பேரீச்சம்பழம் மீது ரூ 60 வரி மாத்திரமே விதிக்கப்பட்டுள்ளது | தினகரன்

பேரீச்சம்பழம் மீது ரூ 60 வரி மாத்திரமே விதிக்கப்பட்டுள்ளது

 
இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழம் மீது புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் இல்லை என, நிதி அமைச்சின் கீழுள்ள, வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கை திணைக்களம் அறிவித்துள்ளது. 
 
பேரீச்சம்பழம் மீது, கிலோ ஒன்றுக்கு ரூபா 60 எனும் விசேட வர்த்தக வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், நோன்பு காலமாகிய ரமழான் மாதம் நெருங்கும் சமயத்தில் இவ்வாறான வரியை விதிப்பதன் நோக்கம் என்ன என அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என, மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான சுனில் ஹந்துன்நெத்தி கடந்த பாராளுமன்ற அமர்வின் போது (03) தெரிவித்திருந்தார்.
 
இருப்பினும், பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, குறித்த வரியானது, புதிய வரி விதிப்பு எனும் பொருள்படும் வகையில் தெரிவித்திருந்த போதிலும், இது புதிய வரி விதிப்பன்று என, வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கை திணைக்களம் தெரிவித்துள்ளதோடு, இவ்வரி விதிப்பு (ரூ. 60),
கடந்த நவம்பர் 2015 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஒன்று என சுட்டிக்காட்டியுள்ளது.
 
கடந்த 2015 ஆம் ஆண்டு, இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழம் கிலோ ஒன்றுக்கு ரூபா 130 எனும் வரி விதிக்கப்பட்டிருந்தது, என முதலீட்டு மற்றும் வர்த்தக கொள்கை திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
 
இவ்வரி விதிப்பில் 
- சுங்க வரி - 15% 
- துறைமுக மற்றும் விமான அபிவிருத்தி வரி - 7.5% 
- செஸ் வரி - 25% 
- VAT - 11% 
- தேசத்தை கட்டியெழுப்பும் வரி - 2% என்பன உள்ளடக்கப்பட்டிருந்ததாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
 
ஆயினும், கடந்த 2015 நவம்பர் மாதம் 20 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அத்தியவசிய பொருட்களின் விலை குறைப்பு மற்றும் வரி குறைப்பை அடுத்து, பேரீச்சம்பழம் மீதான சகல வரிகளும் நீக்கப்பட்டதாகவும், அதற்கு பதிலாக, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பேரீச்சம்பழத்திற்கு ரூபா 60 எனும் விசேட வர்த்தக வரி மாத்திரம் விதிக்கப்பட்டதாகவும், வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கை திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
அந்த வகையில் இதற்கு முன்னர் விதிக்கப்பட்ட ரூபா 130 எனும் வரி, ரூபா 70 ஆக குறைக்கப்பட்டு, தற்போது அது ரூபா 60 ஆக விதிக்கப்பட்டு, பேரீச்சம்பழ இறக்குமதி செய்வதற்கு அவசியமான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக, வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கை திணைக்களம் தெரிவித்துள்ளது.
 

Add new comment

Or log in with...