Friday, March 29, 2024
Home » இஸ்லாமிய அறிவுக் கல்வி புகட்டும் சீரிய பணியில் அக்கரைப்பற்று உம்மு தர்தா மகளிர் இஸ்லாமிய கல்லூரி

இஸ்லாமிய அறிவுக் கல்வி புகட்டும் சீரிய பணியில் அக்கரைப்பற்று உம்மு தர்தா மகளிர் இஸ்லாமிய கல்லூரி

by Rizwan Segu Mohideen
October 7, 2023 4:18 pm 0 comment

அக்கரைப்பற்று மாநகரத்தின், மீராநகரப் பிரதேசத்தில் இயற்கை வனப்புமிக்க அழகிய இடத்தில் அமையப் பெற்றுள்ள உம்மு தர்தா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் வியத்தகு வளர்ச்சியும், அதன் கல்வி மற்றும் ஆன்மீகம் சார்ந்த செயற்பாடுகளும் இன்று அக்கரைப்பற்று மக்கள் மனங்களில் நீங்கா ஓர் இடத்தைப் பிடித்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. 

இச்சமூகத்தின் கண்களாம் பெண்களைப் பாதுகாத்து, அவர்கள் ஒழுக்கமுள்ளவர்களாக மிளிர சிறந்த முன்மாதிரியான ஆளுமைகளாக மாற்றுவதற்கான உன்னதமான இலக்கை மையமாகக் கொண்டு செயற்படுகின்ற உம்மு தர்தா மகளிர் இஸ்லாமிய கல்லூரி பல்வேறு புரட்சிகரமான இஸ்லாமிய நெறிகளுடன் சமூக நல்லிணக்கத்திற்கேற்ப மாற்றங்களை நோக்கி மிக வேகமாக பயனித்துக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

இஸ்லாமிய பெண்கள் பல சவாலுக்கு முகம்கொடுத்து தங்களுக்குள் உள்ள பிரச்சினைகளுக்கும், தங்களது சமூகப் பித்தலாட்டங்களில் மூழ்கி விடாமலும், சமூகத்துக்கு நல்ல வகையான விடயங்களை பல்துறைகளிலும் சென்றடைய வைத்து நற்சமூகத்தை உருவாக்குவதே இவர்களின் முதற்பணியாக இருக்கிறது.

2010ஆம் ஆண்டு 13 மாணவியர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி, தற்போது நூற்றுக்கும் அதிகமான மாணவியர்களை உள்ளீர்த்து இயங்கிக் கொண்டிருக்கின்றது.

வறுமை கல்விக்கு ஒரு போதும் சுமையாக அமைந்து விடக்கூடாது என்பதை நடைமுறைப்படுத்திக் காட்டும் வகையில் செயற்படும் இக்கல்லூரி, வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழுகின்ற பல மாணவியர்களையும் பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்திருக்கின்ற குடும்பப் பின்னணியைக் கொண்டுள்ள மாணவியர்களையும் உள்ளீர்த்து, வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கின்றது.

இந்த இஸ்லாமிய கல்லூரியில் இதுவரை 47 ஆலிமாக்கள் மௌலவிய்யா பட்டத்தைப் பெற்று பல சன்மார்க்க சமூக நிறுவனங்களில் கடமை புரிந்து வருகின்றனர். இவர்களுள் பல மாணவியர்கள் பல்கலைக்கழகத்திற்கும் கல்வியியற் கல்லூரிக்கும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

இக்கல்லூரியின் தற்போதைய அதிபராக அக்கரைப்பற்று ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் கலாநிதி அல்-ஹாபீழ் எம்.ஐ.சித்தீக் (அஸ்ஹரி) இக்கல்லூரியின் வளர்ச்சியிலும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திலும் இரவுபகலாக பணியாற்றி வருகிறார்.

இன்றைய நவீன உலகில் கல்வி ரீதியாக புரட்சிகரமான மாற்றங்களை முழுமையாக உள்ளீர்த்து இக்கல்லூரி தங்களது மாணவியர்களையும் செயல்படச் செய்வதற்கான மிகச் சிறந்த கல்விசார் செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அதனடிப்படையில் இங்கு கணனி, ஆங்கில, சிங்கள வகுப்புக்களும் மற்றும் பாடசாலை கல்வி செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.

தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் நடைபெறுகின்ற அல்-குர்ஆன், அரபு மொழி மற்றும் இஸ்லாமிய சட்டத்துறை சார்ந்த போட்டி நிகழ்ச்சிகளில் மாணவிகள் பங்குபற்றுவதற்கான ஏற்பாடுகளை இக்கல்லூரி செய்து வருகின்றது.

எம்.எஸ்.எம். றிஸ்வான்
அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT