இணைய தாக்குதல் குறித்து உலகெங்கும் உஷார் நிலை | தினகரன்

இணைய தாக்குதல் குறித்து உலகெங்கும் உஷார் நிலை

வெள்ளியன்று இடம்பெற்ற இணைய தாக்குதல் மீண்டும் ஏற்படும் அபாயம் காரணமாக உலகெங்கும் உள்ள அரச அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் மருத்துவமனைகள் நேற்று முதல் உஷார் நிலையில் உள்ளன. எனினும் மென்பொருள் பாதிப்புகள் குறித்து வெளிப்படுத்த தவறிவிட்டதாக அமெரிக்க அரசு மீது தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசொப்ட் குற்றம்சாட்டியுள்ளது.

வொன்னக்ரை என்று அழைக்கப்படும் ரான்சம்வெயார் வைரஸ் ஒன்றே 150க்கும் அதிகமான நாடுகளின் 200,000க்கும் அதிகமான கணனிகளை தாக்கியதாக இணைய பாதுகாப்பு நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். தற்போது இந்த வைரஸ் தாக்குதல் மந்தமடைந்திருந்தபோதும் நேற்று திங்கட்கிழமை பணியாளர்கள் வேலைக்கு திரும்பும் போது மீண்டும் அதன் தாக்குதல் தீவிரம் அடையும் என்று அச்சம் வெளியாகியுள்ளது.

இதன்போது புதிய வகை வைரஸ் ஒன்றை எதிர்பார்ப்பதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் வெள்ளியன்று இடம்பெற்ற இணைய தாக்குதலின் பொருளாதார இழப்பு மற்றும் பாதிப்புகள் பற்றி இன்னும் கணக்கிடப்படாமல் உள்ளது.

இந்த இணைய தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து பிரிட்டனின் தேசிய இணைய பாதுகாப்பு மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் சில பாதிக்கப்பட்ட இயந்திரங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலை மற்றும் வைரஸ் வலையமைப்புகளுக்கு பரவுவதால் இந்த பிரச்சினை கணிசமான அளவில் இருக்கும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பிய பொலிஸான யுரோபோல் நிறுவனமும் கடந்த ஞாயிறன்று இந்த இணைய தாக்குதல் அச்சுறுத்தலை எதிரொலித்தது. இந்த வைரஸ் தாக்குதல், முன்னர் இல்லாத அளவு கொண்டது என்றும் அந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் யுரோபோல் குறிப்பிட்டுள்ளது.

பிரிட்டன் மருத்துவமனைகள், ஜெர்மன் ரயில் சேவை மற்றும் நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் இணைய தளத்தின் ஊடே பலவந்தமாக பணம் பறிக்கும் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கும் மிகப்பெரிய சம்பவம் இதுவென்று அது குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் தமது பாதுகாப்பு மென்பொருளை உடன் புதுப்பித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் தீங்கிழைக்கும் மென்பொருள் வலையமைப்புகள் ஊடே பரவும் திறன்கொண்டுள்ளது. இது மைக்ரோசொப்ட் விண்டோஸ் இயங்குதளத்தில் வெளிப்படுவதோடு இது அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனத்திடம் இருந்து களவாடப்பட்டதாகும்.

இணைய ஊடுருவிகள் பயன்படுத்த முடியுமாக மென்பொருள் குறியீட்டை சேகரித்து வைத்திருந்தது குறித்து அமெரிக்க அரசு மீது, மைக்ரோசொப்டின் தலைமை சட்ட அதிகாரி பிரட் ஸ்மித் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

“அமெரிக்க இராணுவத்திடம் இருக்கும் சில டொமஹோக் ஏவுகணைகள் களவாடப்படுவதற்கு நிகரான ஒரு சூழ்நிலையாக இது உள்ளது” என்று மைக்ரோசொப்ட் வலைப்பூவில் ஸ்மித் எழுதியுள்ளார்.

மென்பொருள் நிறுவனங்களுக்காக கண்டுபிடிக்கப்பட்டதை கையிருப்பில் வைத்திருப்பது, விற்பது அல்லது பயன்படுத்துவதற்கு பதில் அரசு அதன் பாதிப்பு பற்றி அறிவிக்க வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பழைய வடிவங்களான எக்ஸ்பி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கணனிகளே அதிகம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனமான என்.எஸ்.ஐ உருவாக்கி வைத்திருந்த மென்பொருளை திருடியே இந்த இணையவழி தாக்குதலை மர்ம நபர்கள் நடத்தியுள்ளனர். பலஸ்தீன போராட்ட அமைப்புகள், மத்திய கிழக்கு நாடுகளின் வங்கி பணப்பரிமாற்றத்தை ரகசியமாக கண்காணிக்க என்.எஸ்.ஏ இந்த மென்பொருளை ரகசியமாக பயன்படுத்தி வந்துள்ளது.

எனினும் மைக்ரோசொப்டின் அறிப்புக் குறித்த என்.எஸ்.ஏ மற்றும் வெள்ளை மாளிகை உடன் பதிலளிக்கவில்லை.

கடந்த வெள்ளியன்று இடம்பெற்ற இணைய தாக்குதலின்போது, இணைய வழியாக கணனிக்குள் ஊடுருவும் வைரஸ் கணனியில் உள்ள தகவல்கள் அனைத்தையும் முடக்கிவிடும். குறிப்பிட்ட தொகையை இணையவழியில் செலுத்தினால் மட்டுமே கணனியில் உள்ள தகவல் திரும்ப கிடைக்கும் என்ற மிரட்டல் வாசகம் கணனி திரையில் தோன்றுகிறது. அதன் பின் அந்த கணனியை பயன்படுத்த முடிவதில்லை.

இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டு, கணனியில் கோப்புகளை திறப்பதற்கு 300 டொலர் முதல் 600 டொலர் பிட்கொயின்களை செலுத்துமாறு கணனி திரையில் தோன்றியதாக தகவல்கள் வெளிவந்தன. அந்த வகையில் இதுவரை 38 ஆயிரம் பவுண்டுக்கு அதிகமான தொகை 3 கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனினும் இதற்கான விலை மூன்று தினங்களுக்கு பின் இரட்டிப்பாகும் என்று அந்த வைரஸ் எச்சரித்திருப்பதோடு, எழு தினங்களுக்குள் பணம் செலுத்தப்படாத பட்சத்தில் கோப்புகள் அழிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...