நாளை மதியத்திற்குள் பதவியை இராஜினாமா செய்ய உத்தரவு | தினகரன்

நாளை மதியத்திற்குள் பதவியை இராஜினாமா செய்ய உத்தரவு

 
அவையில் அமளி துமளி
 
ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கும் வடமாகாண சபை அமைச்சர்கள் ஐங்கரநேசன் மற்றும் குருகுலராஜா ஆகிய இருவரையும் நாளை மதியத்துக்குள் தாமாக முன்வந்து இராஜினாமா கடிதங்களை கையளிக்குமாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். விசாரணைகள் முடியுவரை ஏனைய இரண்டு அமைச்சர்களான டொக்டர் சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் ஆகியோரை ஒரு மாத கால விடுமுறையில் செல்லுமாறும் பணித்துள்ளார்.
 
மாகாணசபை அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் மோசடி விசாரணை குழு அறிக்கை இன்று சபையில் விவாதிக்கப்பட்டது. பலத்த எதிர்பார்ப்புடன் இன்றைய அமர்வுகள் ஆரம்பமாகின. எதிர்க்கட்சியினர் மற்றும் ஆளும் கட்சியினரின் கூச்சல் குழப்பங்கள் மற்றும் வெளி நடப்புக்களுக்கும் மத்தியில் முதலமைச்சர் தனது முடிவினை அறிவித்தார்.
 
இன்று காலை 9.30 மணிக்கு வடமாகாண சபை அவைமுதல்வர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் கூடியது. விசேட அமர்வு என்பதால் குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்கள் இருவரையும் தன்னிலை விளக்கமளிக்குமாறு அழைப்பு விடுத்தார். முதலில் மாகாண அமைச்சர் குருகுலராஜாவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
 
தன்மீதான குற்றச்சாட்டுக் குறித்த தன்னிலை விளக்கத்தை எழுத்துமூலம் முதலமைச்சரிடம் வழங்கியிருப்பதால் சபையில் வாய்மூலம் தெரிவிக்கவேண்டிய அவசியமில்லையென்றார். இதனைத் தொடர்ந்து ஐங்கரநேசனுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
 
அரசியல் பழிவாங்கும் நோக்கில் தன்மீது குற்றஞ்சுமத்தப்பட்டிருப்பதாகவும், "சோத்துக்கு வழியில்லாமல் போனாலும் இவ்வாறான ஈனச்செயலில் ஈடுபட மாட்டேன்" என அவர் தனது தன்னிலை விளக்கத்தில் குறிப்பிட்டார். விசாரணைகளின் போது கூறிய விடயங்கள் அறிக்கையில் உள்ளடக்கப்படாத அதேநேரம், கூறப்படாத விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். 
 
அமைச்சரின் தன்னிலை விளக்கத்தைத் தொடர்ந்து, தானும் கருத்துக் கூற நேரம் வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கோரினார். எனினும், முதலமைச்சரின் சிறப்புரிமையின் கீழ் விவாதிக்கப்படும் விடயம் என்பதால் எதிர்க்கட்சித் தலைவருக்கு நேரம் ஒதுக்க முடியாது என அவை முதல்வர் குறிப்பிட்டார்.
 
இதன்போது குறுக்கிட்ட ஆளும் கட்சி உறுப்பினர் சயந்தன், எதிர்க்கட்சித் தலைவர் இவ்விடயத்தை தமது அரசியல் நோக்கத்துக்குப் பயன்படுத்தப் பார்ப்பதாகவும், அவருக்கு பேச நேரம் ஒதுக்கக் கூடாது என்றும் கூறினார். இதனால் ஆளும் கட்சி எதிர்க்கட்சியினருக்கிடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
 
இதன்போது கருத்துக் கூறிய ஆளும் கட்சி உறுப்பினர் அஸ்மின், விசாரணை அறிக்கையை சபையில் சமர்ப்பிக்க வேண்டாம் எனக் கோரியபோதும் இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் தவறிழைத்திருந்தால் அதனை மக்களுக்குத் தெரியப்படுத்தும் விடயத்தை ஊடகங்கள் பார்த்துக் கொள்ளும் என்றார். இரு தரப்புக்கும் ஏற்பட்ட தர்க்கத்தையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் தவராசா சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தார். அவருடன் ஐ.ம.சு.மு உறுப்பினர்களான ஜயதிலக மற்றும் செனவிரட்ன ஆகியோரும் எழுந்து சென்றனர். 
 
குழப்பங்களுக்கும் மத்தியில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது முடிவினை அறிவிப்பதற்கு தயாரானர். இதன்போது மீண்டும் குறுக்கிட்ட ஆளும்கட்சி உறுப்பினர் சயந்தன், சபை அமர்வுகளை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரை ஒத்திவைக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் தனது சிறப்புரிமையை மீறும் வகையில் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
 
இருந்தாலும் முடிவுகள் தெரியாமல் சபையை ஒத்திவைக்கக் கூடாது என ஆளும் கட்சியைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினரான சிவாஜிலிங்கம் கூறினார். முதலமைச்சருக்கு சிறப்புரிமை உள்ளது. அவர் தனது முடிவை அறிவிக்க வேண்டும். முடிவு தெரியாமல் சபையை ஒத்திவைத்தால் சகல விடயங்களும் புஷ்வாணமாகிவிடும் என்றார். இதன்போது குறுக்கீடு செய்த மாகாணசபை உறுப்பினரான ஆர்னல்ட், விசாரணை அறிக்கையில் உள்ள விடயங்களை நீதி மன்றத்துக்குக் கொண்டுசென்றால் அது தவறான விசாரணை என்றார்.
 
குறுக்கீடுகளுக்கு மத்தியிலும் தனது முதலமைச்சர் அறிவிக்கத் தொடங்கிவிட்டார். அவர் தனது கருத்தைக் கூறிக் கொண்டிருக்கும்போது மாகாண அமைச்சர் குருகுலராஜா உள்ளடங்கலாக ஆளும்கட்சி உறுப்பினர்கள் 12 பேர் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர். எனினும், முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை தொடர்ந்தும் தெரிவித்துக் கொண்டிருந்தார்.
 
"அமைச்சர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டாலும் சரி இல்லாவிட்டாலும் சரி நடைமுறைமாற்றம் ஒன்றை உறுப்பினர்களும் மக்களும் விரும்புகின்றார்கள். இதன் நிமித்தம் அமைச்சர்கள் குருகுலராஜா மற்றும் ஐங்கரநேசன் ஆகியோரைத் தாமாகவே தமது பதவிகளைத் தியாகம் பண்ணுமாறு வேண்டிக் கொள்கின்றேன். மற்றைய இரு அமைச்சர்களுக்கு எதிராக புதிய விசாரணையொன்று நடைபெறும்" என்றார். 
 
"இந்த விசாரணை முடிவடையும் வரை அந்த இரு அமைச்சர்களும் விடுமுறையில் விலகிஇருக்க வேண்டும். அவர்களின் அமைச்சுப் பொறுப்புக்களை நான் தற்காலிகமாக ஏற்றுக் கொள்கின்றேன். விசாரணையில் அவர்கள் விடுதலைஅடைந்தால் திரும்பவும் பதவிகளில் தொடர்ந்து கடமையாற்றலாம்.
 
இரு அமைச்சர்களின் இராஜினாமாக் கடிதங்களையும் மற்றைய இருவரின் ஒரு மாதத்திற்கான விடுமுறைக் கடிதங்களையும் நாளை (15) மதியத்திற்கிடையில்  விடுமுறையில் உள்ளஅமைச்சர்களின் விடுமுறைக் காலம் தேவைக்கேற்றபடி நீட்சிசெய்யப்படும்" என்றும் முதலமைச்சர் தனது முடிவில் அறிவித்தார்.
 
முதலமைச்சரின் உரையுடன் சபை அமர்வுகள் முடிவுக்கு வந்தன. எதிர்வரும் 22ஆம் திகதி வடமாகாணசபை மீண்டும் கூடவுள்ளது
 
(சுமித்தி தங்கராசா)
 
 

Add new comment

Or log in with...