வடமத்திய மாகாண சபையை கவிழ்க்கும் முயற்சி தோல்வி | தினகரன்

வடமத்திய மாகாண சபையை கவிழ்க்கும் முயற்சி தோல்வி

மஹிந்த சார்பு 17 உறுப்பினர்களின் சத்தியக் கடதாசியை ஏற்க ஆளுநர் மறுப்பு

வடமத்திய மாகாண முதலமைச்சர் பதவியை தமது தரப்பிற்கு வழங்குமாறு கோரி மஹிந்த ஆதரவு அணி முன்வைத்த கோரிக்கையை வடமத்திய மாகாண ஆளுநர் நிராகரித்துள்ளார்.

ஜ.ம.சு.மு வடமத்திய மாகாண உறுப்பினர்கள் 17 ​ேபரின் கையொப்பங்களுடன் கூடிய சத்தியக் கடதாசி நேற்று(15) ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. தற்போதைய முதலமைச்சர் பேசல ஜெயரத்ன குறித்த நம்பகத் தன்மை தங்களுக்கு கிடையாது எனவும் அவரின் இடத்துக்கு முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித் சமரகோனை நியமிக்குமாறும் மாகாணசபை உறுப்பினர்கள் தனித்தனியாக சத்தியக் கடதாசிகளை ஆளுநரிடம் கையளித்தனர்.

ஆனால் அவற்றை ஏற்க மறுத்த வடமத்திய மாகாண ஆளுநர் பீ்.பி திசாநாயக்க, மேலிடத்திலிருந்து வந்த உத்தரவின் பிரகாரம் சத்தியக் கடதாசிகளை ஏற்க இயலாது என்று குறிப்பிட்டுள்ளார்.

33 உறுப்பினர்களை கொண்ட வடமத்திய மாகாண சபையில் 21 ஐ.ம.சு.மு உறுப்பினர்களும் 11 ஐ.தே.க உறுப்பினர்களும் ஒரு ஜே.வி.பி உறுப்பினரும் உள்ளனர்.மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பிற்கு ஆதரவு வழங்கியதையடுத்து வட மத்திய மாகாண சபை சுகாதார அமைச்சர் கே.எச்.நந்தசேன அமைச்சு பதவியில் இருந்து கடந்த வாரம் நீக்கப்பட்டார்.

இதனை ஆட்சேபித்து முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய மாகாண போக்குவரத்து அமைச்சருமான எஸ்.எம்.ரஞ்சித்தும் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற அவசர சந்திப்பையடுத்து வடமத்திய மாகாணத்திலுள்ள மஹிந்த ஆதரவு அணியைச் சேர்ந்த 18 ஐ.ம.சு.மு உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படவும் முதலமைச்சர் பதவியை பெரும்பான்மையாக உள்ள தமது தரப்பிற்கு கோரவும் முடிவு செய்யப்பட்டது.

இதன் பிரகாரம் நேற்று பிற்பகல் 12.45 மணியளவில் ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து மகஜரொன்றும் சத்தியக் கடதாசிகளும் கையளிக்கப்பட்டன.

இவற்றை முதலமைச்சர் நிராகரித்ததாக வடமத்திய மாகாண அமைச்சர் எச்.பீ.சேமசிங்ஹ தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித்: எதுவித நியாயமாக காரணமுமின்றி சுகாதார அமைச்சர் நந்தசேன பதவி நீக்கப்பட்டு வேறு ஒருவர் நியமிக்கப்பட்டார்.

தற்போதைய முதலமைச்சர் எமது நம்பிக்கையை இழந்து விட்டார். 21 ஐ.ம.சு.மு உறுப்பினர்களில் 17 பேர் எம்முடனே உள்ளனர்.பெரும்பான்மை எமது தரப்பிற்கே உள்ளது.எமது பெரும்பான்மையினாலே தற்போதைய முதலமைச்சர் நியமிக்கப்பட்டார்.

மீண்டும் என்னை முதலமைச்சராக நியமிக்க பெரும்பான்மை உறுப்பினர்கள் கோருகின்றனர். இதனை நிரைவேற்றத் தவறினால் வழக்கு தொடர்வோம்.மாகாண சபையை தொடர்ந்து நடத்த இடமளிக்க மாட்டோம். என்றார்.

2015 ஆட்சி மாற்றத்திற்கு முன்னர் எஸ்.எம்.சந்ரசேனவின் சகோதரரான எஸ்.எம்.ரஞ்சித் முதலமைச்சராக இருந்தார்.ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவரிடமிருந்து அமைச்சு பதவி பறிக்கப்பட்டு பேசல ஜெயரத்ன நியமிக்கப்பட்டமை தெரிந்ததே.

இதே வேளை கட்சி முடிவுகளுக்கு முரணாக செயற்படும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஜ.ம.சு.மு தெரிவித்துள்ளது. தமக்கு தேவையானவாறு முதலமைச்சரை மாற்ற உறுப்பினர்களால் முடியாதென கட்சி செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.(பா) 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...