தமிழ் இளைஞர், யுவதிகள் பொலிஸ் சேவைக்குள் இணையும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தவும் | தினகரன்

தமிழ் இளைஞர், யுவதிகள் பொலிஸ் சேவைக்குள் இணையும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தவும்

 
- சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே. அரசரட்ணம் வேண்டுகோள் 
 
வட, கிழக்கில் உள்ள தமிழ் பேசும் இளைஞர், யுவதிகள் பொலிஸ் பொலிஸ் சேவைக்குள் இணைந்து கொள்ள வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக்கொள்ளுமாறு, சிவில் பிரஜைகள் பொலிஸ் இணைப்பகத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே. அரசரட்ணம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் சனிக்கிழமை (13) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 'வட-கிழக்கில் தமிழ் மொழி பேசும் பொலிஸாரின் எண்ணிக்கை மிகவும் குறைவான நிலையிலேயே உள்ளது.
 
குறிப்பாக பொலிஸில் உள்ள தமிழ் பேசும் யுவதிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். கடந்த கால நிலைமைகள் காரணமாக பொலிஸ் சேவையில் தமிழ் பேசும் இளைஞர்கள் யுவதிகள் இணைவது மிகவும் குறைவான நிலையிலேயே இருந்து வருகின்றது.
 
இதன் காரணமாக வட-கிழக்கில் பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழியை அமுல்படுத்துவதில் சவால்கள் இருந்து வருகின்றது.
 
இந்த நிலையில் வட-கிழக்கில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த தொழில்வாய்ப்பு சந்தர்ப்பத்துடன் தமது பகுதியை பாதுகாக்கும் சந்தர்ப்பமும் கிடைக்கின்றது. வட-கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்கள் பொலிஸ் நிலையங்களில் தமிழில் கடமைகளை நிறைவேற்றுவதற்கு பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். 
 
இந்த குறைகளை நிவர்த்திசெய்ய வேண்டுமானால் தமிழ் பேசும் இளைஞர், யுவதிகள் பொலிஸ் திணைக்களத்தில் இணையவேண்டும்'
 
வட கிழக்கில் உள்ள இளைஞர், யுவதிகள் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி பெருவாரியாக இணைந்துகொள்ள வேண்டும்' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)
 
 

Add new comment

Or log in with...