மனிதன் வேறொரு கிரகத்தை தேடும் காலம் நெருங்குகிறது | தினகரன்

மனிதன் வேறொரு கிரகத்தை தேடும் காலம் நெருங்குகிறது

அடுத்த நூற்றாண்டுக்குள் மனிதர்கள் வேறொரு கிரகத்தைக் கண்டறிந்து அங்கே குடிபுக வேண்டியிருக்கும் எனச் சொல்லி அதிர்ச்சியைத் தந்திருக்கிறார் பிரபல அறிவியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங்.

பிபிசி தொலைக்காட்சிக்காக Expedition New Earth என்ற ஆவணத் தொடர் ஒன்றினை ஸ்டீஃபன் ஹாக்கிங் சமீபத்தில் படமாக்கியிருந்தார். அதில் மனிதர்கள் இந்தப் பூமியை விட்டு செல்ல வேண்டிய நேரம் நெருங்கி விட்டது என அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

நாளைய உலகம்' என்ற தலைப்பில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்றதொரு தொடரை பி.பி.சி வெளியிட்டிருந்தது. இதுவும் அதன் தொடர்ச்சிதான் என்கிறது பி.பி.சி.

உலகம் அழிவதைப் பற்றி ஏற்கனவே ஒரு முறை ஸ்டீஃபன் ஹாக்கிங் குறிப்பிட்டிருந்தார். அப்போது "1000 ஆண்டுகளில் பூமி மனிதர்களால் அழியும்" என்றார். இப்போது இந்த ஆவணப்படத்துக்காக உலகைச் சுற்றி வந்தவர், “அதற்கு 100 ஆண்டுகளே போதும். அதற்குள் வேறு கிரகம் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். ஆபத்து எந்த நேரமும் பூமியைத் தாக்கலாம்” என வருத்தத்துடன் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்குப் பல காரணங்களை அவர் பட்டியிலிட்டிருக்கிறார். அதில் முக்கியமான மூன்று விஷயங்கள் இவைதான். புவி வெப்பமயமாதல், அணு ஆயுதப் போர் மற்றும் சிறு கோள்களின் மோதல்.

ஸ்டீஃபன் ஹாக்கிங் குறிப்பிடும் மூன்று காரணங்களில் இரண்டினை நம்மால் இப்போதே உணர முடிகிறது. புவி வெப்பமடைதல் நாளுக்கு நாள் தீவிரமான பிரச்சினையாக மாறிக் கொண்டே வருகிறது. வரட்சியால் உலகம் முழுவதுமே தாகத்துடன் இருக்கிறது. காடுகள் வரட்சியால் பாதிக்கப்பட்டுக் வருகின்றன. மீதிக் காட்டை மனிதர்கள் அழித்துக் கொண்டே வருகிறார்கள். தண்ணீர் கிடைக்காமல் விலங்குகள் மடிவது பாரபட்சம் இல்லாமல் உலகம் முழுவதுமே பரவியிருக்கும் விஷயமாக இருக்கிறது.

வெயிலோ, மழையோ, பனியோ அனைத்துமே 'வரலாறு காணாத' பதிவுகளை தினம் தினம் படைத்துக் கொண்டே இருக்கின்றன. சென்ற ஆண்டு மழை பல இடங்களை நாசம் செய்ததையும் மறக்க முடியாது.

நடப்பதையெல்லாம் பார்க்கும் போது ஸ்டீவன் ஹாக்கிங்ஸ் சொல்வதை நம்பித்தான் ஆக வேண்டியிருக்கிறது. பூமியை விட்டு வெளியேற வேண்டிய சூழல் விரைவில் வந்து விடும். ஆனால், இந்த மனித இனத்தை ஏற்றுக் கொள்ளும் கிரகத்துக்கு எங்கு போவது? 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...