பரபரப்பான சூழ்நிலை; வடமாகாண சபையில் இன்று விவாதம் | தினகரன்

பரபரப்பான சூழ்நிலை; வடமாகாண சபையில் இன்று விவாதம்

வடமாகாண சபையின் நான்கு அமைச்சர்களையும் பதவி விலக்க வேண்டுமென வடமாகாண சபை உறுப்பினர்கள் பலர் வலிறுயுத்தியுள்ள நிலையில், ஊழல் மோசடிக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் வடமாகாணசபை அமைச்சர்கள் இருவர் தொடர்பாக இன்று(14) மாகாண சபையில் விவாதிக்கப்படுகிறது.

குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள இரு அமைச்சர்களான குருகுலராஜா மற்றும் ஐங்கரநேசன் ஆகியோர் இன்று சபையில் தன்னிலை விளக்கம் அளிக்கவுள்ளனர்.

வடமாகாண சபை அமைச்சர்களுக்கு எதிரான மோசடி குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்கு முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு முன்வைத்த அறிக்கையில், அமைச்சர்கள் இருவரையும் பதவி விலக்க வேண்டும் என பரிந்துரைத்திருந்தது. இந்த விவகாரம் குறித்து இன்று வடமாகாண சபையில் விசேட விவாதம் நடைபெறவிருப்பதுடன், அமைச்சர்களின் விளக்கங்கள் மற்றும் ஏனைய மாகாணசபை உறுப்பினர்களின் கருத்துக்களையும் முதலமைச்சர் கேட்டறியவுள்ளார்.

நான்கு அமைச்சர்களையும் பதவி விலக்க வேண்டுமென தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய பங்காளிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ள நிலையில் இன்று நடைபெறும் விவாதத்தின் பின்னர் இவ்விடயத்தில் முதலமைச்சர் முடிவெடுக்கவுள்ளார்.

இருந்தபோதும், நான்கு அமைச்சர்களையும் ஒரே நேரத்தில் பதவி விலக்குவதற்கு தமிழரசுக் கட்சி கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டமொன்றில் இது விடயம் குறித்து கடுமையாக விவாதிக்கப்பட்டுள்ளது. நான்கு அமைச்சர்களையும் ஒரே நேரத்தில் பதவி விலக்கத் தேவையில்லையென இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாகாணசபை அமைச்சர்கள் நால்வரையும் பதவி விலக்க வேண்டும் என மாகாண சபை உறுப்பினர்கள் 16 பேர் கடந்த வருடமே கையெழுத்திட்டு முதலமைச்சரிடம் கடிதமொன்றை கையளித்திருந்தனர். அதன் பின்னரே விசாரணைக்கான குழுவை முதலமைச்சர் நியமித்திருந்தார். இந்தக் குழுவின் பரிந்துரையில் இரு அமைச்சர்கள் பதவி விலக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட இரு அமைச்சர்களையும் இன்றைய விவாதத்துக்கு முன்னர் எழுத்துமூல விளக்கமளிக்குமாறு கடந்த அமர்வில் முதலமைச்சர் கோரியிருந்தார். எனினும், அவர்கள் நேற்று மாலை வரை தமது விளக்கத்தை கையளித்திருக்கவில்லை. இன்று அவர்கள் சபையில் வாய்மூலம் தன்னிலை விளக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த ஜனாதிபதியை சந்தித்த மாகாணசபை அமைச்சர் ஒருவர், நான்கு அமைச்சர்களையும் மாற்றும் விடயத்தை தடுக்கும் வகையில் செயற்படுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டதாகத் தெரியவருகிறது.

எனினும், நான்கு அமைச்சர்களையும் பதவி நீக்குவது குறித்து கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும், முறைப்பாடு கையளித்திருந்த உறுப்பினர்களைமுதலமைச்சர் தனித்தனியோ தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு அவர்களின் கருத்துக்களை டேடறிந்துள்ளார். . இவற்றை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது தற்போதுள்ள மாகாணசபை அமைச்சர்கள் நான்கு பேரையும் பதவி விலக்குவது பற்றிய தீர்மானமொன்றுக்கு முதலமைச்சர் செல்வதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம் காணப்படுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மகேஸ்வரன் பிரசாத், யாழ்ப்பாணம் குறூப் நிருபர்  


Add new comment

Or log in with...