மாணவர் 8 பேருக்கும் நாளை வரை விளக்கமறியல் | தினகரன்

மாணவர் 8 பேருக்கும் நாளை வரை விளக்கமறியல்

 
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் SAITM தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணியின் போது கைது செய்யப்பட்ட 8 பேரையும் நாளை (19) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
குறித்த எட்டு பேரும் இன்று (18) கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்தார்.
 
நேற்று (17) கொழும்பு புறக்கோட்டையிலிருந்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் போது பொதுமக்களின் இயல்பு பாதிக்கும் வகையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், பௌத்த தேர மாணவர் ஒருவர் உள்ளிட்ட குறித்த எட்டு பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
 
குறித்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்கும் பொருட்டு, நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதலை பொலிசார் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
குறித்த பேரணி, கொழும்பு புறக்கோட்டையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு, லோட்டஸ் வீதியை அண்மித்தபோது, ஜனாதிபதி அலுவலகத்திற்குச் செல்லும் குறித்த வீதியை பொலிசார் மூடியிருந்தனர்.
 
அதனையடுத்து குறித்த பேரணி, லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் வழியாக கொம்பனி வீதியின் ஊடாக, யூனியன் பிளேஸ் பகுதியை அண்மித்தது. அங்கிருந்து இப்பன்வல சந்தியை அடைந்தபோது, குறித்த பாதை மூடப்பட்டது.
 
இதனையடுத்து, ஆர்ப்பாட்டகாரர்கள் நகரமண்டபத்தை நோக்கி செல்ல முட்பட்டனர். இதன்போது, குறித்த பேரணியை அங்கிருந்து அகற்ற, பொலிசாரால் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
 
இதனையடுத்து அங்கிருந்து கலைந்த பேரணி, தாமரை தடாக வீதி வழியாக மீண்டும் நகர மண்டப பகுதிக்கு நுழைய முற்பட்டதை அடுத்து, பொலிசாரால் ஆர்ப்பாட்டகாரர்கள் மீது, மீண்டும் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
 
இதன்பின்னர் அவர்கள் மீண்டும் நகர மண்டப பகுதிக்குள் நுழைய முயற்சித்த வேளை, தாமரை தடாக வீதியில் வைத்து மீண்டும் கண்ணீர்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
 
எவ்வாறாயினும், விகாரமகாதேவி பூங்காவில் ஒன்று சேர்ந்து சிறிது நேரம் தரித்து நின்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், இரவு 8.00 மணியளவில் அங்கிருந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
 
குறித்த பேரணி நேற்று (17) காலை 11.00 மணிக்கு புறக்கோட்டையில் ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 
 

Add new comment

Or log in with...