காதலித்து திருமணம் செய்த மகள் வீடு பொலிஸ் தந்தையால் சேதம் | தினகரன்

காதலித்து திருமணம் செய்த மகள் வீடு பொலிஸ் தந்தையால் சேதம்

(வைப்பக படம்)
 
தனது விருப்பத்துக்கு மாறாக தனது மகள், இளைஞர் ஒருவரை காதலித்து திருமணம் முடித்தமையால் கோபமடைந்த ஓய்வுபெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், அவர்கள் வசித்து வந்த வீட்டுக்கு அத்துமீறி சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனம் மற்றும் வீட்டில் இருந்த பொருட்களை கடுமையாக சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
தலாவ குருந்துவெவ பிரதேசத்தைச் சேர்ந்த, சந்தேகநபரான ஓய்வுபெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்றுமுன்தினம் (13) தலாவ பொலிசாரினரால் கைது செய்யப்பட்டார்.
 
சந்தேகநபரான ஓய்வுபெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள், தலாவ பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்து, மூன்று வருடங்களுக்கு முன்னர் ஓய்வுபெற்றவராவார். இவர் தற்போது தமுத்தேகம ஏரியாகம பிரதேசத்தில் வசித்து வருகின்றார்.
 
இவர், அதிகமாக மதுபானம் அருந்திய நிலைமையில் கடந்த 12 ஆம் திகதி பிற்பகல் 6.00 மணியளவில் தலாவ குருந்துவெவ பிரதேசத்திலுள்ள தனது மகள் வசித்து வந்த வீட்டிற்கு சென்று, வீட்டுக்கு முன்னால் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள், லொறி என்பவற்றை சேதப்படுத்தியதோடு, பின்னர் வீட்டுக்குள் பல வந்தமாக சென்று அங்கிருந்த பிளாஸ்டிக் கதிரை, தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதனப்பெட்டி, வீட்டு ஜன்னல், கதவு ஆகியவற்றுக்கு சேதம் விளைவித்துதுள்ளார்.
 
பின்னர் வீட்டில் இருந்த பெண்கள், மற்றும் அயலவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
 
இதன் பின்னர் தலாவ பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய சந்தேகநபரான ஓய்வுபெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள், தலாவ பொலிசாரினரால் கைது செய்யப்பட்டு தமுத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஒரு இலட்சம் கொண்ட இரு சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
 
(கல்நேவ தினகரன் விசேட நிருபர் - டப்ளியூ.எம். பைசல்)
 
 

Add new comment

Or log in with...