பாரதப் பிரதமரின் உரை இரு தரப்பு உறவுக்கு பலம் | தினகரன்

பாரதப் பிரதமரின் உரை இரு தரப்பு உறவுக்கு பலம்

இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தில் உள்ள எமது நாடு பல துறைகளிலும் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச கப்பல் போக்குவரத்து, இயற்கை எழில் மிகு திருகோணமலை துறைமுகம், பண்டய வரலாறு, கலாசாரங்களின் மரபுகளை கொண்ட இலங்கை ஏனைய நாடுகளின் அரசியல், பொருளாதார கலாசாரங்களுடன் தொடர்புபடுகின்றது.

இந்த வகையில் எமது நாட்டின் அரசியல், சமய வரலாறுகள் இந்தியாவின் பூர்வீகத்தோடு பின்னிப்பிணைந்துள்ளதை நாம் அறிவோம். பிராந்திய வல்லரசுகளில் ஒன்றான இந்தியாவின் ஆதிக்கம் ஏனைய நாடுகளில் இழையோடியுள்ள போதிலும் இலங்கை மீதான இந்தியாவின் அணுகுமுறை பல அரசியல் வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்துள்ளது.

தென்னிந்தியாவிலிருந்து இலங்கையின் தலை மன்னாரைப் பிரிக்கும் பாக்கு நீரிணைக்கு அப்பால் மற்றுமொரு திராவிட சமூகம் இந்தியாவின் பண்​ைடய வரலாற்றுப் பெருமைகளை நினைவூட்டும் வகையில் இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களில் வாழ்கின்றது.

இந்த வரலாற்றுப் பூர்வீகங்களே இலங்கை, இந்திய அரசியல்களிலும் தொடர்புபடுகின்றது. தென்னிந்தியாவிலுள்ள சுமார் எட்டுக்கோடி தமிழர்களும் அவர்களது தொப்புழ் கொடி உறவுகளான இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் சுமார் 16 இலட்சம் திராவிடத் தமிழர்களும் மேலும் மலயகத்தில் வாழும் இந்தியத் தமிழர்களும் இலங்கை மீதான இந்தியாவின் அளவுகடந்த அக்கறைக்கு காரணமாகின்றனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டம், மலையக இந்தியத் தமிழர்கள் மீது கடந்த காலங்கள் முன்னெடுக்கப்பட்ட அரசியல் ஒடுக்கு முறைகளால் இந்தியா இலங்கையின் சில விடயங்களில் தலையிட வேண்டி ஏற்பட்டது.

இலங்கை தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக 1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டமை அதற்கு முன்னரான சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம், பண்டா சில்வா ஒப்பந்தங்கலெள்ளாம் இலங்கைத் தமிழர்கள் மீது இந்தியா கொண்ட அக்கறையின் வெளிப்பாடுகளே. எனினும், ராஜு, ஜே.ஆர் ஒப்பந்தம் போன்று எந்த ஒப்பந்தங்களும் வரலாற்றில் இடம் பிடிக்கவில்லை. தமிழ் நாட்டின் அரசியல் அழுத்தங்கள் இலங்கைத் தமிழர்களின் விவகாரத்தில் இந்தியாவை தலையிட வைத்த போதும் அதற்கும் ஒருபடி மேலாக இரு நாடுகளுக்குமிடையிலான வரலாற்று பூர்வீகங்களும் இந்த ஒப்பந்தத்திற்கு வழிகோலின.

எனினும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா நீட்டிய நேசக்கரமும், ஆதரவுகளும் தென்னிலங்கை அரசியல் சக்திகளால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டமை ஒரு துரதிஷ்டமே. மேலும் இந்தத் தவறான புரிதல்களை வைத்து சில சிங்கள கடும் போக்காளர்கள் அரசியல் செய்யும் நிலை இன்னும் தொடர்வதும் வேதனைக்குரியதே.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் இலங்கை வருகை சிங்கள கடும் போக்காளர்களால் தவறாக புரியப்பட்டதாலேயே பாரதப் பிரதமர் மீது தாக்குதல் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. வெட்கித் தலைகுனிய வேண்டிய அந்த வரலாற்றுத் தவறு இன்னும் இந்தியர்களின் மனங்களில் இருந்து முற்றாக அகலவில்லை.

இதற்கு மேலதிகமாக ராஜிவ் காந்தி மீதான வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கு விடுதலைப் புலிகளே பொறுப்பாய் இருந்தனர் என்கின்ற மனக்கறையும் இந்தியாவிடம் இல்லாமல் இல்லை. இவற்றையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கி விட்டு இலங்கையின் ஆள்புல எல்லை, ஒருமைப்பாடு, இறைமை என்பவற்றை பாதுகாக்க இந்தியா தொடர்ந்தும் உதவி வருகின்றமை பாரதத்தின் பெருந்தன்மையையே காட்டுகிறது.

இருந்த போதும் தென்னிலங்கை கடும் போக்காளர்கள் பாரதத்தின் பெருந்தன்மையை புரிந்து கொள்ளாதுள்ளதும் இலங்கையின் ஒருமைப்பாட்டில் இந்தியாவுக்கு உள்ள அக்கறையை புரிந்து கொள்ள மறுப்பதும் இரு நாடுகளின் வரலாற்றுப்பிணைப்பின் உறவுக்கு வடுவாக உள்ளது.

இந்நிலையிலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வந்து சென்றுள்ளார். இவரது பதவியேற்பு விழாவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை புதுடில்லிக்கு அழைத்ததும் இன்றை நல்லாட்சி அரசாங்கத்தின் அழைப்பில் மோடி இலங்கை வந்ததும் இரு நாடுகளின் பின்னிப் பிணைந்த உறவுகளுக்கான அத்தாட்சியாகும். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற சர்வதேச வெசாக் மாநாட்டில் உரையாற்றிய பாரதப் பிரதமர் அர்தபுஷ்டியான கருத்துக்களையும், வரலாற்று நிகழ்வுகளையும் நினைவூட்டியிருந்தார்.

பெரும்பான்மையான பௌத்தர்கள் வாழும் இலங்கைக்கும், பௌத்தர்களின் புன்னியஸ்தலமான இந்தியாவிலுள்ள வாரணாசிக்கும் இடையில் விமான சேவை நடத்தப்படும் என கூறியிருந்தார். இந்தியா அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்புடன் நடத்தப்படும் இந்த விமான சேவையால் அதிக உச்ச அளவில் நன்மையடையப்போவது இலங்கையர்களே என்பது மறக்க முடியாது.

மேலும் இந்த வாரணாசிக்கான விமான சேவை மூலம் இந்திய இலங்கைக்கிடையிலான பண்டய கலாசார உறவுகள் மேலும் வலுவூட்டப்படுமென்பது திண்ணம். சமய விழாவில் பங்கெடுக்க வந்த பாரதப் பிரதமர் தமது தொப்பிள் கொடி உறவுகளான மலையகத் தமிழர்களையும் அவர்கள் இலங்கையின் அந்நியச் செலாவனிக்கு ஆற்றும் பங்களிப்பையும் தமிழர்களுக்கு அவர்களின் மொழியிலுள்ள பற்றுதல்களையும் பெருமையாகக் கூறியிருந்தார்.

ஆங்கிலத்தில் உரையாற்றி இந்தியப் பிரதமர் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்றும் ஆங்காங்கே இன்னும் பல தமிழ் சொற்களையும், உவமைத் தொடர்களையும் குறிப்பிட்டுப் பேசியது பெற்ற பிள்ளைகளை தாயானவள் தனது கருணை மொழியில் அழைப்பது போன்ற உணர்வையும், உறவையும் ஏற்படுத்தியது.

இலங்கையின் அந்நியச்செலாவனி வருமானத்திற்கு மலையகத் தமிழர்கள் ஆற்றும் பணியை புகழ்ந்து பேசிய போது அனைவரும் சபையிலிருந்து எழும்பி உணர்ச்சிபூர்வமான மரியாதையை செலுத்தினர். இந்த மரியாதை தனக்கு வழங்கப்பட்டாலும் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட சன்மானமாகவே இதைத் தான் கருதுவதாக மோடி குறிப்பிட்டமையும் எமது மண்ணுக்கு பெருமை சேர்க்கக்கூடியதாக இருந்தது.

மோடியின் இந்த வரலாற்று உரையை இலங்கையின் அனைத்து ஊடகங்களும் ஒலி, ஒளிபரப்புச் செய்திருந்தன. கிளங்கன் வைத்தியசாலையை திறந்து வைத்து உரையாற்றிய பாரதப் பிரதமர் இரு நாடுகளினதும் உறவுகள் நிலைக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தினார்.

எனவே, வரலாற்றுச் சிறப்புமிக்க பாரதப் பிரதமரின் இந்த விஜயத்திலிருந்து சமாதானத்தை விரும்பும் அரசியல் தலைவர்களும் இன ஐக்கியத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் சமூக அமைப்புக்கள், பொது நிறுவனங்கள், தேசப்பற்றாளர்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப செயற்பட வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பும் பிரார்த்தனையுமாகும்.

மேலும் உள்ளூர் சர்வதேச இராஜதந்திர நடைமுறைகள் ஊடாக பேரினவாதிகளை தோற்கடிப்பதற்கான வரலாற்றுச் சந்தர்ப்பமாக மோடியின் விஜயத்தை பயன்படுத்த வேண்டும். இதுவே நாட்டை நேசிக்கின்ற ஒவ்வொரு பிரஜைகளினதும் வரலாற்றுப் பொறுப்பென்பது எமது பணிவான கருத்தாகும். 


Add new comment

Or log in with...