரவு ஆளுநர் ரெஜினோல்ட் குரேயைச் சந்தித்துப் பேசியதோடு, முதல்வருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கையளித்தனர். 
 
இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர், அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். 
 
இச்சந்திப்பில், தவிசாளர் சி. வி. கே. சிவஞானம் அமைச்சர்கள் சத்தியலிங்கம், டெனீஸ்வரன், குருகுலராஜா, சயந்தன், அர்னோல்ட் அஸ்மீன் அயூப் பசுபதிப் பிள்ளை, அரியரெட்ணம், பரம்சோதி, கமலேஸ்வரன், ஜயலத் உட்பட 16 பேர் கலந்துகொண்டதாகத் தெரியவருகிறது. 
 
நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர ஆளுநர் உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கினால், பிரேரணை வட மாகாண சபையில் விவாதிக்கப்படும். 
 
இந்தப் பிரேரணையில் முதல்வர் தோல்வியடைந்தால், பதவியில் இருந்து நீக்கப்படுவார். சிலவேளைகளில் உறுப்பினர் பதவியைக் கூட விக்கினேஸ்வரன் இழக்கும் நிலை ஏற்படலாம். 
 
ஆயினும், மாகாண சபை கூடியே இறுதி முடிவை எடுக்கும்.
 
இதற்கிடையில் இந்த நெருக்கடி நிலையில் வட மாகாண முதல்வராக தற்போதைய அவைத் தவிசாளர் சி.வி.கே. சிவஞானத்தின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின.
 
(சுமித்தி தங்கராசா)
 
 

Add new comment

Or log in with...