Thursday, April 18, 2024
Home » உலகில் செப்டெம்பர் வெப்பம் சாதனை அளவுக்கு அதிகரிப்பு

உலகில் செப்டெம்பர் வெப்பம் சாதனை அளவுக்கு அதிகரிப்பு

by Rizwan Segu Mohideen
October 8, 2023 12:34 pm 0 comment

கடந்த செப்டெம்பர் மாதத்தில் உலகின் சராசரி வெப்பநிலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பருவநிலைக் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதத்தில் உலக வளிமண்டலத்தின் சராசரி வெப்பநிலை 16.38 பாகை செல்சியஸாக (61.5 பாகை ஃபாரன்ஹீட்) பதிவாகியுள்ளது. இந்த வெப்பம், இதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்திர சராசரி வெப்பநிலையாகும்.

இதற்கு முன்னர் கடந்த 2020ஆம் ஆண்டில் பதிவானதுதான் அதிகபட்ச சராசரி வெப்பநிலையாக இருந்தது. தற்போது செப்டெம்பரில் பதிவாகியுள்ள புதிய உச்சம், முந்தைய உச்சத்தைவிட 0.5 பாகை செல்சியஸ் அதிகமாகும்.

இதுவும், இதுவரை இல்லாத மிக அதிக உயர்வாகும். இதற்கு முன்னர் வரை முந்தைய உச்சநிலை வெப்பத்தைவிட புதிய உச்சநிலை வெப்பம் 0.1 பாகைக்கு குறைவாகவே அதிகரித்து வந்தது.

தொழில் புரட்சிக்கு முந்தைய 1850–1900 காலகட்டத்தின் சராசரி மாதாந்திர வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில், கடந்த செப்டெம்பரில் பதிவாகியுள்ள சராசரி வெப்பநிலை 1.75 பாகை செல்சியஸ் அதிகமாகும்.

இதன் மூலம், பருவநிலை மாற்றம் என்பது இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பின் வரப்போவதில்லை இப்போதே வந்துவிட்டது என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய பருவநிலைக் கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.

பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற வருடாந்த ஐ.நா மாநாட்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், தொழில்புரட்சிக்கு முன்னர் இருந்ததை விட 1.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் உலகின் வெப்பநிலை உயராமல் கட்டுப்படுத்தவும், அதற்காக காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவை படிப்படியாகக் குறைக்கவும் இந்தியா உள்ளிட்ட 195 நாடுகள் ஒப்புக்கொண்டன.

இருந்தாலும், அதற்கான நடவடிக்கைகள் மிகத் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை செப்டெம்பர் மாதம் உச்சத்தைத் தொட்டுள்ள சராசரி வெப்பம் உணர்த்துவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT