சைற்றம் விவகாரத்தில் அரச அதிகாரிகள் சார்பான செயற்பாடு | தினகரன்

சைற்றம் விவகாரத்தில் அரச அதிகாரிகள் சார்பான செயற்பாடு

சைற்றம் விவகாரத்தில் அரச அதிகாரிகள் மருத்துவக் கவுன்ஸிலுக்கு சாதகமாக செயற்பட ஆரம்பித்திருப்பதை அவதானிக்ககூடியதாக உள்ளதென அதன் தலைவர் பேராசிரியர்.கார்லோ பொன்சேக்கா தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பேராசிரியர் இவ்வாறு தெரிவித்தார். "சைற்றம் விவகாரம் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இதில் இலங்கை மருத்துவக் கவுன்ஸில் மட்டும் பங்குதாரர் அல்ல. எனினும் சைற்றம் தொடர்பில் இலங்கை மருத்துவக் கவுன்ஸில் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

2015 ஆம் ஆண்டு ஜூலை மாதமளவில் சைற்றம் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகளை பரீட்சிப்பதற்காக இலங்கை மருத்துவக் கவுன்ஸில் குழுவொன்றை அனுப்பி வைத்தது. அதற்கமைய இம்மாணவர்களுக்கு வழங்கும் பயிற்சிகளில் பாரிய குறைபாடுகள் இருப்பதாக அக்குழு சிபாரிசு செய்திருந்தது." என்றும் அவர் தெரிவித்தார்.

உண்மையில் சைட்டம் விவகாரம் சட்டச் சிக்கல் நிறைந்ததோ அல்லது சட்டப் பிரச்சினைக்குரியதோ அல்ல. சட்டப் பிரச்சினையாக இருந்தால் சட்டரீதியிலான தீர்வினை வழங்கலாம். ஆனால் சைட்டம் முற்றும் முழுவதும் உயர்கல்வியிலுள்ள மருத்துவத் துறை சம்பந்தப்பட்ட விடயம் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, சைற்றம் தொடர்பில்அரசாங்கம் தனது உறுதியான நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றத்துக்கு தெளிவாக அறிவிக்க வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர்.நவீன் த சொய்சா தெரிவித்துள்ளார்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத் தலைமையகத்தில் நேற்று(15) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இவ்வாறு கூறினார். கடந்த ஏப்ரல் (07) சைற்றம் மீதான தனது நிலைப்பாட்டை அரசாங்கம் அறிவித்திருந்தது. இதே நிலைப்பாடு உச்ச நீதிமன்றத்திலும் முன்வைக்கப்படல் வேண்டும். இதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சைற்றம் தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் அரசாங்கத்தினால் ஏப்ரல் (07) அறிவிக்கப்பட்ட நிலைப்பாட்டை, சுகாதார அமைச்சரும் உயர் கல்வி அமைச்சரும் உச்ச நிதிமன்றத்தில் முன்வைப்பதன் மூலமே நாடு முழுவதும் முன்னெடுக்கப்படக்கூடிய வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடியுமென்றும் அவர் கூறினார்.

ஏப்ரல் 07 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட யோசனையில், சைற்றம் மருத்துவக் கல்லூரியில் வழங்கப்படும் பயிற்சிகள் போதுமானவையல்ல, மருத்துவபீட மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய வசதிகள் நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் இல்லை, தற்போதைய சூழ்நிலைகளுக்கு மத்தியில் சைட்டம் வழங்கும் மருத்துவப் பட்டப்படிப்பினை ஏற்றுக்கொள்ள முடியாது, மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்துவதில் இலங்கை மருத்துவக் கவுன்ஸிலுக்கே அதிக பங்கு உண்டு ஆகிய விடயங்களை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். 

 


Add new comment

Or log in with...