இந்திய ஆடை ஏற்றுமதிக்கு பெரும் பாதிப்பு | தினகரன்

இந்திய ஆடை ஏற்றுமதிக்கு பெரும் பாதிப்பு

 

இலங்கை - ஐரோப்பிய நாடுகளுக்கிடையே அண்மையில் செய்துகொள்ளப்பட்ட தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தால், இந்தியாவின் ஜவுளித் துறை கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;

இலங்கை - ஐரோப்பிய நாடுகளுக்கிடையே அண்மையில் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி இலங்கையுடன் வர்த்தகம் செய்யும் ஐரோப்பிய நிறுவனங்கள் வரிச்சலுகை பெற முடியும். இதனால் அந்த நாடுகளின் வர்த்தகம் வளர்ச்சியடையும் வாய்ப்பு ஏற்படும்.

இதனால், இந்தியாவிடமிருந்து (ஜவுளி) ஆடைகளை கொள்வனவு செய்த ஐரோப்பிய நாடுகள் இனி இலங்கையிடம் அதிகமாக ஆடைகளை கொள்வனவு செய்யும் சூழல் ஏற்படும்.

ஏற்கனவே நூல் விலை உயர்வு, டொலரின் நிலையற்ற தன்மை போன்ற பல்வேறு காரணங்களால் இந்தியாவில் குறிப்பாக திருப்பூரில் ஜவுளித்தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை - ஐரோப்பிய நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள புதிய ஒப்பந்தத்தால், திருப்பூர் உட்பட இந்தியா முழுவதும் ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து, பாதிக்கப்படவுள்ளனர். எனவே இந்திய - ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை இந்திய மத்திய அரசு உடனடியாக துரிதப்படுத்தி, ஒப்பந்தம் கையெழுத்தாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 


Add new comment

Or log in with...