கம்பளை சிறுவன் கடத்தல்; கைதான நால்வரும் இன்று நீதிமன்றில் | தினகரன்

கம்பளை சிறுவன் கடத்தல்; கைதான நால்வரும் இன்று நீதிமன்றில்

 
கடந்த புதன்கிழமை (03) கடத்தப்பட்ட கம்பளை, கங்கவட்ட வீதியைச் சேர்ந்த இரண்டு வயதும் 8 மாதங்களுமான,  முஹம்மத் சல்மான் என்ற சிறுவனின் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய கைதான நான்கு சந்தேகநபர்களிடமும் காத்தான்குடி பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இரு பெண்கள் மற்றும் குழந்தையின் உறவினரான 26 வயது இளைஞன், குறித்த இளைஞனின் கையடக்க தொலைபேசியிலிருந்து அழைப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும், 30 வயதான நபரொருவர் உட்பட கைதான நால்வரும் இன்று (07) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்ததர்.
 
குறித்த நால்வரில் மூவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர்களென தெரியவருகிறது.
 
கடத்தப்பட்ட சிறுவன் மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் கிராமத்தில் வைத்து நேற்று சனிக்கிழமை (06) காலை, உறுகமம் கிராமத்தில் உள்ள வீடொன்றில் வைத்து சுமார் 10.30 மணியளவில் அந்தச் சிறுவன் மீட்கப்பட்டுள்ளார். கம்பளையிலிருந்து வந்த விசேட பொலிஸ் குழுவே, அந்த சிறுவனை மீட்டுள்ளதுடன், சந்தேகத்தின்  பேரில், இரு பெண்கள் உட்பட நால்வர்  கைதுசெய்யப்பட்டனர்.
 
இதேவேளை, கடத்தப்பட்ட சிறுவனை விடுவிப்பதற்காக, 30 இலட்சம் ரூபாய் கப்பம் கோரப்பட்ட விவகாரம் தொடர்பில், அந்த இளைஞனிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
மாமா முறையான முஹம்மத் அசாம் (26) என்ற இளைஞனே, குறித்த சிறுவனை கடைசியாக அழைத்துச் சென்றுள்ளார் என, தாயார் செய்திருந்த  அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அவ்விளைஞன், பதுளை வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும், கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்து, வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
 
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உறவினரான இளைஞனிடம், குறித்த பெண், வீட்டிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் உள்ள, கடையில் பயணியாற்றும் தன்னுடைய கணவனுக்கு பகல் சாப்பாட்டை புதன்கிழமை (03) பிற்பகல் 2.00 - 2.30 இற்கும் இடைப்பட்ட நேரத்தில் கொடுத்து அனுப்பியுள்ளார்.
 
அதன்போது, வீட்டிலிருந்த சிறிய மகனும், அந்த இளைஞனுடன் செல்ல வேண்டுமென அடம்பிடித்துள்ளார்.
ஆகையால், அந்த இளைஞனுடன் சிறிய மகனையும் அந்தப் பெண் அனுப்பிவைத்துள்ளார்.
 
எனினும், குறிப்பிட்ட இளைஞன், தன்னுடைய கணவன் இருந்த இடத்துக்குச் செல்லாமல், மகனுடன் தலைமறைவாகிவிட்டார் என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, சிறுவனை விடுவிப்பதற்காக, அந்த இளைஞன் ரூபா 30 இலட்சத்தை கப்பமாக கோரினார் என்று, பொலிஸாரிடம் சிறுவனின் வீட்டார் முறையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
பொலிசாரினால் மீட்கப்பட்ட  சிறுவன் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, கம்பளைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
 
(மட்டக்களப்பு குறூப்  நிருபர் - ரீ.எல்.ஜவ்பர்கான்)
 

Add new comment

Or log in with...