இணைய பயனர்கள் அவதானம்; வைரஸ் இவ்வாறுதான் தாக்குகிறது | தினகரன்

இணைய பயனர்கள் அவதானம்; வைரஸ் இவ்வாறுதான் தாக்குகிறது

 
இணையத்தளங்களை பயன்படுத்துவோர் அவதானத்துடன் இருக்குமாறு இலங்கையின் கணனி அவசர தொழிநுட்ப சேவைப்பிரிவு (CERT) எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
ரன்சம்வெயா (ransomware) என்று அறியப்படுகின்ற கணனி வைரஸின் பரவல் காரணமாக கணனிகளின் இயக்கம் பாதிக்கப்படலாம் என்பதனால் குறித்த அறிவித்தலை விடுத்துள்ளதாக அதன் பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
 
அத்துடன் இன்றைய தினம் (15) குறித்த வைரஸ் தாக்குதலொன்று இடம்பெறுவதற்கான அபாயம் இருப்பதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
குறிப்பாக, சந்தேகத்திற்கிடமான அல்லது அறியப்படாத மின்னஞ்சல்களை திறப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு CERT அறிவித்துள்ளது.
 
அத்துடன் குறித்த வைரஸின் தாக்குதலிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான முன்னெச்சரிக்கையாக, கணனியை இற்றைப்படுத்துவதோடு (Update), கணனியிலுள்ள வைரஸ் எதிர்க்கும் மென்பொருளையும் இற்றைப்படுத்துமாறு CERT அறிவித்துள்ளது.
 
கணனியிலுள்ள முக்கியமான கோப்புகளை, காப்பு பிரதியெடுத்தல் (Backup) போன்றவற்றின் மூலம் பாரிய தாக்கங்களிலிருந்தும் தவிர்ந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
குறித்த வைரஸை திறந்தவுடன், அது கணனியை நேரடியாகத் தாக்கி அதிலுள்ள அனைத்து தகவல்களையும் குறியீடுகளாலான தரவுகளாக (Encrypt) மாற்றி முற்றுமுழுதாக கணனியை முடக்கி விடுவதோடு, அது கடவுச்சொல் (Password) ஒன்றினால் மூடப்பட்டு விடுவதோடு, அந்த கடவுச்சொல்லை பெற்றுக்கொண்டு, அதிலிருந்து விடுபடுவதற்கு, பணம் செலுத்துமாறு கோருகின்றது.
 
 
அவ்வாறு பணம் செலுத்தப்பட்ட பின்னர் அந்த கடவுச்சொல் வழங்கப்படுவதோடு, அதன் பின்னரே நீங்கள் அதிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள்.
 
இவ்வாறு கணனியை மீட்க பணம் (ransom) கோருவதால் அது ransomware என அழைக்கப்படுகின்றது.
 
 
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...