முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள்; ஆஸி தூதுவரிடம் அமைச்சர் ரிஷாட் விபரிப்பு | தினகரன்

முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள்; ஆஸி தூதுவரிடம் அமைச்சர் ரிஷாட் விபரிப்பு

ஆயுதக் கலாசாரத்திலோ, வன்முறையிலோ நாட்டமில்லாத இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீது கடந்த ஆட்சியின் இறுதிக்காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட வன்முறைகளும் தாக்குதல்களும் இன்னும் நிறுத்தப்படாது தொடர்ந்து இடம்பெறுவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்திரேலிய தூதுவர் பிரைஸ் ஹட்செஸ்ஸனிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டினார்.

அவுஸ்திரேலிய தூதுவரை நேற்று நண்பகல் (13) அமைச்சில் சந்தித்து பேசிய போதே, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலமாக தீவிரமடைந்திருக்கும் இனவாத செயற்பாடுகளை தூதுவரிடம் அமைச்சர் ரிஷாட் விபரித்த போது, இந்த விடயங்கள் குறித்து தாங்களும் அறிந்துள்ளதாகவும் இதனைக் கவனத்தில் கொள்வதாகவும் தெரிவித்தார்.

'கடந்த அரசாங்க காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற கொடூரங்களுக்கும் தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெற்றுவரும் சம்பவங்களுக்கிடையே எந்த வித்தியாசங்களையும் நாங்கள் காணவில்லை. சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டி முஸ்லிம்களை நிம்மதியாக வாழச் செய்யுமாறு பலமுறை நாங்கள் வலியுறுத்தி வருகின்றபோதும், இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய இனவாதிகளையும், சூத்திரதாரிகளையும் சட்டத்தின் முன்கொண்டுவருவவதில் தயக்கம் காட்டப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இத்தனை அநியாயங்கள் நடந்தபோதும் முஸ்லிம்கள் இன்னுமே பொறுமையாகவே இருக்கின்றனர். பெரும்பாலான சிங்களவர்கள் முஸ்லிம்களுடன் நல்லுறவுடனும், அன்புடனும் வாழ்ந்து வருகின்றபோதும் ஒருசிறிய இனவாதக் கூட்டம் இந்தசம்பவங்களை அரங்கேற்றி வருகின்றது. பொதுபலசேனா இயக்கத்தின் செயலாளர் ஞானசாரதேரர் இஸ்லாத்தையும் குர்ஆனையும், முஸ்லிம்களையும் கேவலப்படுத்தி வருவதில் முன்நின்று செயற்படுகின்றார். அவருக்கு எதிராக பலமுறைப்பாடுகள் உள்ளபோதும் அவர்மீது இன்னும் எந்தநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார். 


Add new comment

Or log in with...