பயண நேரம் மிக குறைவான சுரங்கப்பாதை நவீன மெட்ரோ ரயில் சேவை நாளை | தினகரன்

பயண நேரம் மிக குறைவான சுரங்கப்பாதை நவீன மெட்ரோ ரயில் சேவை நாளை

சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் கட்டணம் எவ்வளவு இருக்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள். ரயிலில் இருந்து தவறி விழுவதை தடுக்க நவீன வசதியும் செய்து தரப்பட்டு உள்ளது.

சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரயில் போக்குவரத்து பணியில் ஒரு பகுதியாக, திருமங்கலத்தில் இருந்து அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய்நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக எழும்பூர் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதில் திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை 7.63 கிலோ மீட்டர் தூர பணிகள் நிறைவடைந்தன. கோயம்பேடு முதல் திருமங்கலம் வரை உயர்த்தப்பட்ட பாதையாகும். இந்தப்பாதையில் நாளை 14–ந்திகதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் ரயில் இயக்கப்படுகிறது. கட்டணம் உயர்வுகோயம்பேடு பஸ் நிலையம் முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள உயர்த்தப்பட்ட பாதையில் கட்டணம் ரூ.40 வசூலிக்கப்படுகிறது. ஆனால் திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை உள்ள 7.63 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சுரங்கப்பாதையில் கட்டணத்தை உயர்த்தி வசூலிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:– அதிக கட்டணம் நிர்ணயம் ஏன்? மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு இதுபோன்ற நவீன வசதிகளுடனும், பெரிய கட்டமைப்புகளுடனும் கூடிய திட்டத்தில் கட்டணம் சற்று அதிகம் என்பது இருக்கத்தான் செய்யும், இதனை தவிர்க்க முடியாது. அதிலும் குறிப்பாக உயர்த்தப்பட்ட பாதையை விட சுரங்கப்பாதை கட்டணம் சற்று அதிகமாகத்தான் இருக்கும். இருந்தாலும், அனைத்து தரப்பினரும் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக மும்பை, டெல்லி, பெங்களூர் ஆகிய இடங்களில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் கட்டண முறைகளை ஆய்வு செய்தோம். அதன் அடிப்படையில் சென்னை மெட்ரோ ரயில் சேவைக்காக செலவிடப்பட்ட செலவினங்களின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனவே கட்டண உயர்வு என்பது தவிர்க்க முடியாதது.

வழக்கமான கட்டணத்தைவிட சுரங்கப்பாதை கட்டணம் ரூ.20 அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நவீன கதவு மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் போது பயண நேரம் வெகுவாக குறைகிறது. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் உள்ள 45 கிலோ மீட்டர் தூரம் பயணம் செயல்பாட்டிற்கு வரும் போது வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை உள்ள 25 கிலோமீட்டர் தூரத்திற்கு கட்டணமாக ரூ.70 செலுத்த வேண்டும். அதுவே சிறப்பு வகுப்பாக இருந்தால் ரூ.140 வசூலிக்கப்படும்.

ரயிலிலும், ரயில் நிலையங்களிலும் பயணிகளுக்கு நவீன சொகுசு வசதிகளுடன், பாதுகாப்பு கருதி பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ரயில் நிலையங்களில் ரயில் வந்து நின்ற உடன் ரயில் நிலையத்தில் உள்ள கதவும், ரயில் பிளாட்பாரத்தில் உள்ள கதவும் (பிளாட்பார்ம் ஸ்கிரீன் டோர்) ஒரே நேரத்தில் திறக்கும். அப்போது தான் பயணிகள் ரயிலில் இருந்து வெளியே வர முடியும். இந்த நவீன கதவுகளால் ரயிலில் இருந்து பயணிகள் பிளாட்பாரத்தில் தவறி கீழே விழுவதற்கு வாய்ப்பே இல்லை.

ரயில் நிலையத்திலும் நகரும் படிக்கட்டுகள், ஓய்வு அறைகள், லிப்ட்வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளன. ஆனால் பிளாட்பாரத்தில் அமைக்கப்பட்டுள்ள கதவு வசதி உயர்த்தப்பட்ட பாதைகளில் கிடையாது. 8 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில் சேவைக்காக அமைக்கப்பட்டு வரும் 32 ரயில் நிலையங்களில் 16 ரயில் நிலையங்கள் சுரங்கப்பாதைகளில் அமைக்க திட்டமிடப்பட்டு, தற்போது 7 ரயில் நிலையங்கள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள ரயில் நிலையங்களுக்கான கட்டுமானப்பணிகளும் நிறைவடைந்து விட்டன.

திட்டமிட்டப்படி 42 கிலோமீட்டர் தூரத்துக்கான பணிகளும் நிறைவடைந்து மெட்ரோ ரயில் சேவை தொடங்கினால் ஒரு நாளைக்கு 8 லட்சம் பயணிகள் பயணம் செய்ய முடியும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள். 


Add new comment

Or log in with...