வேலைநிறுத்த போராட்டம் அரசியல் தேவைக்கான ஆரம்பம் | தினகரன்

வேலைநிறுத்த போராட்டம் அரசியல் தேவைக்கான ஆரம்பம்

சைட்டம் தனியார் மருத்துவமனைக்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பொது வேலை நிறுத்தமொன்றுக்கு அழைப்பு விடுத்த போதிலும் நேற்றைய வேலை நிறுத்தம் காரணமாக எந்த வகையிலும் இயல்பு நிலை பாதிக்கப்படவில்லை. மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர்களும், ரயில்வே துறையைச் சேர்ந்த ஒரு சிறு குழுவினரும் மாத்திரமே நேற்றைய போராட்டத்தில் பங்கேற்றனர்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பின்புலத்திலிருந்து செயற்பட்ட அரசியல் சக்திகளின் எதிர்பார்ப்பு நாட்டின் இயல்பு நிலையை பாதிப்படையச் செய்து அரசு மீது மக்களை அதிருப்தியடையச் செய்வதாகும். அரசுக்கு எதிராக மக்களை அணி திரட்டும் ஒரு சதித்திட்டத்தின் ஆரம்பமாகவே அதனை நோக்க முடிகிறது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தை பயன்படுத்தி நாட்டில் பாரியதொரு வேலை நிறுத்தத்தை முன்னெடுப்பதற்கு வியூகம் அமைக்கும் வகையிலேயே நேற்றைய வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது. கல்வி, சுகாதாரம், போக்குவரத்துத்துறை சார்ந்த 30க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை இணைத்துக்கொண்டு இந்தப் போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும் கல்வித்துறை சார்ந்த தரப்புகள் இந்த அநீதிக்குத் துணைபோக முடியாதென பகிரங்கமாகவே அறிவித்துவிட்டனர். அதேசமயம் போக்குவரத்துத் துறைசார் சங்கங்களும் இந்த ஜனநாயக விரோத செயற்பாட்டை முற்றாக நிராகரித்துவிட்டனர். எனினும் ரயில்வேதுறை ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் இறங்கிய போதிலும் நேற்றைய தினம் போக்குவரத்து பாதிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை.

நாட்டில் வைத்தியசாலைகள் மட்டுமே நேற்றைய தினம் செயலிழந்து காணப்பட்டன. எனினும் முன்னெச்சரிக்கையாக நெவில் பெர்னாண்டோ தனியார் மருத்துவமனை 24 மணிநேர இலவச சேவையை அறிவித்ததால் மக்கள் பெரியளவில் பாதிக்கப்படவில்லை. உண்மையிலேயே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. காலையிலேயே திட்டம் பிசுபிசுப்பதை அவர்கள் அறிந்து கொண்டனர். இந்த வேலை நிறுத்தத்தால் நாட்டில் எவ்வித மான இயல்பு நிலையும் பாதிக்கப்படவில்லை.

சைட்டம் தனியார் பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் சமரசமான தீர்வு எட்டப்பட வேண்டுமென்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும். ஆனாலும் இவ்வாறான தனியார் உயர் கல்வி நிறுவனம் வருவது தவறானதெனக் கொள்ள முடியாது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தமது சுயநலனுக்காகவே இதனை எதிர்க்கின்றனர். நீதிமன்றம் கூட இவ்விடயத்தில் அந்தப் பல்கலைக்ககைத்தை நிராகரிக்கவில்லை. நீதிமன்றத்தைக் கூட அவமதிக்கும் விதத்தில் மருத்து அதிகாரிகள் சங்கத் தலைவர் செயற்பட்டு வருகிறார்.

அரசு மருத்துவ அதிகாரிகளுக்கோ, சங்கத்துக்கோ இதன் மூலம் பாதிப்புகள் இருக்குமானால் அவற்றை பகிரங்கமாக முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்தித்தீர்வு கண்டு கொள்ள வேண்டும். மருத்துவபீடத்துக்கு நடத்தப்படும் தேர்வின் போது போதிய புள்ளி கிடைக்காமல் பல்கலைக்கழக பிரவேசத்துக்கான வாய்ப்பை இழக்கும் மாணவர்கள் தமது உயர்கல்விக்காக மாற்று வழிகளைத் தேர்ந்தெடுப்பது தவறெனச் சொல்லமுடியாது. உள்நாட்டில் வாய்ப்பை இழக்கும் மாணவர்களே கடந்த காலத்தில் வெளிநாடுகளுக்குச் சென்று கற்று பட்டம் பெற்றுத் திரும்புகின்றனர். வசதிபடைத்தவர்களால் இது சாத்தியப்பட முடியம். வசதி குறைந்தவர்கள் என்ன செய்ய முடியும்?

அவ்வாறு சர்வதேசத்திலும், எமது பல்கலைக்கழக உயர் கல்வித் தரத்துக்கும் பொறுத்தமான உயர்கல்வி நிறுவனம் இங்கு உருவாகும் போது அதனை நிராகரிப்பது நேர்மையான செயற்பாடாக அமையாது. அன்று கடந்த ஆட்சியின் போது சைட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன. அன்று அரசு மருத்து அதிகாரிகள் சங்கம் வாய்மூடி மௌனியாகவே இருந்தனர்.

இன்று ஜனநாயக வரம்பு முறையை தவறாக பயன்படுத்த அரச மருத்தவ அதிகாரிகள் சங்கமும், சில மறைமுக அரசியல் சக்திகளும் செயற்பட்டு வருகின்றன. இத்தகைய அநீதியான முயற்சிகளுக்கு நாட்டு மக்கள் ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை. சைட்டம் விவகாரத்தை அரசியலாக்கி இலாபம் தேட முனைவோருக்கு அரசு ஒரு போதும் இடமளிக்காது என உறுதிபடத் தெரிவித்திருக்கின்து. இதனை உணர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் அரசுடன் பேசித் தீர்த்துக் கொள்ள முனைய வேண்டும்.

வேலை நிறுத்தம், எதிர்ப்புப் போராட்டம் என்பவற்றை முயற்சிகள் தோல்விகண்ட பின்னரே முன்னெடுக்கப்பட வேண்டும். பேச்சுக்களில் ஆர்வம் காட்டாமல் தமது பலத்தைக் காட்டவே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முனைப்புக்காட்டியுள்ளது. அவர்களோடு இணைந்துள்ள தொழிற் சங்கங்கள் கூட இப்போராட்டத்தை நிராகரித்துள்ளனர். இப்போராட்டத்தினால் அரசுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படப் போவதில்லை, அசெளகரியங்களை எதிர்கொள்பவர்கள் நாட்டு மக்களே ஆவர். மக்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டிய மருத்துவர்கள் இன்று அந்த மக்களின் உயிர்களுடன் விளையாடத் தொடங்கியுள்ளனர். இதனை எந்த வித்திலும் அனுமதிக்க முடியாது.

இந்தப் போராட்டம் முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டதென அரசு தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது. வெளிப்படையாக நோக்குகின்ற போதே இதனைப் புரிந்து கொள்ள முடிகிறது. பேச்சுக்களை நிராகரித்து அடாவடித் தனத்தின் மூலம் தாம் நினைத்ததைச் சாதிக்கும் முனைப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். யாருடையதோ அரசியல் கொந்தராத்தை இவர்கள் ஏற்றுக் கொண்டே போராட்டத்தில் இறங்கி இருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகின்றது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தவறான பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதாகவே உணர முடிகின்றது. “தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்” என்ற பிடிவாதப் போக்கில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அது ஆரோக்கியமானதல்ல.

இவர்கள் இந்தப் பாதையில் தொடர்ந்து பயணித்தால் போராட்டத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் எந்த வேளையிலும் வெடிக்கலாம். அவர்களுக்கு எதிராக மக்கள் சக்திகிளர்ந்தெழுகின்ற போது அவர்களால் தாக்குப் பிடிக்க முடியாது போகும் என்பதை முன்னெச்சரிக்கையாக சொல்லிவைக்க வேண்டியது எமது கடப்பாடாகும்.


Add new comment

Or log in with...